You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
'ஷி'யின் 'அசாதாரண வளர்ச்சி'யை வாழ்த்திய டிரம்ப்
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தமது அதிகாரத்தை ஷி ஜின்பிங் வலுப்படுத்திக்கொண்டதை அடுத்து அவரை தொலைபேசி மூலம் அழைத்து அவரது அசாதாரண வளர்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இதை டிவிட்டரில் தெரிவித்த டிரம்ப் ஷியுடன் வடகொரியா மற்றும் வணிகம் தொடர்பாக உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச கூலிச் சட்டம் நிறைவேற்றும் கத்தார்
முதல் முறையாக குறைந்தபட்ச கூலிச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களை நிறைவேற்றவுள்ளது கத்தார்.
2022 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை கத்தார் நடத்தவுள்ள நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அது எப்படி நடத்துகிறது என்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
தவிர, வெளிநாட்டுத் தொழிலாளர்களை மோசமாக நடத்தக்கூடாது என்று ஐ.நா. அமைப்பான சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐ.எல்.ஓ.) கத்தாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஊழல் விசாரணையில் இருந்து தப்பிய பிரேசில் அதிபர்
பிரேசில் நாட்டுக் காங்கிரசின் (நாடாளுமன்றம்) கீழ் அவையில் அதிகமான வாக்குகள் பெற்றதன் மூலம் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் மிச்செல் டெமர் தம்மீதான ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதில் இருந்து தப்பித்தார்.
கீழ் அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினால்தான் அவர் மீது விசாரணை நடத்த முடியும்.
சர்ச்சைக்குரிய மறு தேர்தலை இன்று நடத்துக்கிறது கென்யா
கென்யாவின் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கான மறுதேர்தல் வியாழக்கிழமை திட்டமிட்டபடி நடக்கிறது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அதிபர் ஆவதற்காகப் போட்டியிட்ட உஹுரு கென்யாட்டா ஆகஸ்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்தல் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. அந்நாட்டில் பதற்றங்கள் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அமைதியாக இருக்குமாறும், வாக்களிக்குமாறும் கென்யர்களுக்கு கென்யாட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் ரைலா ஒடிங்கா தமது ஆதரவாளர்களைத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்