எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை

The moon

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாம் பின்பற்றுகிறது

புனித ரமலான் மாதத்தின் இறுதி நாள், ` ஈத் அல் ஃபித்ர் ` என்ற முக்கியமான விடுமுறை நாளாக இஸ்லாமியர்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்த நாளில் ரமலான் நோன்பு இருந்த அனைத்து இஸ்லாமியர்களும் சிறந்த உடைகளை உடுத்தி, உணவு விருந்துகளை நடத்துவார்கள் . ஆனால் உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த நாள் என்றைக்கு என்று முடிவு செய்யப்படுவது எத்தகைய சிக்கலான விஷயமாகவே இருக்கிறது என்பதை அஹ்மன் கவாஜா மற்றும் அமிர் ராவஷ் ஆகியோர் விளக்குகிறார்கள்.

நிலவின் சக்தி:

இஸ்லாமிய புனித மாதமான ரமலான், தனது இறுதி நாட்களை நெருங்கும் போது, தங்களது ஈத் கொண்டாட்டங்களை துவங்கும் ஒரு குறீயிடாக, தெளிவான வானத்தை உலகம் முழுவதும் உள்ள 1.8 பில்லியன் இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாம் பின்பற்றுகிறது. இதன் ஒன்பதாம் மாதத்தில் ரமலான் துவங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்த சந்திர காலண்டரில் வரும் ரமலான் மாதம் , முந்தைய சூரிய காலண்டர் ஆண்டில் வந்ததை விட 11 நாட்கள் முன்னதாக வருகின்றது.

நிலவு நாள்காட்டியை பயன்படுத்துவது இஸ்லாமியர்களின் குறிப்பிடத்தக்க ஒரு தனித்துவமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாடும் அனுபவங்களில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

ரமலான் மாதத்தின் போது, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிக்கிறார்கள். ஒரு வேளை இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாள்காட்டியை அடிப்படையாகக் கொண்டிருந்தால், உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அதிக பகல் நேரத்தை கொண்ட கோடை காலத்திலும் ,மற்ற பகுதிகளில் வாழும் மக்கள் குறைந்த பகல் நேரத்தை கொண்ட குளிர் காலத்திலும் ரமலான் மாதத்தை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

A woman shops for head scarves ahead of the Muslim holiday of Eid al-Fitr in Jakarta

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜகார்தாவில் முஸ்லிம்களின் ஈத்-அல்-ஃபித்ர் பண்டிக்கைக்காக, தலையில் கட்டும் துணிகளை வாங்கும் ஒரு பெண்

ஆனால் நிலவு நாள்காட்டியை பின்பற்றுவதால், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்நாளில் 33 ஆண்டுகள் வெவ்வேறு கால நிலைகளில் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.

குழப்பம்:

நிலவு நாள்காட்டியின் பத்தாவது மாதமான ஷாவ்வாலின் முதல் நாள் ஈத் பண்டிகை வருகிறது.

ஆனால் ஈத் பண்டிகை துவங்கும் நாள் குறித்து, இஸ்லாம் மதத்திற்குள் விவாதங்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள், வானில் நிலவை பார்ப்பதற்கு பதிலாக, நிலவு தெரிவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் என செய்திகளில் கூறப்படும் தகவல்களை நம்புகிறார்கள்.

சிலர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிலவு நாள்காட்டியை பின்பற்றியும் , வேறு சிலர் கோள்களின் நிலையைப் பார்த்தும், புது நிலவின் வருகையை அறிவிக்கின்றனர். இன்னும் சிலர் வானில் பிறை நிலவை பார்த்த பின்னரே புது மாதத்தை குறிக்கின்றனர்.

உலகம் முழுவதும் ஈத் நாள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேறுபாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு, இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமான, சுன்னி இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த, சவுதி அரேபியாவில் ,கண்களால் நிலவை பார்த்து உறுதி செய்யப்பட்டு, அரசு வெளியிடும் அறிவிப்பை மக்கள் சார்ந்திருக்கின்றனர்.

A Malaysian Islamic authority official performs the sighting of the new moon to determine the Eid al-Fitr in Kuala Lumpur on July 16, 2015

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில முஸ்லிம்கள் , ஈத்-அல்-ஃபித்ரை முடிவு செய்யும் புதிய பிறையைக் காண டெலஸ்கோப்பை பயன்படுத்துகிறார்கள்.

ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறைகளிலும் ஈத் நாள் குறிக்கப்படுகிறது. ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டானியின் அறிவிப்பையும் அப்பிரிவு மக்களும், சிறுபான்மையினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக்களின் அறிவிப்பையும் பின்பற்றுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறையாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண்டாடினர்.

இதே சமயத்தில் மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் துருக்கியில், வானியல் கணக்கீடுகளை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப்படுகிறது.

ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய மதத்தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :