You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.நா.வில் எதிரொலித்த இந்தியா - கனடா மோதல்: ஜெய்சங்கர் என்ன பேசினார்?
ஐ.நா. சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் அதனை காலவரையின்றி தள்ளிப் போட முடியாது என்றும் ஐ.நா. பொதுச்சபையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது போன்றவை அரசியல் வசதிக்கேற்ப மாறிவிடும் என்று எண்ணக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். அவரது உரையில் ஐ.நா. சீர்திருத்தம், கனடாவுக்கு மறைமுக பதிலடி என்பன போன்றவை இடம் பெற்றிருந்தன.
பாரத் என்று குறிப்பிட்டு பேச்சை தொடங்கிய ஜெய்சங்கர்
நியூயார்க் நகரில் நடைபெற்ற 78-வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று அவர் கூறிப்பிட்டார். , "பாரதத்தில் இருந்து நமஸ்தே " என்று உரையைத் தொடங்கிய அவர், ஐ.நா. சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"ஐ.நா. பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் அவசியம்"
மாறி வரும் உலகிற்கு ஏற்ப ஐ.நா.விலும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் அந்த விவகாரத்தை காலவரையின்றி தள்ளிப் போடவோ, பேசாமல் இருக்கவோ முடியாது என்றும் அவர் கூறினார்.
"ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை உறுப்பினராக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அதன் மூலம், ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் குரலும் உலக அரங்கில் ஒலிக்கிறது. இது முன்பே தரப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.
சீர்திருத்தத்தின் பாதையில் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை, அதற்கும் முன்பே தொடங்கப்பட்ட ஒப்பீட்டளவில் மிகவும் பழைய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்பு கவுன்சிலை சம காலத்திற்கேற்ப மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பரந்துபட்ட பிரதிநிதித்துவம் என்பது செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டிற்கும் அவசியம்." என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
"சில நாடுகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது"
உலக நடப்புகளில் ஆதிக்கம் செலுத்த முயலும் சில நாடுகளை மறைமுகமாக சாடிய ஜெய்சங்கர், "உலகம் விதிகளின் அடிப்படையில் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று விவாதங்களில் நாங்கள் அடிக்கடி பரிந்துரைக்கிறோம். இன்றும் சில நாடுகள் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கின்றன மற்றும் விதிமுறைகளை வரையறுக்க முயல்கின்றன. இது காலவரையின்றி தொடர முடியாது.
நாம் அனைவரும் ஒருமித்து செயல்பட்டால், ஒரு நியாயமான, சமமான மற்றும் ஜனநாயக ஒழுங்கு நிச்சயமாக வெளிப்படும். அதற்கான ஒரு தொடக்கமாக, விதிகளை உருவாக்குபவர்களை அதனை கையில் எடுப்பவர்களுக்கு அடிபணியச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, விதிகள் அனைவருக்கும் சமமாக பொருந்தும் போது மட்டுமே செயல்படும்." என்று அவர் கூறினார்.
"அரசியல் தேவைக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்பு மாறாது"
மேலும் தொடர்ந்த ஜெய்சங்கர், "பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கான பதில்களை அரசியல் வசதிக்கேற்ப தீர்மானிக்கலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இதேபோல், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதது போன்ற விவகாரங்களில் தேர்ந்தெடுத்து சரி, தவறை தீர்மானிக்க முடியாது. உண்மையான ஒற்றுமை இல்லாமல், உண்மையான நம்பிக்கை இருக்க முடியாது என்பது குளோபல் தெற்கின் உணர்வு." என்று அவர் கூறினார்.
'இந்தியா அதாவது பாரத்' என்று உரையை முடித்த ஜெய்சங்கர்
"அடுத்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை எதிர்கால உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. பாதுகாப்பு சபை விரிவாக்கம் மட்டுமின்றி, மாற்றம், நேர்மை மற்றும் பலதரப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையுடன் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்." என்றார் அவர்.
மேலும் தொடர்ந்த ஜெய்சங்கர், "ஜனநாயகத்தின் பண்டைய மரபுகள் ஆழமான நவீன வேர்களைத் தாக்கிய சமூகத்திற்காக நான் பேசுகிறேன். அதனால், எங்கள் சிந்தனை, அணுகுமுறைகள், செயல்கள் ஆகியவை உண்மையானவை.
இதன் விளைவாக, நமது சிந்தனை, அணுகுமுறைகள் மற்றும் செயல்கள் இப்போது மிகவும் அடிப்படை மற்றும் உண்மையானவை. நவீனத்தை தழுவிய நாகரீக சமூகமாக, பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் சமமாக நம்பிக்கையுடன் இங்கே எடுத்துரைக்கிறோம். இந்த இணைவுதான் இன்று இந்தியாவை, அதாவது பாரதத்தை வரையறுக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்