You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பலதார மணம் தீவிரவாதத்தை வளர்க்கிறது'
நைஜீரியா எங்கிலும் பலதார மணம் பரவலாக ஏற்கப்படுகின்ற போதிலும், அந்த நாட்டைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் தலைவர் ஒருவர் சில நிலைமைகளில் அது தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
ஒரு மனைவிக்கு மேலதிகமாக மணம் செய்து பராமரிக்க முடியாத ஆண்களே இந்த மறுசீரமைப்புக்கான தூண்டுதலாக அமைந்துள்ளனர்.
போக்கோ ஹராம் தொடர்பு..
வறிய மக்கள் மத்தியில் காணப்படும் பலதார மண முறை, போக்ஹோ ஹராம் இஸ்லாமிய தீவிரவாத குழுவின் வளர்ச்சியுடன் தொடர்புபட்டிருப்பதாக கானோவுக்கான மன்னரான முஹமட் சனுஸி கூறுகிறார். வடக்கு- கிழக்கு நைஜீரியாவில் பெரும் வன்செயலுக்கு இந்தக் குழு முக்கிய காரணமாகும்.
ஆனால், இந்தக் குழு நைஜீரியாவின் வட பகுதி முழுவதும் வெற்றிகரமாக ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறது.
வடபகுதி எங்கும் ஒரு மனைவியையே வைத்து பராமரிக்க முடியாத நிலையில், 4 மனைவிகளை திருமணம் செய்யும் ஆண்கள் பெரும் பொருளாதார சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் என்கிறார் இந்த மன்னர்.
இப்படியான ஆண்கள் 20 பேர் வரை பிள்ளைகளைப் பெற, அவை, கல்வி எதுவும் இல்லாமல் தெருவில் விடப்படுவதாகவும், இறுதியில் அவர்கள் பயங்கரவாதக் குழுக்களில் சென்று சேர்வதாகவும் அவர் கூறுகிறார்.
அந்தப்பகுதிக்கு சென்று வரும் எவரும் இந்த துணிச்சலான கூற்றை நிராகரிப்பது கடினம்.
பல வடக்கு நைஜீரிய நகரங்களில் இப்படியான பிள்ளைகள் கார்களை சுற்றிவளைத்து, பிச்சை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
படித்த நைஜீரியர்கள் மத்தியில் பலதார மண வழக்கம் குறைவு. ஆனால், கிராமங்களில் குறிப்பாக வடக்கில் முஸ்லிம்கள் மத்தியில் இந்த பழக்கம் காணப்படுகின்றது.
தனது ஆய்வுக்கான தகவல்களை மன்னர் எங்கு பெற்றார் என்பது தெளிவில்லை. ஆனால், பலதார மண வழக்கத்தை கொண்ட சமூகங்கள், போர், பாலியல் வல்லுறவு மற்றும் திருட்டு போன்றவற்றில் இலகுவாக அகப்பட்டுவிடுவதாக 2012ஆம் ஆண்டுக்கான ரோயல் சொஸைட்டியின் விஞ்ஞான அறிக்கை கூறுகின்றது.
இந்த மன்னருக்கு 4 மனைவிகள் இருக்கிறார்கள். ஒருவர் 4 மனைவிகளை பராமரிக்கக்கூடிய வசதியையும், அவர்கள் அனைவரையும் ஒரே அந்தஸ்தில் வைத்திருக்கும் திறனையும் கொண்டிருந்தால் பலதார மணம் தவறில்லை என்றும் மன்னர் கூறுகிறார்.