அமெரிக்கா- ரஷ்யா விவகாரம்: ஃபிளின் செயல்கள் சட்டப்பூர்வமானது என்கிறார் டிரம்ப்

தமது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கேல் ஃபிளின்னின் செயல்கள் சட்டப்பூர்வமானது தான் என்றும் எஃப்.பி.ஐ-யிடம் பொய் கூறியதற்காகவே அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக ஃபிளின் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், எஃப்.பி.ஐ மற்றும் துணை ஜனாதிபதியிடம் பொய் கூறியதால் தான் அவரை பதவியில் இருந்து விலக்கியதாகவும், பதவியில் இருந்த போது அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது தான் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் "மறைப்பதற்கு ஏதுமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் நடத்தும் விசாரணைக்கு ஃபிளின் ஒத்துழைத்து வருகிறார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளையடுத்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கேல் ஃபிளின் கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :