டிரம்ப் என்னை மேலும் அழ வைத்தார்: இறந்துபோன அமெரிக்க சிப்பாயின் மனைவி

ராணுவ வீரரான தனது கணவர், பணியின்போது நைஜரில் இறந்தபிறகு, தனக்கு இரங்கல் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கணவரின் பெயர்கூட நினைவில் இல்லை என்று அமெரிக்க சிப்பாயின் மனைவி கோபத்துடன் கூறியுள்ளார்

அதிபர் டிரம்பின் தொலைபேசி, தனது அழுகையை மேலும் அதிகப்படுத்தியதாக மைஷியா ஜான்சன் தெரிவிக்கிறார்.

இந்த மாதத் தொடக்கத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நைஜரில் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க படையினரில் ஒருவர் லா டேவிட் ஜான்சன். அவரது மனைவி மைஷியா ஜான்சன்.

ஜனாதிபதி டிரம்ப்பின் இரங்கல் அழைப்பு வந்தபோது, இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரோடு அங்கிருந்து டிரம்பின் உரையாடலை கேட்ட ஜனநாயகக் கட்சியின் ஃப்ரெடரிகா வில்சன் டிரப்பை குற்றம்சாட்டியது தலைப்புச் செய்திகளானது.

"அதிபர் இரங்கல் தெரிவிப்பதற்காக எனக்கு தொலைபேசியில் அழைத்திருந்தாலும், அது என் காயத்தை அதிகப்படுத்தியது. டிரம்ப்பின் குரலின் தொனியும், இரங்கலை அவர் தெரிவித்த விதமும் என்னை கோபப்படுத்தி, அதிகமாக அழவைத்தது" என்கிறார் மைஷியா ஜான்சன்.

எனது கணவரின் அறிக்கை அவர் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் பெயருக்கு பதிலாக லா டேவிட் என்று அதிபர் டிரம்ப் உச்சரித்தார். அவர் என் கணவரின் பெயரை நினைவுபடுத்திக்கொள்ள தடுமாறியது தெரிந்தது என்று வருத்தப்படுகிறார் மைஷியா.

"நாட்டிற்காக போராடி என் கணவர் நாட்டிற்காக தனது உயிரையே அர்பணிக்கும்போது, அவருடைய பெயரை உங்களால் ஏன் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது?" என்று கேள்வி எழுப்புகிறார் திருமதி ஜான்சன்.

இதற்கு டிரம்பின் பதில் என்ன?

திருமதி ஜான்சனுடனான தனது உரையாடல் மிகவும் மரியாதையுடன் இருந்ததாகவும், எந்தவித தயக்கமும் இல்லாமல் அவரது கணவரின் பெயரை தான் உச்சரித்ததாகவும் திங்களன்று தனது டிவிட்டர் செய்தியில் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :