இந்தியக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் தலாய் லாமா - சீனா கண்டனம்

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் திபெத்திய பெளத்த மதத்தலைவரும் நாடு கடத்தப்பட்ட தலைவருமான தலாய் லாமா ஆகியோர் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சீனா கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

கடந்த ஞாயிறன்று, குழந்தைகள் உரிமை தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தலாய் லாமா மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்கள் சிலர் பிரணாப் முகர்ஜியால் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அரசாங்கம் சீனாவின் கடுமையான எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலாய் லாமாவை மேடையை பகிர்ந்து கொள்ள அனுமதித்துள்ளது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.