You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நேபாளத்தில் நடந்த அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த வாரம் நடந்த போராட்டங்களின் போது அரசு கவிழ்ந்தது. Gen Z என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் இந்தப் போராட்டத்தை அடுத்து, பிரதமராக பதவி வகித்த கே.பி. சர்மா ஓலி பதவி விலகினார். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய போராட்டம் ஊழல் எதிர்ப்பாகவும் மாறியது. ஒருகட்டத்தில் பெரும் வன்முறை வெடித்து பிரதமர் இல்லம், நாடாளுமன்ற கட்டடங்கள் உட்பட பல முக்கிய இடங்கள் தாக்கப்பட்டன. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவி ஏற்றுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், நேபாளத்தின் தற்போதைய நிலைமை இந்தியாவுக்கு அதன் அண்டை நாடுகளுக்கும் உணர்த்துவது என்ன?
இது பற்றி பிபிசியிடம் பேசிய முன்னாள் இந்திய தூதர் மீரா சங்கர், "இந்த உறுதியற்ற தன்மை இந்தியாவிற்கு கவலையளிக்கும் விஷயம். நம்மைச் சுற்றி அமைதியான சூழலையும் பொருளாதார முன்னேற்றத்தையுமே நாம் விரும்புகிறோம். அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தெளிவு இல்லை. 6, 7 மாதத்துக்குப் பிறகு புதிய தேர்தல் நடத்தப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.
நேபாளத்தில் நடந்த சம்பவம், சர்வதேச ராஜ்ஜீய அடிப்படை மற்றும் அரசியல் அடிப்படையில் பார்த்தால் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதுபோன்ற சூழலில், இந்த சம்பவம் யாரை அதிகம் கவலைக்குள்ளாக்கும் என்கிற கேள்வியும் உள்ளது.
இது பற்றி கூறும், மீரா சங்கர், இது மூவருக்கும் கவலையளிக்கும் விஷயம், ஏனென்றால் நேபாளத்தில் நிலையற்றத்தன்மை அல்லது வன்முறை குறித்த பயத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். பிரதமர் கேபி சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எனவே அவரது ராஜினாமா சீனாவிற்கு ஒரு பெரிய இழப்பு'' என்றார்.
மேலும், இந்தியாவை பொறுத்தவரை, எந்தத் தீர்வு வந்தாலும், அது ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்பின் வரம்பிற்குள்ளும் இருக்க வேண்டும் என நினைக்கும். அரசமைப்பைத் தாண்டிச் சென்று வன்முறை மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிப்பது மூன்று நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம்'' என்றார்.
நேபாளத்தில் மன்னராட்சி திரும்ப வேண்டும் என நாங்கள் கோரவில்லை என போராட்டக்காரர்கள் கூறியிருந்தாலும், போராட்டங்களின் போது ஜனநாயகத்தின் பல அடையாளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நேபாளத்தில் மன்னராட்சி மீண்டும் வர சாத்தியக்கூறுகள் உள்ளதா அல்லது அதற்கான வழிகள் ஏதேனும் திறக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து கூறும் மீரா சங்கர், "அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, ஆனால் ஜனநாயகத்தின் கீழ் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சி, முடியாட்சி காலத்தில் ஏற்பட்டதை விட மிக அதிகம். முடியாட்சி காலத்தில் சுதந்திரம் இல்லை" என்றார்.
சரி, மாறிவரும் இந்த சூழலில் இந்தியா என்ன எதிர்பார்க்க வேண்டும் என்கிற கேள்விக்குப் பதிலளித்தவர், "இந்தியா, நேபாளம் இடையிலான உறவுகள் குறித்து கூறிய மீரா சங்கர், நேபாள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இந்தியா ஒத்துழைக்கும். நேபாளத்தின் முன்னேற்றத்தை இந்தியா விரும்புகிறது. அங்கு பொருளாதாரம் வேகமாக வளர வேண்டும், அரசியல் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என இந்தியா விரும்பும்" என்றார்.
"நேபாளம் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடு, அங்கு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா அதனுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கும். அங்கு எந்தப் பொருளாதார முன்னேற்றம் நடந்தாலும் அண்டை நாடுகளுடன் இணைந்தே நடக்கும். இதைத்தான் இந்தியா விரும்புகிறது. அங்குள்ள மக்கள் எந்த முடிவு எட்டினாலும் அதை இந்தியா ஆதரிக்கும். அது ஜனநாயகத்தின் வரம்பிற்குள், அரசமைப்பின் வரம்பிற்குள் அமைதியான முறையில் நடக்கும் என நம்புவோம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு