You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: எடை 9800 கிலோ, நீளம் 30 அடி
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய, மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது.
இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்" என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற விமானத் தாக்குதலுக்கான மாபெரும் வெடிகுண்டுதான் (Massive Ordnance Air Blast Bomb - MOAB) ஒரு மோதலில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ள மிகப் பெரிய அணு ஆயுததமில்லாத வெடிகுண்டு என தெரிவிக்கப்படுகிறது.
நன்கார்ஹார் மாகாணத்தில் இந்த வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தவறுதலாக 18 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதை பென்டகன் ஒப்பு கொண்ட சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நிலை கொண்டிருப்பதாக கூட்டணி படைப்பிரிவு ஒன்று தவறுதலாக அடையாளம் காட்டியதால், ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவால் ஆதரவு அளிக்கப்படுகின்ற சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளை சேர்ந்த 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் பலர் சாவு
நன்கார்ஹாரில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளின் படையினர் ஒருவர் கடந்த வாரம் இறந்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய 10 ஆயிரம் கிலோ எடையுடைய குண்டு வீசப்பட்டுள்ளது.
அச்சின் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை ஜிபியு-43/பி குண்டு வீசப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது 9 மீட்டர் (30 அடி) நீளமுடைய வெடிகுண்டாகும்.
2003 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்ட இந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு முன்னதாக வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"அந்த பகுதியில் இருக்கின்ற அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஆப்கன் படைப்பரிவுகளை எளிதாக குறிவைத்து தாக்குவதை எளிதாக்குகின்ற, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதைகளையும், குகைகளையும் கொண்ட அமைப்பு ஒன்றை குறிவைத்து தாக்கியுள்ளோம்" என்று வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலர் ஷோன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வீசப்பட்டபோது, பொது மக்கள் கொல்லப்படுவதையும், பக்க சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்ட இடம் பெரும்பாலும் மலைப்பாங்கான மக்கள் குறைவாகவே வாழுகின்ற இடமாக இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பக்கத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் சப்தம் கேட்கும் அளவுக்கு இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலின் விளைவுகளை அமெரிக்கா இன்னும் வெளியிடாத நிலையில், இஸ்லாமிய அரசு தீவிரவாத மூத்த தலைவர் ஒருவரின் சகோதரர் உள்பட, அதிக தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனை "இன்னொரு வெற்றிகரமான தாக்குதல்" என்று டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்
மேலதிக தகவல்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்