You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவின்போது பெண் கூக்குரல் எழுப்பாததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை
பாலியல் வல்லுறவு சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்த சகபணியாளரிடம், வேண்டாம் என முடிந்தவரை சொல்லிப் பார்த்தும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறுவது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரமாகக் கருத முடியாது என கடந்த மாதத்தில் டூரினில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மீது தற்போது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அன்னாகிரேஸியா களாபிரியா கூறுகையில், ''தனக்கு நடந்த கொடுமையால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ஒரு பெண்ணின் எதிர்வினைக்கு நிச்சயம் தண்டனையளிக்க முடியாது'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, நீதித்துறை அமைச்சர் ஆண்ட்ரியா ஆர்லாண்டோ தனது அமைச்சக ஆய்வாளர்களை இந்த வழக்கு குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், 2011-ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை அக்குழு ஆய்வு செய்து வருவதாகவும் அன்சா செய்தி முகமை தெரிவித்துள்ளது.
டூரின் நகரில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ள பாதிக்கப்பட்ட பெண், இவ்வழக்கின் பிரதிவாதி தன்னை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அவருக்கு ஒத்துழைக்க மறுத்தால் தனக்கு அவர் பணி வழங்க மறுத்ததாகவும் தெரிவித்ததாக கோரியாரே டெலா சேரா என்ற இத்தாலிய மொழியில் பதிப்பாகும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு ஏன் அதிகப்படியான எதிர்ப்பை காட்டவில்லை என்று நீதிமன்றத்தில் கேட்கப்பட்டதற்கு அப்பெண் பதிலளிக்கையில், ''சில சமயங்களில் 'இல்லை' என்று சொல்வதே போதுமானதாகும். வழக்கமாக, நான் கூடுதலான பலத்தையும், வன்முறையையும் என் எதிர்ப்பை காட்ட பிரயோகம் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னைத் தாக்கியவர் மிகவும் பலம் வாய்ந்தவர் என்பதால் நான் அதிர்ச்சியால் உறைந்து போய்விட்டேன்'' என்று கூறினார்.
இப்பெண் சிறுவயதில் அவரது தந்தையால் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட பிரதிவாதி, ஆனால், இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் அது நடந்ததாக தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்