வெளிநாட்டு அழைப்புகளை இலவச உள்நாட்டு அழைப்பாக மாற்றும் நூதன மோசடி

வெளிநாட்டு அழைப்புகளை இலவச உள்நாட்டு அழைப்பாக மாற்றும் நூதன மோசடி

பட மூலாதாரம், Getty Images/BBC

    • எழுதியவர், சுப கோமதி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றிடும் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி கிராமத்தில் நடந்த சைபர் மோசடி

தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் எபனேசர் என்பவருக்குச் சொந்தமான மரக்கடை உள்ளது. அங்குள்ள அறை ஒன்றில் மரக்கடைக்கு சம்பந்தம் இல்லாத தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதாகவும் அதன்மூலம் சட்டவிரோத மோசடியில் ஈடுபடுவதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கே சென்ற காவல்துறையினர், ஒரே நேரத்தில் அதிகப்படியான சிம் கார்டுகள் பயன்படுத்தும் சிம் பாக்ஸ்களும் (sim box), சிம் வங்கிகள், (sim bank), நிறைய ரௌட்டர்கள் (router), ப்ளுடூத் 4G மோடம், பென் டிரைவ், கன்வர்டர், அடாப்டர்கள், சுமார் 300க்கும் மேற்பட்ட ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் சிம் கார்டுகளும் இருப்பதைக் கண்டனர்.

தொலைத்தொடர்ப்பு சாதனங்களைத் துண்டித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்தவர்களை‌ காவல் துறை மடக்கிப் பிடித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. காவல்துறையால் கைது செய்யப்பட்ட யோசுவா, அந்த அறையில் வைத்திருக்கும் தொலைத்தொடர்ப்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி வந்த செயல்முறையை விளக்கினார்.

வெளிநாட்டு அழைப்புகளை இடைமறிப்பது சட்டவிரோதமா?

சிம் பாக்ஸ் மோசடி

பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து வரும் ஐஎஸ்டி அழைப்புகள் வழியாக இந்தியாவிற்குள் இருக்கும் நபரைத் தொடர்பு கொண்டு பேசினால் அதற்கு வெளிநாட்டு அழைப்புக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால் அதே அழைப்பை மேலே சொன்ன முறையில் வெளிநாட்டு செயலிகளான ஐடெல், மொபிடயலர், ஸியோ ஆகியவை வழியாக‌ உள்ளூர் அழைப்புகளாக மாற்றினால் குறைந்த கட்டணத்தில் பேச முடியும் என்பதை யோசுவா தெரிவித்தார்.

இந்தச் செயல் சட்டவிரோதமானது. இதனால் அரசுக்கும், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த அழைப்புகளை அரசால் கண்காணிக்க‌ முடியாது என்பதால் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

எனவே யோசுவா என்பவர் மீது கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் இந்திய தந்தி சட்டம் 1885, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிம் கார்டு மோசடி எப்படி நடந்தது?

சிம் பாக்ஸ் மோசடி

சிம் கார்டு மோசடி உலகளவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாககௌள்ளது. சிம் கார்டு மோசடி ஆண்டுதோறும் தொழில்துறைக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பை உருவாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் செல்போன் அழைப்புகளின் தரம் குறையலாம். மேலும், இதன்வழியாக ஏதாவது குற்றம் நடந்தால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்தச் சம்பவம்‌ பற்றி சங்கரன்கோவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஜூனியர் தொலைதொடர்பு அலுவலர் சார்லஸ் முத்துவிடம் பேசினோம்.

"ஐஎஸ்டி அழைப்புகளை மாற்றி உள்ளூர் அழைப்புகளாக இணைப்பு கொடுக்கும்போது உண்மையான எண் எதுவென்று கண்டுப்பிடிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் இதுவரை நடந்ததில்லை,” என்கிறார்.

இந்தச் செயலால், கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்ல, வேறு சில மோசடிகளைச் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார் சார்லஸ் முத்து.

“சில நேரம், வங்கிகளில் இருந்து கால் செய்வது போல் மோசடி செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் சத்திரப்பட்டி போன்ற கிராமங்களுக்குள் இதுபோன்ற குற்றச்செயல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இங்கிருந்தபடி dark network மூலம் சர்வதேச ஃபோன் கால் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடி செய்யவும் வாய்ப்பு உண்டு," என்று சந்தேகிக்கிறார்.

சிம் பாக்ஸ் மோசடி

சிம் பாக்ஸ் மோசடி என்றால் என்ன?

சிம் பாக்ஸ் (SIM box) என்பது அதிக எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை கொண்ட ஒரு சாதனம். ஒவ்வொறு கார்டும் தனி தொலைபேசி லைனுக்கு இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வதேச அழைப்பு செய்யப்படும்போது, அந்த அழைப்பைத் தடுத்து, உள்ளூர் அழைப்பைப் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே தொலைபேசி நிறுவனம் அந்த அழைப்பிலிருந்து எந்த வருவாயும் பெறாது.

நிலை 1: நாடு ஏ-வில் உள்ள ஒருவர் நாடு பி-இல் உள்ள ஒருவருக்கு சர்வதேச அழைப்பை மேற்கொள்கிறார்.

நிலை 2: அந்த அழைப்பு சிம் பாக்ஸ் மூலம் தடுக்கப்படுகிறது. இணையம் வழியாக நாடு பி-இல் அமைந்துள்ள சிம் பாக்ஸ் சாதனத்திற்கு அந்த அழைப்பு சென்றடைகிறது.

நிலை 3: அந்த சிம் பாக்ஸ் சாதனம் வழியாக உள்ளூர் அழைப்பாக அது மேற்கொள்ளப்படுகிறது. இது‌ பி என்ற‌ நாட்டில் நடப்பதால், அந்த அழைப்பு உள்ளூர் அழைப்பாக முடிவடைகிறது.

அழைப்பு உண்மையில் ஒரு சர்வதேச அழைப்பாக இருந்தாலும், அதற்கான கட்டணம் இல்லை. மோசடி செய்பவர் லாபம் பெறுகிறார்.

இதுபோன்ற குற்றங்களை சிம் பாக்ஸ் மோசடி அல்லது சட்டவிரோத எக்ஸ்சேஞ்ச் ஆபரேஷன் என்கிறார்கள்.

சிம் பாக்ஸ் மோசடி போன்ற குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களால் ஒரு சிம் பாக்ஸில் 15இல் இருந்து 20 சிம் வரை பயன்படுத்த முடியும். அதை கணினியில் இணைத்து VOIP (voice over internet protocol) ஆக மாற்றி விடுகின்றனர்.

கண்காணிக்க முடியாத இணையதள செயலிகளையும் சிம் பாக்ஸ்களையும் இணைக்கின்றனர். தற்போது கைதாகியுள்ள யோசுவா(33) என்பவரிடம் சங்கரன்கோவில் டி.எஸ்.பி சுதிர் தலைமையிலான தனிப்படை மற்றும் புலனாய்வு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயற்கை தொலைத்தொடர்பு மையம்

சிம் பாக்ஸ் மோசடி

பட மூலாதாரம், Getty Images

தொலைபேசிகளுக்கு இடையே அழைப்புகளை இணைக்க எப்படி தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் இயங்குகின்றதோ, அதேபோல இவர்கள் செயற்கை தொலைத்தொடர்பு மையமாகச் செயல்படுகின்றனர் என்கிறார் சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகம்.

“வெளிநாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் கால் செய்வதற்கு VOIP (voice over internet protocol) பயன்படுத்துவோம். வாட்ஸ் ஆப் கால்களை என்கிரிப்ட் செய்வதன் மூலம் அதைக் கண்காணிக்க முடியாதவாறு பாதுகாக்க முடியும். அதற்கு நாம் இணைய சேவைக்கான‌ கட்டணம் மட்டும் செலுத்துவோம்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து ஃபோன் அழைப்பு செய்வதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்துவோம். இந்த சிம் பாக்ஸ் முறையில் வெளிநாட்டு ஃபோன் அழைப்புகளை ரௌட்டர் பயன்படுத்தி, VOIP (voice over internet protocol) அழைப்பாக மாற்றி இணைப்பு கொடுக்கின்றனர்.

இது உள்ளூர் ஃபோன் அழைப்பைப் போலவே செயல்படும். உள்ளூர் அழைப்புகளைப் பேசுவதற்குச் செலவாகும் கட்டணமே செலவாகும்,” என்கிறார் வினோத்.

மேலும் வெளிநாட்டு ஐஎஸ்டி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதன் மூலம் மத்திய மாநில அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

"இவர்களால் இணைப்பு கொடுக்கப்பட்ட வெளிநாட்டு அழைப்புகள் மூலம் தொலைபேசி எக்ஸ்சேஞ்சுக்கு சிக்னல் செல்லாது. இது அலைபேசி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது அனைத்தும் கண்காணிக்க முடியாத அழைப்புகள் என்பதால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்." என்கின்றார் வினோத்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)