உடைந்த அதிமுக–பாஜக கூட்டணி இப்படித்தான் மீண்டும் மலர்ந்தது

காணொளிக் குறிப்பு, அமித் ஷா
உடைந்த அதிமுக–பாஜக கூட்டணி இப்படித்தான் மீண்டும் மலர்ந்தது

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவானதாக அமித்ஷா அறிவித்திருக்கிறார்.

அடுத்து வரவிருக்கும் தேர்தலை இந்திய அளவில் மோதி தலைமையிலும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இருகட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்ததாக கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக கூறிவந்தனர். இந்நிலையில்தான் தற்போது இருகட்சிகளும் கூட்டணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

கடந்த 2019 மக்களவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக சந்தித்தது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலிலும் இருகட்சிகளும் கூட்டணியை தொடர்ந்தன.

இந்நிலையில், அதிமுகவின் மறைந்த தலைவரான ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். பதிலும் அதிமுக தரப்பில் ஜெயக்குமார் போன்றோர் அண்ணாமலையை விமர்சித்தனர். இந்த விவகாரம் கூட்டணிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் தேதி அதிமுக அறிவித்தது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை என்று கூறிவந்தார்.

அடுத்து நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எனினும் ஆளும் திமுக கூட்டணி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில்தான் தற்போது இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன.

கடந்த மார்ச் 26ஆம் தேதி டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி கே பழனிசாமி சந்தித்தப்போதே கூட்டணிக்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காரணம் இந்த சந்திப்புக்கு பின்னர், அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், '2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று

பதிவிட்டார்.

அப்போது பிபிசியிடம் பேசிய மூத்த செய்தியாளர் பிரியன் , 'அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டால், அண்ணாமலை தலைவராகத் தொடர்வது கடினம் என்பதோடு, அது அவருக்கும் தெரியும்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவுக்கான புதிய மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. மீண்டும் தான் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்று அண்ணாமலை கூறிவந்தார். மாநில தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை நடந்தது.

இதற்கு மத்தியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு நேற்று வந்திருந்தார்.

அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டும் வேட்புமனு பெறப்பட்டதாக தெரிவித்தார். இதனால் நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில தலைவராவது உறுதியாகியுள்ளது.

அண்ணாமலை குறித்து தனது பதிவில் , ' தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அண்ணாமலை செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் கட்சியின் திட்டங்களை கிராமம், கிராமமாக கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்புரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பிறகுதான் அதிமுக- பாஜக கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி யுள்ளது. சென்னையில் இன்று அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா , தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி அமைப்பதாகவும் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என்றூம் பேசியிருக்கிறார்.

ஓபிஎஸ், டிடிவி போன்றோர் கூட்டணியில் இடம்பெறக்கூடுமா என்ற கேள்விக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு