அமெரிக்கா: பெருமூளை வாதமுள்ள 10 வயது மெக்சிகோ சிறுமி விடுவிப்பு

பட மூலாதாரம், Family handout
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தனது பெருமூளை வாத நோய்க்கு சிகிச்சை எடுத்ததற்காக, தடுப்புக்கு காவலில் வைக்கப்பட்டிருந்த 10 வயதாகும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சிறுமி அவரது குடும்பத்தினர் வசம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரோசா மரியா ஹெர்னான்டஸ் எனும் அச்சிறுமி விடுவிக்கப்பட்டதை அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் எனும் மனித உரிமைகள் அமைப்பும், டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் உறுப்பினர் ஜோக்குயின் கேஸ்ட்ரோவும் உறுதிபடுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள், குறிப்பாக மெக்சிகோ நாட்டவர்கள், மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெக்சிகோ உடனான எல்லையில் நீளமான சுவர் ஒன்று எழுப்பப்படும் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்காக, அவசர ஊர்தியில் அச்சிறுமியை டெக்சாஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது, இருநாட்டு எல்லையில் அமைந்திருக்கும் கார்பஸ் கிறிஸ்டி சோதனைச் சாவடியில் அமெரிக்க காவல் துறையினரால் அவர் தடுத்து நிறுத்ததப்பட்டார்.
பின்னர் அந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அச்சிறுமிக்கு காவலர்களின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுமியை மாற்றுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட அதிகாரிகள் தங்களை வற்புறுத்தியதாகவும், அதற்க்கு தங்கள் மறுத்துவிட்டதாகவும் அச்சிறுமியின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
பின்னர் சான் ஆண்டானியோ நகரில் உள்ள இளம் சட்டவிரோதக் குடியேறிகள் தடுப்பு மையத்தில் அவர் வைக்கப்பட்டார்.
அமெரிக்க அரசு அச்சிறுமிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைக் கைவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
"அச்சிறுமிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மூடுவதற்கு தாம் முயலப்போவதாகவும், டிரம்ப் நிர்வாகத்தின் இரக்கமற்ற செயல்களுக்கு எதிராக தொடந்து செயல்படவேண்டும்," என்றும் ஜோக்குயின் கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.
ரோசா மரியாவால் நன்றாக உடல் அசைவுகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கும் பெருமூளை வாத நோய்க்கு தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடனேயே தனது மக்களை டெக்சாஸ் அழைத்து வந்ததாக, அவரது தாயார் ஃபெலிப்பா டி லா கிரஸ் நியூயார்க் டைம்ஸ் இதழிடம் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













