You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் கனமழையால் எங்கெல்லாம் பாதிப்பு? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே உள்ளது?
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இது சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 530 தொலைவில் உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை (நெல்லூர்), சென்னைக்கு அருகாமையில் அக்டோபர் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் திங்கட்கிழமை (அக்டோபர் 14) பெய்ய ஆரம்பித்த கனமழை தற்போதுவரை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் திங்கட்கிழமை இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்கிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகியிருக்கும் நிலையில், வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை துவங்கிய முதல் நாளிலேயே தமிழ்நாட்டிலும் புதுச்சேரி பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. திங்கட்கிழமை முதல் தற்போதுவரை தமிழ்நாடு, புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்திருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை, இரவு முழுவதும் விட்டுவிட்டுப் பெய்தது.
தேங்கிய மழைநீர்
அதிகாலையில் மழை சற்று ஓய்ந்த நிலையில், எட்டு மணிக்குப் பிறகு மீண்டும் கன மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியது.
இதனால், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை ஆகிய ரயில்வே சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. இதில் தற்போது துரைசாமி சுரங்கப்பாதை திறக்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பிறகு கெங்குரெட்டி, வில்லிவாக்கம், சூரப்பட்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. நகரின் பல சாலைகளின் ஒரு பகுதி முழுக்க மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் நான்கு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில், மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்துவரும் நிலையில், காலையில் பெய்த கனமழையின் காரணமாக, சாலையில் பெருமளவில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.
அதேபோல, தரமணி கல்லுக்குட்டை பகுதி, வடபழனி, பட்டாளம், கே.கே. நகர், கோவிந்தன் சாலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் மழை நீர் தேங்கியது. இதனால், அசோக் நகரையும் மேற்கு மாம்பலத்தையும் இணைக்கும் கோவிந்தன் சாலையில் சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
அதி கனமழைக்கான வாய்ப்பு
சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான நெல்சன் மாணிக்கம் சாலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கான வாகன நிறுத்துமிடத்திற்காக மிகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்துவந்தன.
நேற்று இரவு முதல் கன மழை பெய்த நிலையில், இந்த கட்டுமானப் பகுதியைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கான்க்ரீட் சுவர் சரிந்தது. இதற்கு அருகிலேயே நெல்சன் டவர்ஸ் என ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருந்தன. அந்த அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தரைப் பகுதியும் சரிந்தன.
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நிலையில், அவர்கள் அச்சமடைந்தனர். தற்போது அந்தப் பகுதியில் உடனடியாக உலரக்கூடிய கான்க்ரீட் போட்டு நிரப்பப்பட்டுவருகிறது.
நாளை, அக்டோபர் 16-ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சேலம், ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்கள் – காவல்துறை அபராதம் விதித்தது உண்மையா?
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பு கருதி தங்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்தனர்.
இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்ததாக தகவல் பரவியது.
இந்தத் தகவலை தற்போது தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை மறுத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழை ஆகியவை காரணமாக சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பொதுமக்களின் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மழையில் மூழ்கின.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக, அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
கடந்த காலங்களில் பருவமழை ஏற்படுத்திய படிப்பினை காரணமாக, இந்த ஆண்டு பருவமழை எச்சரிக்கை வெளிவந்த சிறிது நேரத்தில் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
காவல்துறை சொல்வது என்ன?
பள்ளிக்கரணை மேம்பாலம் அருகிலும் வாகனங்களை நிறுத்தினர். அவற்றை உடனே எடுக்குமாறு போலீசார் நிர்பந்தித்ததாக செய்தி வெளியானது.
ஆனால், இந்தத் தகவலை தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், ‘பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதாக வெளியாகும் செய்திகள் வதந்தி மட்டுமே. அப்படி எதுவும் வசூலிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வடகிழக்குப் பருவமழை காரணமாக போக்குவரத்து காவல்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாகத் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அபராதம் விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் வதந்தி என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், தங்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதாக பொதுமக்கள் அளிக்கும் பேட்டிகளும் ஊடகங்களில் வெளியாயின.
“அபராதம் விதிப்பது உண்மையா?” என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, “கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை. அவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தால், அவை உடனே ரத்து செய்யப்பட்டுவிடும்,” என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)