You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு : ஹாலிவுட்டை விட வேகம் காட்டுகிறதா இந்திய சினிமா உலகம்?
- எழுதியவர், விரேன் நாயுடு
- பதவி, பிபிசி
உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளது - அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ). ஹாலிவுட்டை விட இந்தியத் திரைத்துறை செயற்கை நுண்ணறிவை மிக எளிதாக ஏற்றுக்கொண்டாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.
திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான விவேக் அஞ்சாலியா தனது அடுத்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் பேசியபோது, அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், அவர் ஒரு புதிய வகை கூட்டாளரை (ஏஐ) உள்ளே கொண்டு வந்தார், அதன் பிறகு அவரது திட்டம் வேகம் எடுக்கத் தொடங்கியது.
ChatGPT மற்றும் Midjourney போன்ற ஏஐ கருவிகளின் உதவியுடன், அஞ்சாலியா தனியாக ஒரு படம் எடுப்பதற்கான வழியைக் கண்டறிந்தார். Midjourney காட்சிகளை உருவாக்கியது. ChatGPT ஒரு ஆலோசனைக் கருவியாக இருந்தது. இதற்கு ஒரு வருடத்திற்கும் சற்று கூடுதல் காலம் ஆனது, ஆனால் அவரால் ஏஐ மூலம் மேம்படுத்தும் முறையை படிப்படியாக செம்மைப்படுத்த முடிந்தது. "Midjourney-க்கு இப்போது என்னைப் பற்றி மிக நன்றாகத் தெரியும்," என்று அவர் நகைச்சுவையாகக் கூறுகிறார்.
பாடலாசிரியராகவும் இருக்கும் அஞ்சாலியாவிடம், இதுவரை வெளியாகாத பல காதல் பாடல்கள் இருந்தன. அவை பாலிவுட் பாணியிலான ஒரு களத்திற்காகக் காத்திருந்தன. "விரைவில், ஒரு கதை உருவாகத் தொடங்கியது," என்று அவர் கூறுகிறார். அதன் விளைவாக உருவானதுதான் 'நைஷா' (Naisha) எனும் காதல் திரைப்படம். "ஏஐ மூலமாக எனது விருப்பப்படி படம் எடுக்க முடியும் எனும் போது, நான் ஏன் ஒரு ஸ்டுடியோவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டும்?" என்கிறார் அஞ்சாலியா.
இந்தியாவின் பலதரப்பட்ட திரைத்துறையில், ஏஐ என்பது வளர்ந்து வரும் இயக்குநர்களால் பயன்படுத்தப்படும் ஒரு ஆர்வம் சார்ந்த விஷயமாக மட்டும் இல்லை. பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் அன்றாட பணிகளிலும் இது ஊடுருவியுள்ளது. திரையில் மூத்த நடிகர்களின் வயதைக் குறைத்துக் காட்டுவது (de-ageing) முதல், குரல் நகலாக்கம் (voice cloning) மற்றும் படப்பிடிப்புக்கு முன்பே காட்சிகளைத் திட்டமிடுவது வரை, இந்தியாவின் திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு பகுதியிலும் ஏஐ புகுந்துள்ளது. சில ஸ்டுடியோக்கள் இந்தத் தொழில்நுட்பத்தை உடனடியாக விரும்பத் தொடங்கிவிட்டன - ஆனால் இது புதிய அபாயங்களையும் அறம் சார்ந்த சிக்கல்களையும் கொண்டு வருகிறது.
ஹாலிவுட்டில் நிலவும் சூழல்
இந்தியத் திரைத்துறை தனது படைப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட விதம், அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நிலவும் சூழலுக்கு முற்றிலும் மாறானது. அங்கு நடிகர்களும் எழுத்தாளர்களும் ஏஐ பயன்பாட்டைக் கடுமையாக எதிர்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நடத்திய மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் பெரிய படங்களின் தயாரிப்பையும் முடக்கின.
இருப்பினும், அஞ்சாலியாவிற்கு ஏஐ ஒரு உதவியாளராக இருந்தது. அவரது படத்தின் பட்ஜெட் ஒரு சாதாரண பாலிவுட் படத்தின் செலவில் 15%-க்கும் குறைவாகவே இருந்தது, மேலும் 75 நிமிட நீளம் கொண்ட அந்தப் படத்தின் 95% காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை. படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு, கணினியால் உருவாக்கப்பட்ட நாயகி 'நைஷா'-விற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நகை நிறுவனம் விளம்பர ஒப்பந்தத்தையும் வழங்கியது.
விரும்பிய காட்சிகளைப் பெற ஆயிரம் சோதனைகள் (Iterations) தேவைப்பட்டாலும், ஒரு பெரிய படத்தைத் தயாரிப்பதை விட இதில் மன அழுத்தம் குறைவாக இருந்ததாக அஞ்சாலியா கூறுகிறார். "ஏஐ திரைப்படத் தயாரிப்பை ஜனநாயகப்படுத்தியுள்ளது," என்கிறார் அவர். "இன்று, எந்தவொரு வசதியும் இல்லாத எந்தவொரு இளைஞரும் ஏஐ பயன்படுத்தி ஒரு திரைப்படம் எடுக்க முடியும்."
முன்னணி இயக்குநர்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மலையாளத் திரைப்படமான 'அஜயன்டே ரண்டாம் மோஷனம்' படத்தின் ஆரம்பக் கட்டங்களில், ஒரு சிக்கலான காட்சியமைப்பை தனது விஷுவல்-எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு விளக்குவதற்கு ஜிதின் லால் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.
இப்போது லாலின் கதை சொல்லும் முறையில் ஏஐ மூலமான முன்-திட்டமிடல் ஒரு பகுதியாகிவிட்டது. "எனது அடுத்த படத்திற்காக, முழு அளவிலான தயாரிப்புக்கு நிதி ஒதுக்குவதற்கு முன்பு, எடுக்கவிருக்கும் காட்சிகளை நாங்கள் சோதித்துப் பார்க்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.
இயக்குநர் அருண் சந்து, சுமார் 2 கோடி ரூபாய் எனும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு அறிவியல் புனைவு நையாண்டி திரைப்படத்தை உருவாக்கினார். "இது ஒரு இந்தியத் திருமணத்தின் செலவை விடக் குறைவு," என்று சந்து கூறுகிறார். 'ககனாச்சாரி' (Gaganachari) எனும் தனது மலையாளத் திரைப்படத்தில் ராணுவக் காட்சிகளை உருவாக்க அவர் போட்டோஷாப், கிராஃபிக்ஸ் புரோகிராம்கள் மற்றும் 'ஸ்டேபிள் டிஃப்யூஷன்' (Stable Diffusion) எனும் ஏஐ கருவியைப் பயன்படுத்தினார்.
இதற்கிடையில், ஒலி வடிவமைப்பாளர்கள் சங்கரன் ஏஎஸ் மற்றும் கேசி சித்தார்த்தன் ஆகியோர் Soundly மற்றும் Krotos Studio-வின் Reformer போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கலைஞர்கள் தங்கள் சொந்தக் குரலைப் பயன்படுத்திக் கூட ஒலி விளைவுகளைத் திருத்த அனுமதிக்கிறது.
"முன்பெல்லாம், ஒரு இயக்குநர் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தைச் சொன்னால், நாங்கள் ஒரு ஸ்டுடியோவை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். இன்று, 'அதை உடனே செய்துவிடலாம்' என்பதே எங்களது அணுகுமுறையாக இருக்கிறது," என்கிறார் சங்கரன்.
தேவையற்ற ஆபத்தா?
இருப்பினும், இந்தியத் திரைத்துறை பெரும்பாலும் கட்டுப்பாடுகள் இன்றி ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டாலும், ஒரு பெரிய கேள்வி எழுகிறது: இந்திய இயக்குநர்கள் மனிதப் படைப்பாற்றலைச் சிதைக்கிறார்களா மற்றும் தங்களது திட்டங்களுக்குத் தேவையற்ற ஆபத்தை உண்டாக்குகிறார்களா?
ஏஐ-க்கு மனிதக் கலைஞர்களைப் போல உணர்வுப்பூர்வமான ஆழம், கலாசார நுணுக்கங்கள் மற்றும் மனித உள்ளுணர்வு இல்லை என்று லால் போன்ற இயக்குநர்கள் வாதிடுகின்றனர். 2013-இல் வெளியான 'ராஞ்சனா' திரைப்படத்தின் தமிழ் பதிப்பு 2025 ஆகஸ்டில் மீண்டும் வெளியிடப்பட்டது, அதன் சோகமான முடிவை ஏஐ மூலம் மகிழ்ச்சியான முடிவாக மாற்றியிருந்தனர். திரைப்படத்தின் இயக்குநரின் அனுமதி இன்றி தயாரிப்பு நிறுவனத்தால் இந்த புதிய பதிப்பு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள சில இயக்குநர்கள் ஏஐ உண்மையில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் தெரிவித்துள்ளனர், மேலும் சிலர் இந்தத் தொழில்நுட்பத்தில் உணர்வுப்பூர்வமான அம்சம் இல்லை என்று விமர்சித்துள்ளனர்.
"அதனால் ஒரு மர்மத்தை உருவாக்க முடியாது, பயத்தையோ அல்லது அன்பையோ உணர முடியாது" என்று இயக்குநர் சேகர் கபூர் 2023-இல் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேற்கத்தியத் திரைப்படங்களில், நடிகர்களின் வயதை டீஏஜிங் மூலம் குறைத்துக் காட்டுவது சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது - உதாரணமாக, 2024-இல் வெளியான 'ஹியர்' (Here) படத்தில் டாம் ஹாங்க்ஸ் டீஏஜிங் மூலம் தோன்றினார்.
இருப்பினும், 2025-இல் வெளியான 'ரேகாசித்திரம்' எனும் மலையாளத் திரைப்படத்தில் மூத்த நடிகர் மம்மூட்டியின் வயதைக் குறைத்துக்காட்ட ஏஐ பயன்படுத்தப்பட்டபோது, சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்தன. சில ரசிகர்கள் இதை "இந்தியத் திரைத்துறையின் சிறந்த ஏஐ உருவாக்கம்" என்று அழைத்தனர். அந்தப் படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.
'ரேகாசித்திரம்' படத்தில், 73 வயது மம்மூட்டி 30 வயது இளைஞராகத் தோன்றுகிறார். மைண்ட்ஸ்டைன் ஸ்டுடியோஸின் இணை நிறுவனர் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஆண்ட்ரூ ஜேக்கப் டி'க்ரூஸ் இந்தச் செயல்முறைக்குத் தலைமை தாங்கினார். அவரும் அவரது குழுவும் தொடக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளியான 'காதோடு காதோரம்' படத்திலிருந்து மம்மூட்டியின் காட்சிகளை ஏஐ-க்கு அளித்தனர். ஆனால், அந்த காட்சிகள் தெளிவற்று இருந்தன.
"அது ஏஐ-க்கு ஏற்ற தரமான தரவு இல்லை," என்கிறார் டி'க்ரூஸ். பின்னர் 4k தரத்தில் மாற்றப்பட்ட மம்மூட்டியின் 1988-ஆம் ஆண்டு படமான 'மனு அங்கிள்' காட்சிகளை அவர்கள் பயன்படுத்தினர்.
மூத்த நடிகர் சத்யராஜ் இது குறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். "திரைத்துறை வயதுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்று. அத்தகைய சூழலில், ஆக்ஷன் படங்களில் நான் முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஏஐ எனது திரை வாழ்க்கையை நீட்டிக்க உதவும் என்றால், அதை ஏன் பயன்படுத்தக்கூடாது," என்கிறார் அவர். 2024-இல் வெளியான 'வெப்பன்' (Weapon) எனும் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், 70 வயதான அவரது தோற்றத்தை 30 வயதாக ஏஐ மாற்றியதைக் குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இயக்குநர் குகன் செந்நியப்பன், 'கில் பில்' (Kill Bill) பாணியிலான காட்சிகளைத் திட்டமிட்டிருந்தார். "ஆனால் எங்களிடம் போதிய பட்ஜெட்டோ நேரமோ இல்லை. ஏஐ இல்லையென்றால், படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கும்," என்கிறார் அவர். ஏஐ கொண்டு வந்த செயல்திறன் ஒருபுறம் இருந்தாலும், அந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள சில விசித்திரங்களையும் செந்நியப்பன் கவனித்தார்.
"அதிமானுடர் (Demigod) போன்ற சொற்களைக் கொடுத்தால், அது புரிந்துகொள்ள முடியாத முடிவுகளைத் தருகிறது. இந்தியப் புராணங்களில் வேரூன்றிய குறிப்புகள் குறித்து ஏஐ-க்கு எதுவுமே தெரியவில்லை," என்கிறார் செந்நியப்பன்.
கலாசாரம் சார்ந்த காட்சிகளுக்கு, அவர் இப்போதும் பாரம்பரிய ஸ்டோரிபோர்டு கலைஞர்களையே பணியமர்த்துகிறார். ஏஐ கருவிகள் மேற்கத்திய தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, எனவே அவை இந்திய அழகியலுக்கு ஏற்றதாக இல்லை என்று அவர் கவலையோடு சுட்டிக்காட்டுகிறார்.
"ChatGPT-ஐப் பயன்படுத்தி நீங்கள் ஒரு பிராந்திய இந்தியப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம், ஆனால் அதற்கு அசல் கதையின் கலாசார நினைவுகளை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும். அந்தத் திரைக்கதை ஒரு மனித எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்," என்கிறார் அவர்.
'கலாசார நுணுக்கங்களை ஏஐ புரிந்துகொள்வதில்லை'
2023-இல் வெளியான தனது கன்னடத் திரைப்படமான 'கோஸ்ட்' (Ghost)-இல், கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் குரலை நகலெடுக்க ஏஐ பயன்படுத்தியபோது, அதன் கலாசார அறிவின்மை இயக்குநர் எம்.ஜி. ஸ்ரீநிவாஸை வியப்பில் ஆழ்த்தியது. பிராந்திய உச்சரிப்பு முறைகளை மீண்டும் எழுதவும், பேச்சில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் அவருக்கு மனிதப் பொறியாளர்கள் தேவைப்பட்டனர்.
"முன்னோட்டம் பல மொழிகளில் வெளியானபோது, அது நன்றாக வேலை செய்தது. இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் பதிப்புகளில் உள்ள சிவராஜ்குமாரின் குரல் அவருடையது அல்ல என்பதை பார்வையாளர்கள் உணரவில்லை," என்று அவர் கூறுகிறார்.
பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியத் திரைத்துறையில், கலாசார மற்றும் உணர்வுப்பூர்வமான நுணுக்கங்களை ஏஐ புரிந்துகொள்வதில்லை என்றும், எனவே மனிதர்களின் தலையீடு அவசியம் என்றும் செந்நியப்பன் மற்றும் ஸ்ரீநிவாஸ் இருவரும் கருதுகின்றனர்.
இந்தச் சிக்கல்களைக் கையாள, இயக்குநர் அருண் சந்து தனது சொந்தப் படைப்பாற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். "நான் என்னுடைய ஒரு குளோனை (clone) உருவாக்குகிறேன்," என்கிறார் அவர். முன்னாள் புகைப்படக் கலைஞரான சந்து, தனது முந்தைய படைப்புகள், காட்சிக் கலை பாணி ஆகியவற்றை ஏஐ-க்கு அளித்து வருகிறார்.
இதில் உள்ள ஒரு ஆபத்து என்னவென்றால், அறிவுசார் சொத்துரிமை மற்றும் நடிகர்களின் உருவங்களை மக்கள் தவறாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் - ஏனெனில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாட்டில் தனிச் சட்டம் எதுவும் இல்லை. "இது தொடர்பாக ஒரே ஒரு விரிவான சட்டம் கூட இல்லை," என்கிறார் 'அட்டர்னி ஃபார் கிரியேட்டர்ஸ்' அமைப்பின் நிறுவனர் மற்றும் ஊடக வழக்கறிஞர் அனாமிகா ஜா.
உயிரோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் உருவம் மற்றும் குரலைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவில் சட்டப் பாதுகாப்புகள் உள்ளன என்று அவர் கூறுகிறார். இருப்பினும், இத்தகைய பாதுகாப்புகள் தற்போது நேரடி அல்லது பதிவு செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி உருவங்களுக்கு அவை தெளிவாகப் பொருந்தாது.
"இத்தகைய பயன்பாடுகளைக் கையாள தெளிவான சட்டச் சீர்திருத்தங்கள் இல்லாதது, ஏஐ நகரும் வேகத்தில் சட்டம் நகரவில்லை என்பதையே நிரூபிக்கிறது," என்கிறார் ஜா.
ஏஐ பயன்பாட்டால் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. "இந்தியாவில், தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் மனித உழைப்பைத் தவிர்க்கும் அல்லது நகலெடுக்கும் ஏஐ பயன்பாட்டைக் கணக்கில் கொள்ளவில்லை," என்கிறார் ஜா.
அறம் சார்ந்த சிக்கல்
சில இயக்குநர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள அறம் சார்ந்த விளைவுகளைப் பரிசீலித்து வருகின்றனர். இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீஜித் முகர்ஜி, மறைந்த இரண்டு வங்காளக் கலைஞர்களின் குரல்களை மீண்டும் உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்: 'படாடிக்' (Padatik) படத்தில் ஆஸ்கார் வென்ற சத்யஜித் ரே மற்றும் 'ஒடி உத்தம்' (Oti Uttam) படத்தில் உத்தம் குமார்.
"நீங்கள் சரியான வழியில் செய்தால், இது உண்மையில் ஒரு அறம் சார்ந்த சிக்கல் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் அவர்களின் குடும்பத்தினரை இதில் இணைத்துக் கொண்டோம்," என்கிறார் முகர்ஜி.
இருப்பினும், இந்தியாவில் "மறைவுக்குப் பிந்தைய தனிநபர் உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை" என்று ஜா வலியுறுத்துகிறார், இதன் பொருள் "ஒரு நடிகரின் குரல் அல்லது உருவம் அவர்களின் இறப்புக்குப் பிறகு அனுமதி இன்றி பயன்படுத்தப்படலாம்".
"குடும்பத்தினர் முறைசாரா அனுமதிகளை வழங்கலாம், ஆனால் சட்டப்பூர்வ கட்டமைப்பு இல்லை," என்று அவர் கூறுகிறார்.
'அன்கேனி வேலி' (uncanny valley - மனித சாயலை ஒத்திருந்தாலும் ஏற்படும் ஒருவித அந்நியத் தன்மை) போன்ற பிற சிக்கல்களும் உள்ளன. பிம்பங்களை உருவாக்கும் ஏஐ, மனிதக் கண்களுக்கு விசித்திரமாகத் தோன்றும் படங்களை உருவாக்கலாம். இந்தத் தொழில்நுட்பம் தவறான தகவல்களை உருவாக்கலாம் (hallucinate) அல்லது விவரங்களைக் குழப்பலாம். "புன்னகை சரியாக இல்லாமல் இருப்பது அல்லது தலைமுடி சரியாக இல்லாமல் இருப்பது என ஏதோ ஒன்று 'தவறாக'த் தெரியும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. சோம்பேறித்தனமான கதை சொல்லலை பார்வையாளர்கள் கவனிப்பார்கள்," என்கிறார் டி'க்ரூஸ்.
பர்டியூ பல்கலைக்கழகத்தின் 'ஐடியாஸ் லேப்' இயக்குநர் அனிகேத் பெரா, ஏஐ துறையில் இரண்டு வெவ்வேறு திட்டங்களில் பணியாற்றியுள்ளார். 1899-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியாவின் பழமையான திரைப்படத்தின் பிரதியை மீட்டெடுப்பது மற்றும் சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்துடனான முந்தைய ஏஐ அடிப்படையிலான பரிசோதனை.
"படத்தின் சூழலுக்கு முக்கியமான நிழல்கள் மற்றும் மாறுபாடுகளை (contrast) ஏஐ மென்மையாக்குகிறது. ஏஐ-க்கு குறியீடுகள் தொடர்பான அழகியல் முறை புரியாது, அது வடிவங்களை மட்டுமே யூகிக்கும்," என்று அவர் கூறுகிறார்.
இறுதி முடிவு அசல் திரைப்படத்திற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு செயல்பாட்டிலும் மனித ஆய்வு தேவைப்பட்டதாக பெரா கூறுகிறார். "ஏஐ பெரும்பாலும் விவரங்களை கற்பனை செய்கிறது, காட்சி மொழியை மாற்றுவதன் மூலம் அவற்றை 'மேம்படுத்த' முயல்கிறது. அதன் மூலம் நாம் வரலாற்றையே மாற்றியமைக்கும் அபாயம் உள்ளது."
முகர்ஜியைப் பொறுத்தவரை, தனது திரைப்படக் கனவை நனவாக்க ஏஐ உதவியது. மறைந்த இரண்டு நடிகர்களை அவரால் வேறு எப்படி நடிக்க வைத்திருக்க முடியும்? 'ஒடி உத்தம்' முழுவதும் உத்தம் குமாரின் குரலை ஏஐ உருவாக்கியது. இருப்பினும், திரைக்கதை எழுதுதல், பழைய காட்சிகளைத் திரட்டுதல், சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுதல் மற்றும் ஏஐ வழங்கிய முடிவுகளைச் சரிபார்த்தல் என இந்தத் திட்டம் முற்றிலும் மனித உழைப்பையே நம்பியிருந்தது என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஏஐ கருவிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன, இது பல ஒழுங்குமுறை மற்றும் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. முகர்ஜி நம்பிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்துகிறார். "பயப்படுவதற்குப் பதிலாக, மனிதர்கள் ஏஐ உடன் பழகிக்கொள்ள வேண்டும்," என்கிறார் அவர். "அதைப் பழக்கப்படுத்துங்கள், அதில் நிபுணத்துவம் பெறுங்கள் மற்றும் அதைப் பயன்படுத்துங்கள். இது உங்களது படைப்பாற்றலை விழுங்க நினைக்கும் அரக்கன் அல்ல. இது படைப்பாற்றலுக்கு உதவுகிறது, அதற்கு மாற்றாக இருக்கவில்லை."
இருப்பினும், மற்றவர்களுக்கு ஏஐ-ன் வரம்புகள் தெளிவாகத் தெரிகின்றன. சந்து இப்போது தனது ஏஐ அனுபவங்களை வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார் - அவர் ஒரு பல்கலைக்கழகத்தில் சினிமாவில் ஏஐ பயன்பாடு குறித்த பாடத்தை நடத்துகிறார். ஒரு பகுதியில், மாணவர்களை இரண்டு படங்கள் எடுக்க அவர் வலியுறுத்துகிறார் - ஒன்று ChatGPT மற்றும் ஏஐ வீடியோ கருவிகளைப் பயன்படுத்தி, மற்றொன்று முற்றிலும் பாரம்பரிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி.
"பின்னர் எந்தப் பதிப்பு அதிக நம்பகத்தன்மையுடன் இருக்கிறது என்பதை நாங்கள் ஒப்பிடுகிறோம். இரண்டும் இணைந்து செயல்பட முடியுமா என்பதைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்."
ஏஐ படங்கள் பொதுவாக வேகமாகவும் எளிதாகவும் உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
"ஆனால், நுணுக்கங்கள் நிறைந்த பதிப்பு எப்போதும் மனிதர்களால் உருவாக்கப்படுபவை தான்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு