ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு: தேனியில் இடைத்தேர்தல் வருமா?

தேனி மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனைவிட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், "ரவீந்திரநாத் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள், கடன் விவரங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை," என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தனக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை ஏற்கக்கூடாது என்று ரவீந்திரநாத் எம்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரவீந்திரநாத்தின் மனுவை கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக ஏற்கெனவே, ரவீந்திரநாத் மூன்று நாட்கள் நேரில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.

இதேபோல், தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அமமுக சார்பில் 2019 மக்களவைத் தேர்தலில் தேனியில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். இதையடுத்து, ஜூன் 28ஆம் தேதி ஓ.பி. ரவீந்திரநாத் மீண்டும் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், ` 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது` என்று உத்தரவிட்டார். தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் தீர்ப்பு தொடர்பாக ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக உத்தரவை 30 நாட்களுக்கு உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 30 நாட்களுக்குத் தனது தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

தனது தீர்ப்பில், "வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் ரூ.3,17,49,280க்கு பதிலாக ரூ.36,52,450 என்று பிரமாணப் பத்திரத்தில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டார்.

வேறு வழக்காக இருந்தால் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கும். இதேபோல், வட்டிக்கு விடுவது மூலம் கிடைத்த வருவாய், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த லாபம் ஆகியவை குறித்து வேட்பாளர் மறைத்துள்ளார்.

தனது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.16,27,224 என்று வேட்பாளர் கூறியுள்ளார். ஆனால், ரூ.1,35,30,394 என்று மட்டுமே அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்,” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக மனுதாரர் மிலானியின் வழக்கறிஞரான அருண் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ரவீந்திரநாத் நிர்வகிக்கக்கூடிய நிறுவனங்களில் தனது பங்குகள் தொடர்பான விவரங்களை மறைத்துள்ளார், இந்த நிறுவனங்களில் ரூ.45 லட்சம் சம்பளம் வாங்கியதை மறைத்துள்ளார், நிறுவனத்தின் பேரில் வங்கியில் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியதை மறைத்துள்ளார், நிலத்தை அடமானம் வைத்து வாங்கிய கடனையும் கணக்கில் காட்டவில்லை, தான் சம்பாதித்த ரூ.1 கோடியை பார்ட்னர்ஷிப் ஃபார்மில் ரவீந்திரநாத் காட்டவில்லை என்பதை நிரூபித்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

தீர்ப்பை வரவேற்கிறேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து 2019 மக்களவைத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கண்டிப்பாக நல்லது நடக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு காட்டுகிறது,” என்றார்.

மேலும், "வாக்கு எண்ணப்படும்போது இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. அப்போது என்ன நடந்தது என்பது தேர்தல் அதிகாரிக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில் தற்போது நல்ல தீர்ப்பு வந்துள்ளதாகவே பார்க்கிறேன். இந்த வழக்கைத் தொடுத்த அந்த வாக்காளருக்கு நன்றி,” என்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்.

வழக்கின் தீர்ப்பை காலதாமதமான ஒன்றாகப் பார்க்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, நிச்சயமாக இல்லை என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற வழக்குகளின் விசாரணை பொதுவாக பல ஆண்டுகள் நடைபெறும். பதவிக் காலமான ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் தீர்ப்பு வரும். இந்த வழக்கில் சற்று முன்னரே தீர்ப்பு வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது,” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதா?

தேனி மக்களவைத் தொகுதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஓராண்டுக்கும் குறைவாகவே காலம் உள்ள நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் பிபிசி சார்பில் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அவர், “30 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் அவர்கள் (ரவீந்திரநாத் தரப்பு) உச்சநீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தால், இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம். ஒருவேளை தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது,” என்றார்.

பிரமாணப் பத்திர முறைகேடு தொடர்பான வழக்குகளில் நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராம் வெங்கடேசன்.

“பிரமாணப் பத்திரத்தில் தவறு இருந்தால் மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது 4 ஆண்டுகளுக்கு மேல் அவர் பதவியில் இருந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தீர்ப்பு வருவதற்குள் 5 ஆண்டுகள் முடிந்துவிடும். ஒருவேளை அதற்குப் பின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அதனால் என்ன பலன் இருக்கப் போகிறது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்படுவதற்கு எதிராக சட்டம் வலுவாக இல்லை என்று கூறும் அவர், ஒருசில வழக்குகளில் பிரமாணப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட நபரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளதாகக் கூறுகிறார்.

பிரமாணப் பத்திரங்கள் குறித்து வாக்காளர்கள் அறிந்துகொள்வது அவசியம் என்றும் ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்துகிறார்.

“வேட்பாளரின் குற்றப் பின்னணி என்ன, அவரது சொத்து மதிப்பு என்ன போன்றவற்றை பிரமாணப் பத்திரங்களை வைத்தே நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே வாக்காளர்கள் அதைப் படித்துப் பார்ப்பது அவசியம்.

அதனால் தான், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு வேட்பாளர்களின் விவரங்களையும் செயலி மூலமும் சமூக ஊடகம் மூலமும் பொதுமக்கள் பார்வைக்கு எடுத்து வருகிறோம். வேட்பாளரின் பின்னணி குறித்து அறிந்துகொண்டு வாக்களிப்பதன் மூலம் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய முடியும்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: