You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன மலேசிய விமானம் கடலில் கட்டுப்பாடற்ற வகையில் இறங்கியிருக்கலாம் - அறிக்கை
காணாமல் போன மலேசிய விமானமான எம்ஹெச்370, மிக விரைவாகக் கட்டுப்பாடற்ற வகையில், இந்திய பெருங்கடலுக்குள் இறங்கியிருக்கலாம் என்று ஒரு புதிய தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 மார்ச் மாதத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குப் பறந்து கொண்டிருந்த போது, 239 பயணிகளுடன் சென்ற இந்த போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது.
ஒரு மிகவும் விரிவான தேடலுக்குப் பிறகும், இந்த விமானத்தின் மத்தியப் பகுதிகளின் தடயங்கள் எதுவும் தென்படவில்லை.
ஆனால், தற்போது மீட்கப்பட்ட இரண்டு விமான இறக்கை மடல்களை ஆய்வு செய்ததில், இந்த விமானம் இந்திய பெருங்கடலுக்குள் இறங்கிய போது அவை தரையிறங்கும் நிலையில் இருக்கவில்லை என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வாரியம் (ஏ.டி.எஸ்.பி) தெரிவித்துள்ளது.
இது குறித்த செயற்கைக்கோள் புள்ளிவிவரங்களும் இந்த விமானம் ஒரு உயர் மற்றும் அதிகரிக்கும் விகிதத்தில் கடலுக்குள் இறங்கியதாக இந்த புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏ.டி.எஸ்.பி-யின் தேடுதல் பிரிவு இயக்குனரான பீட்டர் ஃபோலி இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ''இதன் மூலம் இந்த விமானம் கட்டுப்பாடற்ற வகையில் கீழே இறங்கியதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள் காணாமல் போன இந்த விமானத்தின் தேடுதல் குறித்த அடுத்த கட்டம் தொடர்பாக விவாதிக்க கான்பெராவில் கூடியிருக்கும் தருணத்தில் இந்த புதிய அறிக்கை வெளி வந்துள்ளது.
ஏறக்குறைய 1, 20,000 சதுர கிலோ மீட்டர் கடல்படுகை தூரத்தை சீனா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் நிபுணர்கள் ஏற்கனவே தேடி முடித்துள்ளனர்.
ஒரு புதிய கண்டுபிடிப்பு எதுவும் கிடைத்தால் தவிர, இந்த விமானத் தேடல் முயற்சி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவுக்கு வரவுள்ளது.
இது வரை மீட்கப்பட்ட 20 சிதை பொருள்களில், ஏழு மட்டும் தான் காணாமல் போன விமானத்தின் பகுதிகள் என்று நிச்சயமாகவோ அல்லது அதிகபட்சம் சாத்தியம் கொண்டது என்றோ இனம் காணப்பட்டுள்ளன.
எம்ஹெச்370 விமானத்தின் பிரத்யேக எண்களைக் கொண்ட மீட்கப்பட்ட ஒரு இறக்கை மடல் குறித்து இந்த புதிய அறிக்கை தெரிவிக்கையில், இந்த மடல் விமான இறக்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தில், அது உள்ளிழுத்த பாணியில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, தரையிறங்கத் தயாராக இல்லாமல் விமானம் இருந்ததை இது காட்டுதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், காணாமல் போன விமானம் குறித்த தகவல்களை முழுமையாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்த ஏ.டி.எஸ்.பி. வாரியம் தயக்கத்துடன் இருப்பதாக ஏ.டி.எஸ்.பி-யின் தேடுதல் பிரிவு இயக்குனரான பீட்டர் ஃபோலி தெரிவித்துள்ளார்.
''உங்களது தகவல்கள் எப்போதும் 100 சதவீதம் உறுதியாக இருக்க இயலாது'' என்று தங்களின் தயக்கத்துக்கு காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.