You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொதுக்குழுவும், ஆவணமும் போலியா? அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஜி.கே.மணி
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"கடந்த 2023ஆம் ஆண்டு பா.ம.க பொதுக்குழு நடந்ததாக போலி ஆவணத்தை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி சமர்ப்பித்துள்ளார். ஆனால், அப்படியொரு பொதுக்குழுவே நடக்கவில்லை. அதை வைத்து ஜனநாயகப் படுகொலையை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது" என்று குற்றம் சாட்டுகிறார், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி.
அதோடு, போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சியை அன்புமணி திருடிவிட்டதாகவும் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.மணி குற்றம் சுமத்தினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அன்புமணி தரப்பு மறுத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் வலுத்து வருகிறது. அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
பா.ம.க தலைவராக தனி அணியாக அன்புமணி செயல்பட்டு வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 15 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, "அன்புமணியை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது" எனக் கூறினார்.
"தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரம் என்பது 2026 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிராக செப்டம்பர் 16 அன்று தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றை பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி கொடுத்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, பா.ம.க சார்பில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
'மாம்பழ சின்னமும் நமக்குத்தான்' - அன்புமணி
இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 12 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி நடத்தினார். கட்சியின் தலைவராகத் தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகக் கூறிய அவர், "மாம்பழ சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது" எனக் கூறினார்.
தேர்தலின்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏ மற்றும் பி படிவங்கள் வழங்கப்படும். இவற்றில் கையெழுத்து இடுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் தனக்கு வழங்கியுள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது அன்புமணி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீதிமன்றம் சென்றாலும் இதனால் எதுவும் ஆகப்போவது இல்லை" எனவும் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ம.க தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம், "அன்புமணியின் பதவிக்காலம் எப்போதோ முடிந்துவிட்டது. வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் படிவத்தில் அவரால் கையெழுத்திட்டுக் கொடுக்க முடியாது" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக 250 பக்கங்களைக் கொண்ட கடிதத்தில் 23 வகையான ஆவணங்களை இணைத்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
'போலி பொதுக்குழு, போலி ஆவணம்' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜி.கே.மணி முன்வைத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2022ஆம் ஆண்டு நடந்த பா.ம.க பொதுக்குழுவில் தலைவராக மருத்துவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆக்ஸ்ட் 28ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது" எனக் கூறினார்.
ஆனால், 2023ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு நடந்ததாகவும் 2026 ஆகஸ்ட் மாதம் வரையில் தனக்கு பதவிக்காலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அதைத் தொடர்ந்து, "ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவை வெளியிட்டுள்ளது" எனக் கூறிய ஜி.கே.மணி, "இது மிகப்பெரிய வேதனையை அளிப்பதோடு, கண்டனத்துக்கு உரியதும்கூட. இது ஒரு கட்சியைத் திருடுவது போல் அமைந்துள்ளது" எனக் கூறினார்.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழுவில் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களை செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.
'அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்'
"அன்புமணி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்தோம். அவரும் தான் தலைவரானது குறித்துப் பேட்டி அளித்தார். 2022ஆம் ஆண்டு மட்டுமே அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்" எனவும் ஜி.கே.மணி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதையும் தாண்டி 2023ஆம் ஆண்டில் பொதுக் குழு நடந்ததாகவும் அதில் தான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் போலி ஆவணத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்" எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து மாதங்களாகத் தங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து வருவதாகக் கூறிய ஜி.கே.மணி, "இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
"கடந்த 2023ஆம் ஆண்டு தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதால் அவரின் பதவிக்காலம் 2026 வரை உள்ளதாக ஆவணத்தில் கூறியுள்ளனர். இதைப் பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். அவர்களோ, நியாயம் வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லுமாறு கூறுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் முன்பாகப் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறிய ஜி.கே.மணி, "போலியான ஆவணத்தை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அன்புமணியின் மோசடிக்கு துணை போயுள்ளது" என விமர்சித்தார்.
'அனைத்தும் முறைப்படி நடந்துள்ளது' - வழக்கறிஞர் கே.பாலு
இந்தக் குற்றச்சாட்டுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு மறுத்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தட்டும். அனைத்து தாள்களிலும் ஜி.கே.மணி தான் கையெழுத்து போட்டார். இத்தனை நாட்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?" எனக் கேள்வி எழுப்பினார்.
"தேனாம்பேட்டையில் இருந்த கட்சியின் முகவரியை மாற்றி தி.நகருக்கு மாற்றி அவர்தான் கடிதம் கொடுத்தார். தேனாம்பேட்டை முகவரியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை என அவர் கடிதத்தில் கூறியிருந்தார்" எனவும் கே.பாலு கூறினார்.
'கடந்த 2023ஆம் ஆண்டில் பொதுக்குழுவே நடக்கவில்லை' என ஜி.கே. மணி கூறும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "அனைத்தையும் முறைப்படியும், சரியாகவும் செய்துள்ளோம்" என்று பதில் அளித்தார்.
அதோடு, "உள்கட்சி விதிகளின்படி கட்சியின் முகவரி என்பது சென்னையில்தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தைலாபுரம் முகவரியை அச்சடித்து வைத்துள்ளனர். உள்கட்சி விதிகளை அவர்கள் முதலில் படிக்கட்டும்" என்றும் கே.பாலு விமர்சித்தார்.
'நீதிமன்றம்தான் ஒரே தீர்வு'
ஆனால், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்புக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒரு கட்சியில் இரு தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு தேர்தல் ஆணையம் சென்றால், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இரு தரப்பையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும்போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். ஆனால், அதற்குக் கால நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று விளக்கினார்.
அதுமட்டுமின்றி, "தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தால், இரு தரப்புக்கும் வெவ்வேறு கட்சிப் பெயர்களைத்தான் தர வேண்டும். ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.
"சட்டமன்றத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களில் சிலர் அன்புமணியின் பக்கமும் சிலர் ராமதாஸ் பக்கமும் உள்ளனர். கட்சியின் நிர்வாக அமைப்பில் உள்ள இரு தரப்பும் வெவ்வேறு வகைகளில் உரிமை கோருகின்றனர்" என்கிறார், ஷ்யாம்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடரலாம். தங்களுக்கான நீதி மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்" எனக் கூறுகிறார்.
"ஒரு கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம், பொதுக் குழு உறுப்பினர்களின் பலம், உள்கட்சி விதிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் அன்புமணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட முடியாது" எனவும் ஷ்யாம் தெரிவித்தார்.
அதோடு, நீதிமன்றம் செல்வதுதான் ராமதாஸ் முன்னுள்ள வாய்ப்பு எனக் கூறிய ஷ்யாம், "தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. நிவாரணம் கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
மேலும், "அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் உள்ளதால், புதிதாக ஒரு கட்சியை ராமதாஸ் தொடங்கி அதற்கான நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவகாசம் இல்லை. இந்த விவகாரம் மூலம் ராமதாஸுக்கு ஆதரவாக பா.ஜ.க இல்லை என்பது தெரிகிறது," என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு