LSG vs PBKS: 155 கி.மீ வேகத்தில் பஞ்சாப்பை பறக்கவிட்ட மயங்க் யாதவ் - ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய தருணம்

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங்கில் “பெஞ்ச் ஸ்ட்ரென்த்” அதிகரித்து, ஏராளமான இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டதற்கு ஐபிஎல் டி20 தொடர் முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குள் வந்துள்ளனர்.

அந்த வகையில் அதிவேகமாகவும், துல்லியத்துடனும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் நேற்றைய ஆட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தனது வேகத்தாலும், லைன் லென்த்தாலும், ஷார்ட் பந்துவீச்சாலும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் ஈர்த்துள்ளார்.

மயங்க் யாதவ் பந்துவீச்சை பிசிசிஐ தேர்வுக் குழுவினர் பார்த்திருந்தால், நிச்சயமாக டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் லக்னௌ அணியும் தனது புள்ளிக்கணக்கைத் தொடங்கி, 0.025 என்று நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளது. இந்தத் தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் நிகர ரன்ரேட் மைனசில் சரிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்னும் புள்ளிக்கணக்கை மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மட்டும்தான் தொடங்கவில்லை.

வெற்றிக்கு வித்திட்ட பந்துவீச்சாளர்கள்

இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம்.

முதலில் அறிமுக வீரர் மயங்க் யாதவ், இரண்டாவதாக மோசின் கான், மூன்றாவதாக ரவி பிஸ்னோய், குர்னல் பாண்டியா ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆட்டத்தின் பிற்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து தோல்விக் குழியில் தள்ளியது.

இரண்டாவது பந்திலேயே மறைந்த பதற்றம்

ஆட்டநாயகன் பட்டம் வென்ற அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் கூறுகையில் “ என்னுடைய அறிமுகப் போட்டி இவ்வளவு சிறப்பாக அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஸ்லோபால் வீச எண்ணினேன். ஆனால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. என் பந்துவீச்சைப் பார்த்த கேப்டன் பூரன் இன்னும் வேகமாகப் பந்துவீசத் தூண்டுகோலாக இருந்தார்.

முதல் போட்டி என்றாலே பதற்றம் இருக்கும் என மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், இன்று அதை முதன்முதலில் நான் அனுபவித்தேன். ஆனால், முதல் பந்துவீசும்வரைதான் அந்தப் பதற்றம் தெரிந்தது.

இரண்டாவது பந்தில் அந்தப் பதற்றம் நீங்கியது. முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திட்டம் ஸ்டெம்பை நோக்கி வீச வேண்டும், வேகத்தை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான்,” எனத் தெரிவித்தார்

21வயதும், 155 கி.மீ வேகமும்

அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்குக் காரணமானார்.

அதிலும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் கொண்ட பேர்ஸ்டோ, மயங்க் யாதவின் அதிவேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார்.

மயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த 3 பேட்டர்களும், பந்தின் வேகக்தைக் கணிக்க முடியாமல், ஷாட் அடித்து “மூக்கு மேல் ராஜா”வாக விக்கெட்டை இழந்தனர்.

இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக 155 கி.மீ வேகத்தில் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் அறியப்பட்டுள்ளார். அதிவேகத்துடன் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது லைன்-லென்த்துக்குள் கட்டுப்படுத்தி வீசுவது கடினம்.

பெரும்பாலான பந்துகள் அவுட்-ஸ்விங்காகிவிடும். அது பேட்டர்களை எளிதாக ஷாட்கள் அடிக்க வாய்ப்பாக அமையும். ஆனால், அதிவேகத்துடனும், இன்-ஸ்விங் முறையில் மயங்க் யாதவ் துல்லியமாக வீசி பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார்.

முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 50 சதவீதம் வாய்ப்பு இருந்த நிலையில் மயங்க் யாதவ் அறிமுகத்துக்குப் பின் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து, 3 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியின் பிடியில் சிக்கியது. அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

பஞ்சாப் ஆதிக்கம்- தவான் அரைசதம்

பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள், 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்தது.

அதிலும் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தினார், துணையாக பேர்ஸ்டோவும் ஆடினார்.

மயங்க் யாதவ் ‘மிரட்டல் அறிமுகம்’

ஆனால், மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின் பஞ்சாப் ரன்ரேட் குறையத் தொடங்கியது. மயங்க் யாதவ் ஓவரை தொடக்கத்தில் இருந்தே சமாளிக்கத் திணறிய பேர்ஸ்டோ(42), அவரின் 2வது(இன்னிங்ஸில் 11வது ஓவர்) ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த “இம்பாக்ட் வீரர்” பிரப்சிம்ரன் சிங், வந்த வேகத்தில் சிக்ஸர், பவுண்டரியை பிஸ்னோய் ஓவரில் விளாசினார். மயங்க் யாதவ் ஓவரில் ஷார்ட் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பிரப்சிம்ரன் பேட்டை வைத்தவுடன் பேட்டில் பட்டு டீப் பேக்வார்ட் திசையில் சிக்ஸராக மாறியது.

அதன்பின் மயங்க் யாதவ் பந்துவீச்சை எதிர்கொள்ள பிரப்சிம்ரனால் முடியவில்லை. அடுத்த பந்தில் மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க நவீன் உல்ஹக் கேட்ச் பிடிக்கவே பிரப்சிம்ரன் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

மயங்க் யாதவ் தனது அடுத்தடுத்த 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் மோசின் கான் தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஸ்லோவர் பால் வித்தையால் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். 15வது ஓவரை வீசிய மோசின் கான் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

விக்கெட் வீழ்ச்சி

கடைசி 5 ஓவர்ளில் பஞ்சாப் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயமாக இது அடைந்துவிடக்கூடிய ஸ்கோராக இருந்தாலும், அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி, டாட்பால்கள், பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

மயங்க் யாதவ் 16வது ஓவரை மீண்டும் வீசினார். புதிய பேட்டர் ஜிதேஷ் ஷர்மா இரு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் 3வது பந்தில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார்.

இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ரோலில் களமிறக்க தயார் செய்யப்பட்டு வரும் ஜிதேஷ் ஷர்மா 147 கி.மீ வேகத்தில் வந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை இழந்துள்ளார். இந்திய அணியின் ஃபினிஷர் ரோலுக்கு ஷர்மா எவ்வாறு தன்னைத் தயார் செய்யப் போகிறார் என்று வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மயங்க் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி அதிர்ச்சியில் இருந்தது. கேப்டன் ஷிகர் தவான் 70 ரன்களுடன் களத்தில் நம்பிக்கையுடன் இருந்தார். லிவிங்ஸ்டோன் இருந்ததால், எப்படியும் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் மோசின் கான் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து தவான் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரன், ரன் ஏதும் சேர்க்காமல் மிட்ஆன் திசையில் பூரனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்து மெல்ல தோல்விக் குழிக்குள் பயணித்தது. இந்த ஓவரில் மோசின் கான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பஞ்சாப் அணிக்கு ரன்ரேட் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

டெத் ஓவரில் கட்டுக்கோப்பு

பின்னர் 18வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக்கும் தனது ஸ்லோவர் பால் வித்தையால் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி 12 பந்துகளில் 48 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 19வது ஓவரை குர்னல் பாண்டியா வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து பஞ்சாப்பை ஏறக்குறைய தோல்வியில் தள்ளினார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற போதே, தோல்வி எழுதப்பட்டுவிட்டது. நவீன் உல் ஹக் வீசிய கடைசி ஓவரில் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார்.

இருபது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. லிவிங்ஸ்டோன் 28 ரன்களுடனும், சசாங் சிங் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் மயங்க் யாதவ், மோசின் கான் காரணமாக அமைந்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் ஆதிக்கம் இருந்தாலும் கடைசி 10 ஓவர்களில் லக்னௌ அணியின் ஆதிக்கமே இருந்தது.

பூரன்-குர்னல் பொறுப்பான பேட்டிங்

லக்னௌ அணியைப் பொறுத்தவரை இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டீ காக் தனக்குரிய பணியைச் சிறப்பாக முடித்து 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 2வது போட்டியிலும் சொதப்பி 9 ரன்னில் வெளியேறினார்.

ஸ்டாய்னிஷ் சிறிய கேமியோ ஆடி 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பொறுப்பெடுத்து ஆடிய பூரன் 42 ரன்னிலும், குர்னல் பாண்டியா 43 ரன்களும் சேர்த்து நடுவரிசையில் சிறப்பாக பேட் செய்தனர். கடைசி டெத் ஓவர்களில் லக்னௌ அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ராகுலிடம் இருந்து கேப்டன்சி பறிப்பா?

இந்த ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்வுக்கு கேப்டன் பொறுப்புடன் நிகோலஸ் பூரன் வந்திருந்தார். லக்னௌ அணிக்கு திடீரென ராகுல் கேப்டனாக இல்லாமல் பூரன் வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது பூரன் கூறுகையில் “கே.எல்.ராகுல் ஏற்கெனவே காயத்தால் மீண்டு வந்துள்ளார். அவருக்குத் தொடர்ந்து பணிப்பளுவை ஏற்ற விரும்பவில்லை என்பதால், அவர் இம்பாக்ட் வீரராகக் களமிறங்குவார்.

காயம் காரணமாகவே ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ராகுல் விளையாடாமல் இருந்தார். கடந்த சீசனிலும் ராகுல் ஏராளமான போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை எடுத்து கண்டிப்பாகச் சிறப்பாக ஆட வேண்டும்,” எனத் தெரிவி்த்தார்.

ஆனால் ஆங்கில இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் "லக்னௌ அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

ராகுலை இம்பாக்ட் வீரராக பயன்படுத்துவது லாங்கர் எடுத்த முடிவுதான். ஆனால், கேஎல் ராகுலை பொருத்தவரை முழு உடல் தகுதியுடனும், அதிகமான ஊக்கத்துடனும் இருக்கிறார்," எனக் கூறப்படுகிறது.

ஆனால், "கேப்டன் பொறுப்பை பூரனிடம் கொடுத்து, ராகுலை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கியது திடீரென வந்த தலைமைப் பயிற்சியாளர் லாங்கர்தான்" என்றும் தெரிவித்துள்ளன. லக்னௌ கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து சத்தமில்லாமல் பறிக்கப்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)