புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.

பசுமை தகனம்

அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.

தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.

பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.

சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை

அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.

அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.

சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.

முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?

ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.

கரைத்து கரையேற்றும் முறை

இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.

உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.

பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.

அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.

மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.

விரைவாக உருக்குலையும்

புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.

ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.

மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.

சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.

வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.

வெள்ளை சாம்பல்

மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.

மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.

இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இடப்பிரச்சினை

சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.

இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.

புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செலவு?

இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்