You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் தாக்குதல்தாரியின் மனைவி கண்டனம்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காவல் துறையினர் மூலம் ரோஹே ஹிடாரா விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமையன்று காரை ஏற்றி மூன்று பாதசாரிகளைக் கொன்ற மசூத் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார்.
உயிரிழந்த நான்கு பேரின் மரணம் பற்றிய விசாரணை புதன்கிழமையன்று தொடங்குகிறது.
இந்த கடினமான நேரத்தில் தன் குடும்பத்தினருக்கு தனிமை தேவைப்படுவதாவும், அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம் என்றும் ஹிடாரா கேட்டுக்கொண்டார்.
"இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக காலித் மசூதின் தாய் ஜெனெட் அஜோ கண்ணீர் சிந்துவதாக கூறியதை அடுத்து, காலித் மசூதின் மனைவியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
52 வயதான மசூதுக்கு மூன்று குழந்தைகளும், முன்னாள் மனைவி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடகைக்கார் ஒன்றை ஓட்டி வந்த மசூத், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிய பிறகு, நாடாளுமன்றத்திற்கு வெளியே 48 வயதான கீத் பால்மர் என்ற போலீஸ்காரரை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
லண்டனில் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த 44 வயதான அய்ஷா ஃப்ரடே, அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப்பயணி 54 வயது குர்த் கோஸ்ரீன், தெற்கு லண்டனை சேர்ந்த, துப்புரவு பணியாளராக இருந்து ஓய்வுபெற்ற 75 வயது லெஸ்லி ரோடெஸ் ஆகியவர்கள் காலீத் மசூதால் உயிரிழந்தவர்கள்.
மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஐ.எஸ் தொடர்பு இல்லை
உயிரிழந்தவர்கள் முறைப்படி அடையாளம் காணபட்டுவிட்டதாக கூறும் பெருநகர காவல்துறையினர், மரணம் தொடர்பான விசாரணை தொடங்கவிருப்பதாகவும், இது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் மரண விசாரணை நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறிய நிலையில், ஜிகாத் விருப்பம் இந்த தாக்குதலில் இருந்தது தெளிவாகத் தெரிந்தாலும், எந்த ஒரு அமைப்போ அல்லது அல்-கய்தாவுடன் இந்த்த் தாக்குதலுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை என்று காவல்துறை துணை ஆணையர் நெய்ல் பாசு கூறுகிறார்.
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதான சந்தேகத்தில், பர்மிங்காமைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
விசாரணை நடத்தப்பட்ட ஒன்பது பேர் குற்றச்சாட்டு ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். மான்செஸ்டெரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் வசம் மார்ச் இறுதி வரை வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பு மசூத் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசித்துவந்ததாகவும், அதற்கு முன் லுடன், க்ராவ்லி, ரய், ஈஸ்ட்போர்ன் ஆகிய இடங்களில் வசித்ததாகவும் நம்பப்படுகிறது.
கெண்டில் பிறந்த அட்ரின் எல்ம்ஸ் என்ற காலீத் மசூத், தனது தாய் மறுமணம் செய்துகொண்ட பிறகு, புதுத்தந்தையின் குடும்பப் பெயரான அஜாவ் என்ற பெயரை பயன்படுத்தினார். பின்னர் இஸ்லாமியராக மாறிய பிறகு, மசூத் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
கர்மர்தென்ஷைரின் ட்ரெலெக்கில் இருந்து செவ்வாய்க்கிழமையன்று பேசிய மசூதின் தாயார் ஜெந்த் அஜாவ், தாக்குதல் செய்தியை கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட்டு உணர்விழந்துவிட்டதாக கூறினார்.
"மசூதின் கொடூரமான தாக்குதலை நான் மன்னிக்கவில்லை, தாக்குதல் நடத்த அவனைத் தூண்டிய நம்பிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை என்பதை நான் தெளிவாக்க விரும்பிகிறேன்" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்