You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஃப்கன் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று தாலிபன் அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்நாட்டில் உள்ள ஷியா மையங்களை குறிவைத்து இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சமீப மாதங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த மையத்தின் முற்றத்தில் பல உடல்கள் கிடப்பதை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
"தபாயன் கலாசார மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததன் 38-ஆவது ஆண்டை நினைவுகூர ஒரு நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது," என்று ஆஃப்கன் உள்துறை அமைச்சத்தின் துணை செய்தித்தொடர்பாளர் நாசரேத் ரஹ்மானி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இது வரை டஜன் கணக்கான உடல்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பலரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், அந்த ஷியா அமைப்பின் ஊடகப் பிரிவான ஆஃப்கன் பிரஸ்-இன் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த மையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், பல மாணவர்கள் ஊடகக் குழுவின் உறுப்பினர்களுடன் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுபான்மை பிரிவான ஷியாவின் மசூதி ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 39 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த திங்களன்று, அந்நாட்டின் உளவு அமைப்பின் அலுவலக வளாகத்தின் அருகே நடத்தப்பட்ட ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்
- விதவை போல காட்சியளித்தார் குல்புஷன் ஜாதவின் தாய்: சுஷ்மா ஸ்வராஜ்
- 'களவாடிய பொழுதுகள்' வெளியீடு நீண்ட தாமதம் ஏன்?
- 'லவ் ஜிஹாத்' மற்றும் 'சிறப்புத் திருமணச் சட்டம்' இடையே ஊசலாடும் காதல் கதைகள்
- "நோட்டாவை ஜெயிக்க முடியாத கட்சியின் கடைசி புலம்பல்தான் இது"
- இஸ்ரேல்: ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்