இயக்குநர் மணிரத்னம்: இருவர் படத்தில் பட்ட சிரமம் முதல் 'பொன்னியின் செல்வன்' வரை

மணிரத்னம்

பட மூலாதாரம், Maniratnam/facebook

படக்குறிப்பு, மணிரத்னம்
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவில் 'பகல்நிலவு' திரைப்படத்தில் ஆரம்பித்து 'மெளனராகம்', 'இருவர்', 'ரோஜா' என பல முக்கிய திரைப்படங்களை கொடுத்த 'நாயகன்' இயக்குநர் மணிரத்தினம் வியாழக்கிழமை தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமாவுக்குள் அவரது பயணம் ஆரம்பித்த கதையில் இருந்து 'பொன்னியின் செல்வன்' வரை அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

• மதுரையை பிறப்பிடமாக கொண்ட மணிரத்தினம் குடும்பத்தில் இரண்டாவது குழந்தை. இவரது தந்தை கோபால ரத்னம் பட விநியோகஸ்தராக இருந்தார். இவரது மாமா 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி ஒரு படத் தயாரிப்பாளர். இப்படி குடும்பத்தில் பலரும் சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருந்ததால் இவருக்கும் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஆனால், சிறுவயதிலேயே படங்கள் பார்ப்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என கூறி படங்கள் பார்க்கவே தனது பெற்றோர்கள் அனுமதித்தது இல்லை என ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் மணிரத்தினம்.

• 'சினிமாவில் நீங்கள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து விட்டால், அது உங்களை விடாது. அப்படியான ஒரு உலகத்தை விரும்புகிறேன்' என்பார்.

• சினிமாவில் ஒரு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பூஜை போட்டுத் தொடங்குவது வழக்கம். ஆனால், அப்படியான பூஜைகள், நல்ல நேரம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர் இயக்குநர் மணிரத்தினம். 'உழைப்பு மட்டுமே எப்பொழுதும் நிரந்தரம்' என்பார்.

• ஒவ்வொரு இயக்குநரின் படங்களிலும் சில விஷயங்களை பார்வையாளர்கள் தவறாமல் எதிர் பார்க்கலாம். அந்த வகையில் மணிரத்தினம் படங்கள் என்றாலே மழையும் ரயிலும் தவறாது இடம் பெறுவதை பலரும் கவனித்து இருப்பார்கள். அதுபோல, அவருக்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அநேகமாக அவரது பெரும்பாலான படங்களில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கும்.

• தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குநர்களாக மணிரத்தினம் அடிக்கடி குறிப்பிடுவது பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மகேந்திரன். இதில் பாரதிராஜா இயக்கியதில் '16 வயதினிலே' திரைப்படமும், பாலச்சந்தர் இயக்கத்தில் 'அபூர்வ ராகங்கள்', மகேந்திரன் இயக்கத்தில் வெளியான படங்களில் 'உதிரிபூக்கள்', 'முள்ளும் மலரும்' மிக பிடித்தவை என்று குறிப்பிடுவார்.

• தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மணிரத்தினம் தான் இயக்கியதிலேயே மிக பிடித்ததாக குறிப்பிடும் திரைப்படம் 'இருவர்'. பிடித்ததாக இருந்தாலும் அந்த படம், தான் இயக்கியதிலேயே மிகவும் சிரமமான ஒன்றும் கூட என்பார்.

• தனது முதல் தமிழ் படமான 'பகல் நிலவு' தொடங்கி 'இதயக் கோவில்', 'மெளனராகம்' என 'தளபதி' படம் வரையிலுமே மணிரத்தினம் படத்திற்கு இளையராஜா மட்டுமே இசையமைத்து வந்தார். இளையராஜா- மணிரத்தினம் என்று இருந்த வெற்றி கூட்டணி 'ரோஜா' படத்திற்கு பின்பே ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்தினம் என்ற வெற்றி கூட்டணியாக மாறியது. 'ரோஜா' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானது குறித்து ரஹ்மான் ஒரு பேட்டியில் பகிர்ந்த போது, 'மணிரத்தினம் படங்களின் தீவிரமான ரசிகன் தான் என்றும், அவர் படத்தில் அறிமுகமாவது முற்றிலும் எதிர்பாராதது என்றும் கூறினார். அதுநாள் வரை தமிழ் சினிமாவுக்கென்று இசையில் ஒரு வகை இருந்தது. அதை எல்லாம் இவர் கொடுத்த சுதந்திரத்தின் மூலம் முதல் படத்தில் உடைத்து புதிய முயற்சிகளை செய்ய முடிந்தது" என்பார்.

இருவர்

பட மூலாதாரம், Maniratnam/facebook

படக்குறிப்பு, சர்ச்சையை உண்டாக்கிய இருவர்.

• 'ரோஜா' படத்தில் ஆரம்பித்து இப்போது வெளிவர இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படம் வரை மணிரத்தினம் - ரஹ்மான் கூட்டணி 17 படங்களை முடித்திருக்கிறது. இதில் 'திருடா திருடா' படத்தின் வீரபாண்டி கோட்டையிலே பாடலும், 'கடல்' படத்தின் பாடல்களும் இசையமைப்புக்கு நீண்ட காலம் எடுத்து கொண்டவை என்று குறிப்பிடுவார் ரஹ்மான்.

• மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் 1987-ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் டைம்ஸ் நாளிதழால் 'All Time 100 Movies' பட்டியலில் இடம் பெற்றது. இந்த கதை மும்பை தாதா வரதராஜ முதலியார் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி 35 வருடங்களை நிறைவு செய்தது.

• மணிரத்தினம் படங்கள் என்றாலே அதில் பாடல்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு உரியதாக இருக்கும். 'படங்களில் பாடல்களை எப்படி இசையமைப்பாளர்களிடம் இருந்து வாங்குவீர்கள். பெரும்பாலும் அனைத்து பாடல்களும் வெற்றி பெறுகின்றனவே?' என்று கேட்டால் 'அது இசையமைப்பாளர்களின் திறமை. எனக்கு பெரிதாக சங்கீதம் பற்றிய அறிவு கிடையாது. சூழலை விளக்கி பாடல் கேட்பேன். இசையமைப்பாளர் தரும் பாடல்களை கேட்டால் ஒரு ரசிகனாக நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே சொல்ல முடியும்' என்பார்.

• காதல், உறவுச் சிக்கல், தேசபக்தி என பல கதைக் களங்களை கையாண்டிருந்தாலும் மணிரத்தினத்தின் கனவு, கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்குவது. அந்த கனவை நிறைவேற்றி இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார். ரஹ்மான் இசையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நடிகர்கள் கார்த்தி, ஐஸ்வர்யாராய், விக்ரம், 'ஜெயம்' ரவி என பலரும் நடித்திருக்கும் படத்தில் அவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. படத்தின் முதல் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

காணொளிக் குறிப்பு, சென்னையில் சொந்த வீடு வாங்க இது சரியான தருணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: