You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி இளவரசரின் கூற்று மிகவும் ஆபத்தானது: இரான் வெளியுறவு அமைச்சர்
ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான 'நேரடி ராணுவத் தாக்குதலில்' இரான் ஈடுபட்டுள்ளது என்று சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார்.
இதை ஒரு 'போரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கருதலாம்' என்று சல்மான் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சனிடம் தொலைபேசியில் உரையாடியபோது கூறியதாக சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் 'பாலிஸ்டிக்' ஏவுகணை ஒன்று, சௌதி தலைநகர் ரியாத் அருகே, கடந்த சனிக்கிழமையன்று வானில் தடுத்து அழிக்கப்பட்டது.
ஏமன் அரசை ஆதரிக்கும் சௌதி தலைமையிலான கூட்டணியை கடந்த 2015 முதல் எதிர்த்து போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதாக கூறப்படுவதை இரான் மறுத்துள்ளது.
சௌதி இளவரசரின் கூற்று மிகவும் 'ஆபத்தானது' என்று இரான் வெளியுறவு அமைச்சர் மொகமத் ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.
ஏமன் எல்லைக்குள் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவிலும், ரியாத் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும், மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி 'பர்கான் ஹெச்-2' வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிளர்ச்சியாளர்கள் ஏவியதாக அவர்கள் சார்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சௌதி காவல் படைகள் அதை நடு வானில் தடுத்தாலும், அதிலிருந்து சிதறிய சில துண்டுகள் விமான நிலையத்தினுள் விழுந்தன.
பயணிகள் விமான நிலையம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது வெளிப்படையான போர் குற்றம் என்று மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
அரபு பிராந்தியத்தில் தங்கள் வலிமையை நிலை நாட்டிக் கொள்வதற்காக இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் பிராந்திய 'பனிப் போரில்' ஈடுபட்டுள்ளன.
இரானின் செல்வாக்கைக் குறைப்பதற்காக, சௌதி தலைமையிலான கூட்டணி, ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த மார்ச் 2015-இல் தலையிட்டபின், வான்வழித் தாக்குதல் மற்றும் சண்டைகளால் 49,960 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 8,670 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களில் 60% பேர் பொதுமக்கள் என்றும் ஐ.நா அவை தெரிவித்துள்ளது.
ஏமனில் போரால் பாதிக்கப்பட்ட 2.07 கோடி மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கியுள்ளனர். போர் அங்கு உலகின் மிகப் பெரிய உணவுப் பாதுகாப்பு அவசர நிலையை உருவாகியுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள் போரால் அழிக்கப்பட்டதால் அங்கு பரவியுள்ள காலரா நோயால் 9,02,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,191 பேர் இறந்துள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்