‘தடை, தணிக்கை, மிரட்டல்’- இரான் பற்றி செய்தி வெளியிடுவது எவ்வளவு கடினம்?
இரானில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, தகவல்கள் சுதந்திரமாக வெளிவருவதில்லை. ஒன்று, பாதி தகவல்கள் வருகின்றன அல்லது தாமதப்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் முற்றிலும் முடக்கப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் இரான் தொடர்ந்து கீழ் மட்டத்திலேயே இடம் பிடிக்கிறது. 2024-இல், 'Reporters Without Borders' என்ற அமைப்பு இரானை மிக தீவிரமான பிரிவில் வகைப்படுத்தியது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இரானை 176-வது இடத்தில் வரிசைப்படுத்தியதுடன், 2025-இல் நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் குறிப்பிட்டது.
அனைத்து உள்நாட்டு ஒளிபரப்புகளும் அரசுக்குச் சொந்தமான இரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதற்கான தலைவர் இரான் அதி உயர் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகிறார்.
சுயாதீன செய்தித்தாள்கள் உள்ளன, ஆனால் கடுமையான தணிக்கையின் கீழ் அவை செயல்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊடகங்கள் மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சோதனைக்கு உட்பட்ட விசாக்களின் கீழ் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன; அணுகல் தடைசெய்யப்பட்டதாலும், இணையதளங்கள் முடக்கப்பட்டதாலும், செயற்கைக்கோள் சிக்னல்கள் அடிக்கடி தடைபடுவதாலும் பலர் வெளியே இருந்து செய்திகளை வெளியிடுகிறார்கள்.
பிபிசி பாரசீக வலைத்தளம் 2006 முதல் இரானில் முடக்கப்பட்டுள்ளது.
இரான் குறித்து செய்தி வெளியிடுவதில் இந்த சவால் மட்டுமல்ல, தனிப்பட்ட ஆபத்துகளும் உள்ளன.
துன்புறுத்தல், சட்ட நடைமுறையற்ற கைது, பயணத் தடைகள், சில சந்தர்ப்பங்களில் கசையடி தண்டனை, ஆன்லைன் கொலை மிரட்டல்களை பத்திரிகையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டத்தை தொடர்ந்து, டஜன் கணக்கான பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் பெண்கள்.
இந்தத் துன்புறுத்தல் பெரும்பாலும் எல்லைகளை தாண்டியும் நடக்கிறது. மார்ச் 2024 இல், இரான் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் லண்டனில் கத்தியால் குத்தப்பட்டார். இதை நாடுகடந்த அடக்குமுறையின் வடிவம் என ஐநா கண்டித்தது.
ஜூன் 2025-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இரான் பிபிசி பாரசீக பத்திரிகையாளர்கள் மற்றும் இரானில் உள்ள அவர்களது குடும்பத்தினரை துன்புறுத்தி மிரட்டி வருகிறது, இதில் லண்டனில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு எதிரான கொலை மிரட்டல்கள், இரானில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்குதல், அத்துடன் ஆன்லைன் மற்றும் பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் ஆகியவையும் அடங்கும் என பிபிசி குறிப்பிட்டிருந்தது.
பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்கள் தடுக்கப்பட்டிருப்பதாலோ அல்லது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலோ, இரானில் இருந்து தகவல்கள் வெளிவர இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் இரான் கட்டுப்படுத்துகிறது. அதிகாரிகள் தொடர்ந்து மொபைல் டேட்டாவைத் தடுக்கிறார்கள், தளங்களை முடக்குகிறார்கள். போராட்டங்களின் போது கிட்டத்தட்ட மொத்தமாகவே முடக்குகிறார்கள்.
முழு விவரம் காணொளியில்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



