'4.5 கிலோ தங்கம் எங்கே?' - சபரிமலை கோவில் தங்கம் மோசடி வழக்கில் நீதிமன்றம் கேள்வி

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களிலிருந்து தங்கம் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை கேரள அரசியல் வட்டத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள பிரபலமான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.

சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

1998-ஆம் ஆண்டு சபரிமலை கோவிலுக்கு யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவனம் மூலம் விஜய் மல்லையாவால் சுமார் 30 கிலோ தங்கம் கொடையாக வழங்கப்பட்டது.

இந்த தங்கம் கோவில் ஆபரணங்கள் மற்றும் வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அதன்படி துவாரபாலகர்கள் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களிலும் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சை என்ன?

கடந்த 2019-ஆம் ஆண்டு துவாரபாலகர் சிலைகள் மீதான தங்க கவசத்தை செப்பனிட்டு தருவதாக பெங்களூருவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முன்வந்துள்ளார். இந்தப் பணியை சென்னையில் உள்ள ஸ்மார்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தை வைத்து செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2019 ஜூலையில் தேவசம் அதிகாரிகள் தங்க கவசத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். சில மாதங்கள் கழித்து சீரமைக்கப்பட்ட நகைகள் தேவசம் அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்க கவசத்தை செப்பனிடும் பணிக்காக மீண்டும் அவரிடமே ஒப்படைக்க தேவசம் வாரியம் முடிவெடுத்துள்ளது.

எப்போது வெளிச்சத்திற்கு வந்தது?

கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி சபரிமலை கோவிலின் சிறப்பு ஆணையர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தங்க கவசம் மற்றும் பீடம் தனது அனுமதி இல்லாமலே சீரமைப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் வழங்குவதற்காக சபரிமலை கோவிலிலிருந்து தங்க கவசம் செப்டம்பர் 7-ஆம் தேதி நீக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

2019-ஆம் ஆண்டு இதே போல் செப்பனிடும் பணிக்காக தங்க கவசம் வழங்கப்பட்டபோது அதன் எடை 4.5 கிலோ வரை குறைந்திருந்ததாக தெரிவித்துள்ள நீதிமன்றம், இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

அதே போல் கோவில் பதிவேட்டில் தங்க கவசங்கள் ஒப்படைக்கப்பட்டபோது அதில் 1.5 கிலோ தங்கம் இருந்ததை மறைத்து, அதனை வெறும் 'செம்பு தகடு' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஹச்.வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமித்துள்ள நீதிமன்றம். அதே போல் கோவிலில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் நிபுணர்கள் உதவியுடன் மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்கு முன்னாள் நீதிபதி கேடி சங்கரனையும் நியமித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் 25.4 கிலோ எடையுள்ள 12 செப்பு தகடுகள் மற்றும் துவாரபாலகர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17.4 கிலோ எடையுள்ள இரண்டு பீடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆபரணங்கள் ஒப்படைக்கப்படும் போது அதன் ஒட்டுமொத்த எடை 42.4 கிலோவாக இருந்தது. ஆனால் பணிகள் முடிந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பியபோது எடை 38.2 ஆக இருந்ததாக தேவசம் வாரியத்தின் ஆவணங்களை மேற்கோள்காட்டி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தங்கம் திருடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உன்னிகிருஷணனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் முன்பாக பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஸ்மார்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பதிவில் ஆபரணங்களுக்கு தங்கம் முலாம் பூசிய பிறகு நடிகர் ஜெயராமின் இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர் சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சையில் நடிகர் ஜெயராமின் பெயரும் அடிபட்ட நிலையில் உன்னிகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் தான் சென்னை, அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக விளக்கமளித்துள்ளார்.

"அதை மிகப்பெரிய ஆசிர்வாதமாக எண்ணினேன். ஆனால் 5 ஆண்டுகள் கழிந்த பிறகு இத்தகைய சூழல் உருவாகும் என நான் நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, உண்மை வெளியே வரட்டும்." என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யார் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தேவசம் வாரியத்தின் முன்னாள் தலைவர்களான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பத்மகுமார் மற்றும் வாசு, உன்னிகிருஷ்ணன் மற்றும் வாரியத்தின் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ள நிலையில் தேவஸ்வம் வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?

இந்தச் சம்பவத்தையொட்டி காங்கிரஸ், பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

"ஏற்கெனவே தங்க கடத்தில் வழக்கில் பல கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. தற்போது சபரிமலையில் ஏற்பட்டதைப் போல தேவசம் சொத்துக்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதில் நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்." என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார் கேரள மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவின் தலைவரான சுமேஷ் அச்சுதன்.

முறையான விசாரணை நடக்க தேவசம் வாரிய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறும் சுமேஷ், மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்தாலும் இதில் உண்மை வெளியே வராது என்றும் தெரிவிக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "தற்போது பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பில் சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தற்போதைய மற்றும் முன்னாள் தேவசம் வாரிய தலைவர்கள் மற்றும் தேவசம் அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்."

"தீவிர கண்காணிப்பில் இருக்கும் சபரிமலையில் இதுபோன்ற செயல்கள் நடந்துள்ளது என்றால் நிச்சயம் ஒருநபர் மட்டும் சம்மந்தப்பட்டிருக்க மாட்டார். அதனால் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். மத்திய அரசு பல வழக்குகளில் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடந்துள்ளது. அதனால் சிபிஐ போன்ற அமைப்புகள் நியாயமான விசாரணை நடத்தாது." எனத் தெரிவித்தார்.

அமைச்சர் மற்றும் வாரியத்தின் பதில் என்ன?

இந்த வழக்கு தொடர்பாக தேவசம் வாரிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் ஊடகங்களிடம் பேசக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"நீதிமன்றம் உத்தரவிட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. எங்கள் வாரியத்தின் சார்பிலும் உள் விசாரணை நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மேலதிக தகவல்களை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் எதுவும் கூற முடியாது." என்று கூறினார்.

அரசுக்கு நீதித்துறை மேல் நம்பிக்கை உள்ளது என கேரள தேவசம் அமைச்சர் விஎன் வசவன் தெரிவித்துள்ளார்.

"விசாரணையில் அதிகார்பூர்வ மட்டத்தில் தவறு நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். நீதித்துறை மேல் அரசுக்கு நம்பிக்கை உள்ளது. நடைபெற்றுள்ள கொள்ளைக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது." என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு