You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் - எப்படி தெரியுமா?
- எழுதியவர், பிபிசி முண்டோ
- பதவி, பிபிசி
பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது.
இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலத்தடி நீரை மனிதர்கள் அதிகமாக உறிஞ்சி எடுப்பது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக அந்த ஆய்வு கூறியிருக்கிறது.
இதற்கு ஒருவகையில் இந்தியர்களும் காரணமா?
இது எப்படி நிகழ்கிறது?
நிலத்தடியிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர், காற்றில் ஆவியாகிறது, அல்லது ஆறுகளில் சென்று கலக்கிறது. “ஆவி நீராகியோ, அல்லது ஆறுகளில் கலந்த நீரோ, இறுதியில் கடலில்தான் சென்று கலக்கிறது,” என்கிறார் தென்கிரொயாவின் சோல் தெசியப் பல்கலைகழகத்தின் புவி அறிவியல் பேராசிரியரான கி-வெயான் சோ. இவர்தான் இந்த அறிக்கையின் தலைமை ஆய்வாளர்.
இதன் மூலம், நீர் “நிலத்தடியிலிருந்து கடல்களுக்கு இடம்பெயர்கிறது,” என்கிறார்.
பூமியின் சுழற்சியில் நீரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று 2016ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2021ல், மற்றொரு ஆய்வு, பூமி அச்சின் சாய்கோணத்தினால், துருவங்களில் இருக்கும் பனி உருகி கடல்களில் கலப்பதைப்பற்றி ஆராய்ந்தது.
ஆனால், இதுநாள்வரை, நிலத்தடி நீர் எப்படி பூமி சுழல்வதை மாற்றும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தியர்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதுதான் காரணமா?
பூமிச் சுழற்சியின் மையப்புள்ளி தான் அதன் அச்சு. இது ‘துருவ நகர்வு’ (polar motion) எனும் நிகழ்வின் போது மாறுகிறது. அதாவது, பூமியின் மேற்பரப்பினை வைத்துப் பர்க்கும்போது, அச்சின் நிலை மாறுகிறது.
Polar Drift எனப்படும் இயற்கை நிகழ்வின்போது இது தானாக நடக்கிறது. பூமியின் திரள் பரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் இது நிகழும்.
ஆனால் 1990களிலிருந்து இது மனித செயல்பாடுகளால் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
பூமியில் நீர் பரவியிருக்கும் முறையில் மாற்றம் ஏற்படுவதால் நிகழும் மாற்றம் இது என்கின்றனர் விஞ்ஞானிகள். சுழலும் ஒரு பம்பரத்தின் மீது ஒரு கனமான பொருளை வைப்பதுபோலத்தான்.
நீர் இடம்மாற மாற, பூமியின் சுழற்சியும் சற்று மாறுபடும் என்கிறனர் விஞ்ஞானிகள்.
“உண்மையில், பூமி சுழலும் அச்சு வெகுவாக மாறுகிறது,” என்கிறார் சோ.
“எங்கள் ஆய்வின்படி, காலநிலை சார்ந்த காரணங்களில், நிலத்தடி நீர் மறுபகிர்வு தான் பூமியின் துருவ நகர்வுக்கு மிகப்பெரிய காரணம்,” என்கிறார்.
இந்த ஆய்வி படி, பூமத்திய ரேகை (mid-latitudes) மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதுதான் சுழல் அச்சின் கோணத்தை மாற்றுவதில் அதிகப் பங்காற்றுகிறது.
அதிகமான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டிருப்பது வடமேற்கு அமெரிக்காவிலும், வடமேற்கு இந்தியாவிலும் தான், என இந்த ஆய்வு கூறுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்தால் இதைச் சரிசெய்யலாம், ஆனால் அதற்கு பல பத்தாண்டுகளுக்கு நிலத்தடி நீர் எடுப்பதைக் குறைக்க வேண்டும் என்கிறார் சோ.
ஆனால் பூமியின் நீர் மறுபகிர்வு செய்யப்படுவது காலநிலையில் மாற்றங்கள் கொண்டுவராது என்கிறார் சோ.
பூமி சுழலும் அச்சு ஓராண்டிற்கு பல மீட்டர்கள் நகர்வது இயற்கைதான். இதனால், மனித செயல்பாடுகளால், இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நகர்ந்திருப்பது காலநிலையை பாதிக்காது என்கிறார் சோ.
‘ஒரு தாயாக நான் பயப்படுகிறேன்’
பூமியின் சுழல் அச்சுக் கோணத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு இதுவரை கண்டறியப்படாத காரணத்தைக் கண்டுபிடித்ததில் பெருமைப்படுவதாகச் சொல்கிறார் சோ.
ஆனால், “பூமியின் வாசியாகவும் என் குழந்தைகளுக்குத் தாயாகவும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது கடல்மட்டம் உயர்வதற்கு மற்றுமொரு காரணம் என்பதை அறிந்து கவலைப்படுகிறேன்,” என்கிறார்.
கடும் வறட்சிக்காலங்கள், நிலத்தடி நீர் மேலும் உறிஞ்சப்படுவதற்கு வழிவகுக்கும். இது கடல்மட்டம் உயர்வதற்கும் வழிவகுக்கும்.
“நம்மில் பலர் கடலோர நகரங்களில் வசிக்கிறோம். எனது தலைமுறையில் இது பெரிய பிரச்னையில்லை. ஆனால் எனது குழந்தைகளின் தலைமுறையில், கடல் மட்டம் உயர்வது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்,” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்