You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் மாலத்தீவு
இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவான மாலத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது.
கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, ஏற்கனவே செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கத்தாருடனான தங்கள் ராஜீய உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன.
மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது.
கத்தாருடனான ராஜீய உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கத்தார் மற்றும் அந்த பிராந்தியத்தில் முக்கிய நாடாக விளங்கும் செளதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை சரி சமமாக வைத்துக் கொள்ள மாலத்தீவு விரும்புகிறது என்பது தெரிய வருகிறது.
செளதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளை போல அல்லாமல் கத்தார் விமானங்களுக்கான தனது வான்பரப்பை மாலத்தீவு மூடவில்லை; மேலும் கத்தார் மக்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிடவும் இல்லை.
மாலத்தீவின் பொருளாதாரம் அதன் சுற்றுலாத்துறையை சார்ந்துள்ளது; அதன் உணவகங்கள் அதிக வருவாயை ஈட்டி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு மட்டும் கத்தார் நாட்டைச் சேர்ந்த 4,000 பேர் மாலத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை புரிந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரின் முதலீடுகள்:
மாலத்தீவில், கத்தார் அதிக முதலீடுகளையும் செய்துள்ளது.
1984ஆம் ஆண்டிலிருந்து கத்தார் மற்றும் மாலத்தீவிற்கான ராஜிய உறவுகள் தொடர்ந்து வருவதால் மாலத்தீவில் பல பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்கங்களை கட்டமைப்பதற்கு கத்தார் நிதியுதவி அளித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் வந்த சுனாமியிலிருந்து மீள, 5 லட்சம் அமெரிக்க டாலர்களை கத்தார் மாலத்தீவிற்கு வழங்கியது.
மேலும் இந்த வருடம் தனது ஆண்டு முதலீட்டு கூட்டத்தை கத்தாரில் நடத்த மாலத்தீவு திட்டமிட்டுள்ளது.
முதலீட்டு கூட்டத்தை நடத்த கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், மாலத்தீவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
இரு நாடுகளுக்கும் மத்தியில் வர்த்தக தொடர்புகள் ஏற்கனவே நன்றாக உள்ள நிலையில், கத்தாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊரிடோ சர்வதேச தொலைதொடர்பு நிறுவனம் மாலத்தீவுகளில் தனது கிளையை திறக்கவுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் செளதி அரேபியா தாக்கம்
கத்தாருடனான தனது ராஜிய உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற செளதி அரேபியாவின் முடிவை மாலத்தீவு ஆதரிப்பதற்கு காரணம் செளதி அரேபியாவுடன் அதற்குள்ள நீண்டகால வலிமை வாய்ந்த ராஜீய , மத மற்றும் பொருளாதார உறவுகள் ஆகும்.
ராஜீய விவகாரங்களில் செளதி அரேபியாவின் நிலைப்பாடை மாலத்தீவு ஆதரிப்பது இது முதல் முறையல்ல.
2016ஆம் ஆண்டு, பிராந்தியத்தில் தனது எதிரியான இரானுடனான தனது ராஜீய உறவுகளை செளதி அரேபியா கடினமாக்கிய போது மாலத்தீவும் இரானுடனான தனது உறவுகளை முறித்துக் கொண்டது.
2015 ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக செளதி அரேபியாவால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ராணுவ கூட்டணியின் நிறுவன உறுப்பினராகவும் மாலத்தீவு உள்ளது.
பயங்கரவாதம், கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக தெரிந்ததால் மாலத்தீவைச் சேர்ந்த 100 பேர் இராக் மற்றும் சிரியாவில் ஜிகாதிகளுக்கு எதிராக போரிட்டு கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க: கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்
தங்களது இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்க போடப்பட்ட ஒப்பந்தம் மூலமாக சுன்னி மக்கள் அதிகமாக இருக்கும் இந்த இரு நாடுகளும் தங்கள் மத ஒத்துழைப்பை வலிமையாக்கி கொள்வதாக ஒப்புக் கொண்டன.
அந்த ஒப்பந்தத்தின்படி மாலத்தீவு தனது இஸ்லாமிய வரி சேகரிப்பு, இஸ்லாம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிடுவது, மசூதிகளை வேகமாக கட்டமைப்பது, மற்றும் இமாம்களுக்கு பயிற்சியளிப்பது ஆகியவற்றில் மாலத்தீவிற்கு உதவ செளதி அரேபியா உறுதியளித்துள்ளது.
மாலத்தீவில், "இதற்கு முன் இல்லாத அளவில் செளதி அரேபியாவின் தாக்கத்தை இது காட்டுவதாக" மாலத்தீவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் மாலத்தீவின் கட்டமைப்புகளுக்கு செளதி அரேபியா நிதியுதவி வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாலத்தீவில் உள்ள வெலானா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையத்தை கட்டுவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவிற்கு, செளதி அரேபியா கடனாகக் கொடுத்தது
கத்தாருடனான ராஜிய உறவுகளை துண்டிக்கும் முடிவில் எந்த நாட்டின் தலையீடும் இல்லை என்றும் அதே சமயம் செளதி அரேபியாவுடன் தங்களுக்கு இருக்கும் ஆழமான உறவை வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் மாலத்தீவு தெரிவித்துள்ளது.
கத்தார் தொடர்பான பிற செய்திகள்:
இவைகளையும் நீங்கள் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்