வேட்டையன்: வழக்கமான ரஜினி படமா அல்லது ‘ஜெய் பீம்’ போன்ற படமா? ஊடக விமர்சனம்

காணொளிக் குறிப்பு, வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்
வேட்டையன்: வழக்கமான ரஜினி படமா அல்லது ‘ஜெய் பீம்’ போன்ற படமா? ஊடக விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 10) வெளியானது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முன் த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது.

இதற்கு முன் நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பெரிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

வேட்டையன் படம் சொல்ல வருவது என்ன? படம் எப்படி இருக்கிறது?

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த ஒரு போலீஸ் அதிகாரியாக உள்ளார். காவல் துறையில் இவர் என்கவுன்டருக்கு புகழ் பெற்றதாலே இவருக்கு வேட்டையன் என்ற பெயரும் உள்ளது.

மறுபுறம் மனிதாபிமான கொள்கைகள் கொண்ட ஒரு நீதிபதியாக அமிதாப் பச்சனின் கதாப்பாத்திரம் உள்ளது.

இவர்கள் இருவரும் ஒரு முக்கிய வழக்கை கையாள்கிறார்கள்.

மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இவ்விருவர் இந்த வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள்? என்பதே இப்படத்தின் கதை.

"இது சூப்பர் ஸ்டார் படம், ஜெய்பீம் இயக்குநரின் படம். இரண்டுமே இந்த படத்தில் திகட்டாத வகையில் உள்ளது. பொதுவாக மாஸ் ஹீரோக்களை வைத்து முதல்முறை படம் எடுக்கும் இயக்குநர்கள், ஹீரோவுக்கான மாஸை மட்டுமே மனதில் வைத்து சொல்ல வந்த கதையை சொதப்பிவிடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் இரண்டுக்குமே சரியாக இடமளித்து பாஸ் ஆகியிருக்கிறார் இயக்குநர்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.

"படத்தின் முதல் 30 நிமிடம் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விரைவில், வழக்கமான ரஜினி படம் போல இல்லாமல் இது ஒரு புலனாய்வு த்ரில்லராக மாறும். படத்தின் முதல் பாதி விரைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மெதுவாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது", என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறியுள்ளது.

"இந்த படத்தின் எந்த இடத்திலும் எமோஷனலாக தொடர்புப்படுத்திக் கொள்ளமுடியாது. அப்படியாக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை", என்று இந்து தமிழ் திசை கூறியுள்ளது.

முழு விமர்சனம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)