You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாலிபன்களால் விரட்டப்பட்ட ஆப்கனின் முன்னாள் தீவிரவாதக் குழு தலைவன் நாடு திரும்பினார்
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய தீவிரவாதக் குழுவுக்குத் தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் தீவிரவாதத் தலைவர் குல்புதின் ஹெக்மதயார், அரசாங்கத்தோடு அமைதி உடன்பாடு ஏற்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஆப்கன் தலைநகருக்குத் திரும்பியிருக்கிறார்.
ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாதக் குழுவுக்குத் தலைமையேற்று நடத்திய அவர், எண்ணிலடங்கா அட்டூழியங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
அரசாங்கத்துடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, வன்முறையைக் கைவிட்டு, ஆப்கன் அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆஃப்கானிஸ்தானுக்கு இது ஒரு முன்னேற்றமான நடவடிக்கை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், இது அரசாங்கத்தில் இன்னும் பிளவுகளை ஏற்படுத்தும் என சிலர் கருதுகின்றநர்.
ஆப்கன் ராணுவ ஹெலிகாப்டர் பாதுகாப்புடன், ஜலாலாபாத்தில் இருந்து ஹெக்மத்யார் காபூல் திரும்பினார்.
அதிபர் மாளிகையில் நடந்த வரவேற்பு விழாவில் பேசிய அதிபர் அஷ்ரஃப் கனி, அமைதி வழியை ஏற்றுக் கொண்டதற்காக ஹெக்மத்யாருக்கு நன்றி தெரிவித்தார்.
"போரை முடிவுக்குக் கொண்டு வருவோம். சகோதரர்களாக ஒன்றாக வாழ்வோம். பிறகு, அன்னியப் படையினரை வெளியேறுமாறு கூறுவோம்" என்று அந்த நிகழ்ச்சியல் பேசும்போது ஹெக்மத்யார் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை, பாரம்பரியமிக்க மசூதி ஒன்றில் நடைபெறும் பிரார்த்தனைக்கு அவர் தலைமையேற்பார்.
முன்னாள் பிரதமரான அவர், ஆப்கனின் நவீன சரித்திரத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவர்.
சோவியத் யூனியனுக்கு எதிராக செயல்பட்டவர்
கடந்த 1996-ஆம் ஆண்டு, தாலிபன்களால், காபூலில் இருந்த வெளியேற்றப்பட்ட ஹெக்மத்யார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறார்.
சோவியத் யூனியனுக்கு எதிராக செயல்பட்ட ஏழு முக்கிய குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார் அவர்.1980-களில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பை எதிர்த்து பெருமளவிலான முஜாஹிதீன்கள் போராடி வந்தனர்.
குறிப்பாக, 1990-களில் காபூல் நகரைக் கைப்பற்ற பிற முஜாஹிதீன் குழுக்களுடன் ஹெஸ்-இ-இஸ்லாமி நடத்திய கடுமையான சண்டையில் இவரது பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில், பெருமளவிலான அழிகளுக்கும் மரணங்களுக்கும் அந்த அமைப்பின் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
அதனால்தான், ஆப்கன் மக்கள் பெருமளவில் தாலிபன்களை வரவேற்கக் காரணமாக அமைந்தது.
தாலிபன் அதிகாரத்துக்கு வந்ததும் ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் காபூலை விட்டு தப்பியோடினார்கள்.