You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது': டிரம்ப்
தொடர்ச்சியான வர்த்தக முறைகேடுகளை அமெரிக்கா இனிமேலும் பொறுத்துக்கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
வியட்நாமில் நடக்கும் 'அபெக்' எனப்படும் ஆசியா - பசிஃபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நலன்களையே தான் எப்போதும் முதன்மையாக வைப்பேன் என்றும் அபெக் நாடுகளும் அதற்குப் பதிலாக நியாயமான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.
தனது உரையில், சர்வதேச வர்த்தகத்திற்கான சட்டங்களை வகுக்கும், உலக வர்த்தக அமைப்பை விமர்சிக்கும் வகையில் பேசிய டிரம்ப், "உறுப்பு நாடுகள் அனைத்தும் விதிமுறைகளை மதிக்காவிட்டால் இந்த அமைப்பு முறையாக செயல்பட முடியாது" என்று கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் உள்ள தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளதாகவும், பிற நாடுகளுக்கு வர்த்தகம் கட்டணங்களைக் குறைத்துள்ளதாகவும் பேசிய டிரம்ப், "அதை மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு செய்யவில்லை. அது பல அமெரிக்கர்களைப் பாதித்துள்ளது," என்றார்.
ஆனால், அதற்காக அபெக் நாடுகளை குறை கூறாத டிரம்ப், தமக்கு முன்னால் இருந்த அமெரிக்க அரசுகளே இந்தப் பாதிப்புகளுக்குக் காரணம் என்று அவர் விமர்சித்தார்.
சீனாவின் எதிர் நிலைபாடு
இதற்கு நேர் எதிராக பேசியுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், "உலகமயமாக்கல் மாற்றமுடியாதது" என்றும் , பல்வேறு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டிரம்ப் உரையாற்றியதற்குப் பின், அபெக் உச்சிமாநாட்டில் பேசிய ஷி ஜின்பிங், "அதிக வெளிப்படையான, அதிக சமநிலையுடைய, அனைவருக்கும் அதிகமான பலனளிக்கக்கூடிய வகையில் தடையில்லா வர்த்தகம் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
"பல நாடுகள் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதை நாம் ஆதரித்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளால் வளரும் நாடுகளைப் பயனடையச் செய்ய வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
ஐந்து ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப் முன்னதாக சீனா மற்றும் ஜப்பான் சென்றிருந்தார்.
அபெக் அமைப்பில் உள்ள, பசிஃபிக் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் 21 நாடுகள், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 60 சதவிகிதத்தை தங்கள் வசம் கொண்டுள்ளன.
அமெரிக்காவின் பொருளாதார நலன்களை பாதிப்பதாக கூறி, அதிபராகப் பதவியேற்றபின் 'டிரான்ஸ் பசிஃபிக் பார்ட்னர்ஷிப்' எனப்படும், 12 அபெக் நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்க - சீன வர்த்தக நிலவரம் எப்படி?
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்த சர்வதேச வர்த்தகத்தின் கூட்டு மதிப்பு 64,800 கோடி அமெரிக்க டாலராக இருந்துது. ஆனால், அமெரிக்காவுக்கு 31,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருந்ததால், இரு நாட்டு வர்த்தகம் சீனாவுக்கு ஆதரவான நிலையிலே உள்ளது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை சீனா திருடிக்கொள்வதாகவும், தனது நாணயமான யுவானின் மதிப்பைக் குறைத்து, சர்வதேச சந்தையில் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முயன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, நாணயத்தின் மூலம் பொருளாதார சூழ்ச்சி செய்யும் நாடு என்று முன்பு சீனாவை விமர்சனம் செய்து வந்த டிரம்ப், தற்போது அத்தகைய விமர்சனங்களை நிறுத்திக்கொண்டார்.
டிரம்ப் சீனா சென்றிருந்தபோது, வங்கி, காப்பீடு, நிதி உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வரம்புகளை மேற்கொண்டு குறைக்க சீனா ஒப்புக்கொண்டது.
இரு நாடுகள் இடையே சுமார் 25,000 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின
முன்னதாக, ஜப்பான் பயணத்தின் போதும் டிரம்ப் அந்நாட்டை விமர்சித்தார். "சமீப ஆண்டுகளில் இருநாட்டு வர்த்தகத்தில் ஜப்பானே வென்று வருகிறது," என்று அவர் கூறினார்.
அமெரிக்க அரசின் தகவலின்படி ஜப்பானுடன் 6,900 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை கொண்டுள்ளது அமெரிக்கா.
அடுத்ததாக வியட்நாம் தலைநகர் செல்லவுள்ள டிரம்ப், தனது பயணத்தின் இறுதி கட்டமாக பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார். நவம்பர் 13 அன்று அவரது ஆசிய பயணம் அந்நாட்டில் நிறைவடைகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்