கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: கலிஃபோர்னியாவில் நால்வர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஊரகப் பகுதி ஒன்றில் பள்ளி உள்பட பல இடங்களில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ரேஞ்சோ டெஹாமா என்ற அந்த ஊரகக் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை காலை இத்துப்பாக்கிச்சூடு தொடங்கியது. ஒரு குடும்பச் சண்டையாக வீட்டுக்குள் சுடத் தொடங்கிய அந்த துப்பாக்கிதாரி பிறகு அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று சுட்டார் என்கின்றனர் அதிகாரிகள்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர் சுட்டார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியுள்ளார் டெஹாமா கவுண்டியின் உதவி ஷெரீஃப் ஃபில் ஜான்ஸ்டன். பல மாணவர்கள் அந்தப் பள்ளியில் இருந்து மருத்துவரீதியாக வெளியேற்றப்பட்டதாகவும், அவர் கூறுகிறார்.

ஒரு மாணவர் சுடப்பட்டதாகவும், மற்றொரு மாணவர் அங்குள்ள சாலையில் டிரக் மோதி காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில் சட்ட அமலாக்கப் படையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். சுமார் 100 சட்ட அமலாக்கப் படையினர் அந்த ஊரகக் குடியிருப்பில் முகாமிட்டுள்ளனர்.

சம்பவ இடங்களில் ஒன்றில் இருந்து அரைத்தானியங்கி துப்பாக்கி ஒன்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என்கிறது போலீஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :