ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பாகிஸ்தானில் லஷ்கர் தலைவர் விடுதலை

கடந்த 2008-ஆம் ஆண்டு 160க்கும் மேலானவர்கள் உயிரிழந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என இந்திய புலனாய்வு அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனரான ஹஃபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியில் நடமாடுவது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்ற பாகிஸ்தான் அரசின் வாதத்தை லாகூர் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

வெடித்து சிதறியதா நீர்மூழ்கிக் கப்பல்?

ஆழ்கடலில் காணாமல் போன அர்ஜென்டினா கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலான ஏ.ஆர்.ஏ சான் ஜுவானில் இருந்த 44 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் பெரும் அளவில் குறைந்துள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் வழக்கத்துக்கு மாறான, குறுகிய நேரம் மட்டும் நீடித்த, ஆனால் சக்திவாய்ந்த வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் ஒரு பெரிய ஒலி பதிவு செய்யப்பட்டதாக ஏற்கனவே அமெரிக்கா கூறியிருந்தது.

ஜிம்பாப்வே அதிபராகிறார் மனங்காக்வா

தொடர்ந்து 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபின் ராணுவத்தின் தலையீட்டால் ஜிம்பாப்வே அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியபின், அந்நாட்டின் அதிபராக முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனங்காக்வா இன்று பதவியேற்க உள்ளார்.

முகாபேவால் அவர் இந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டபின் நாட்டை விட்டு வெளியேறிய அவர், கடந்த புதனன்று நாடு திரும்பினார்.

ஏலம் விடப்பட்ட தொழிலாளர்களுக்கு தஞ்சம்

லிபியாவில் கொத்தடிமைகள் போன்ற சூழலில் வாழும் பல்வேறு ஆஃப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 புலம்பெயர் தொழிலார்களுக்கு தஞ்சம் கொடுக்கத் தயாராக இருப்பதாக ருவாண்டா அரசு அறிவித்துள்ளது.

அவர்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஏலம் விடப்படும் காணொளி கடந்த வாரம் சி.என்.என் தொலைக்காட்சியில் வெளியானதைத் தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :