புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன?

    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன்.

"நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

சற்று நேரத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுடனான வேறொரு உரையாடலில், ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "எங்கள் இந்திய நண்பர்கள் கவலைப்படுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை வாங்க விரும்புகிறோம்," என்றார்.

இதுவொரு தற்செயல் நிகழ்வா அல்லது இந்தியாவும் ரஷ்யாவும் முற்றிலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? அல்லது உலகுக்கு எதைக் காட்ட வேண்டும் என்பதில் இரு நாடுகளின் சிந்தனையிலும் வேறுபாடு உள்ளதா?

பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் பற்றி இந்திய அதிகாரிகள் அதிகம் பேசாவிட்டாலும், பெஸ்கோவ் அது குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

எஸ்யு-57 போர் விமானம் பற்றிய விவகாரம் இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அவர் கூறினார். எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்புகள் குறித்து இரு நாடுகளின் 'உயர்மட்ட தலைவர்கள்' இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

எனவே, புதினின் இந்தப் பயணம் மூலம் இந்தியா இழப்பதும் பெறுவதும் என்ன? ரஷ்யா எதை அடைய விரும்புகிறது? அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்தும்?

மூலோபாய உறவுகளில் இருந்து தொடக்கம்

இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு 'சிறப்பு மூலோபாய கூட்டாண்மை' என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளன. இதன் கீழ், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 'வருடாந்திர உச்சி மாநாடு' நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது.

இதில், இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுழற்சி முறையில் ஒருவர் மற்றொருவர் நாட்டில் சந்தித்து வருகின்றனர். இந்திய அரசின் கூற்றுப்படி, இதுவரை 22 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

இந்தியாவும் ரஷ்யாவும், ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக இந்தியா கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் இருப்பதாக இந்தியா கூறுகிறது.

இருப்பினும், 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. 2023இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில், இரு நாடுகளின் தலைவர்களும் 2022இல் ஐந்து முறையும், 2023இல் இரண்டு முறையும் தொலைபேசியில் பேசினர். ஜூலை 2024இல் பிரதமர் நரேந்திர மோதியும் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார்.

முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் கூற்றுப்படி, இரு நாடுகளின் மீதும் அழுத்தம் இருப்பதால் தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன.

பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், சஷாங்க், "யுக்ரேன் பிரச்னையில் தீர்வு காணப்படாததால் ரஷ்யா மேற்கு நாடுகளின் அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் அதிக நம்பிக்கையுடன் பணியாற்ற விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆனால் அமெரிக்காவை கோபப்படுத்தாமல் இருக்க, அதை ஒரு பெரிய விஷயமாக மாற்ற விரும்பவில்லை. எனவே, பல புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், பழைய ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதைப் போல விஷயங்கள் காட்டப்படலாம்," என்று கூறினார்.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

பாதுகாப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அதிகாரி, "தலைவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வழக்கப்படி, உச்சி மாநாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதற்கு நேரம் ஆகலாம்," என்று கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு நடக்கும் முதல் உச்சி மாநாடு இது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த மோதலின்போது, இந்திய விமானப் படை ரஷ்யாவின் எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்பின் செயல்பாட்டை வெளிப்படையாகப் பாராட்டியது.

இந்தியா-ரஷ்யாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸின் துல்லியமான செயல்பாட்டையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

இன்றும் ரஷ்ய வடிவமைப்பில் உருவான சுகோய்-30 எம்.கே.ஐ. விமானம்தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானமாக உள்ளது.

ஆனால், அந்த மோதலுக்குப் பிறகு, சீனா 40 ஐந்தாம் தலைமுறை ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களைத் தருவதாக உறுதியளித்து இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் இந்தியாவிடம் இல்லை.

இது தவிர, இந்திய விமானப் படை தனது '42 ஸ்க்வாட்ரன்' பலத்தை முழுமையாகப் பெற உடனடியாக அதிக போர் விமானங்கள் தேவை. இந்திய விமானப் படையில் தற்போது 30 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன. பொதுவாக, ஒரு ஸ்க்வாட்ரனில் 18 போர் விமானங்கள் இருக்கும்.

இந்தக் காரணங்களால் மேம்பட்ட ரஷ்யாவின் எஸ்யு-57 ஜெட் பற்றிய விவாதங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

பாதுகாப்புக் கூட்டணியில் நிலவும் சிக்கல்கள்

ஆனால், இந்தியா, ரஷ்யாவின் பாதுகாப்புக் கூட்டணியில் சில குறைபாடுகளும் வெளிப்பட்டுள்ளன.

"எஞ்சியுள்ள எஸ்-400 விநியோகங்களை விரைவுபடுத்துமாறு இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தும்," என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவது குறித்து ரஷ்யாவிடம் உறுதியான வாக்குறுதியை இந்தியா எதிர்பார்க்கிறது.

"இது இந்த ஆண்டு வர வேண்டியிருந்தது, ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகள்படி, இந்தியாவின் ஆயுதங்களுக்கான மிகப்பெரிய ஆதாரமாக இன்னமும் ரஷ்யாதான் உள்ளது. 2020 முதல் 2024 வரை இந்தியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36% ஆக இருந்தது.

இருப்பினும், இது 2010-2014 உடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவு. அப்போது அதன் பங்கு 72% ஆக இருந்தது. "இந்தியா இப்போது ஆயுத விநியோகத்திற்காக மேற்கு நாடுகளை, குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது," என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில் மற்றொரு மாற்றம் நடந்து வருகிறது.

முன்னர் வாங்குபவர் மற்றும் விற்பவர் என்ற அளவில் உறவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் கூட்டறிக்கைப்படி, இப்போது இந்தக் கூட்டாண்மை கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நகர்கிறது.

இந்தியாவில் உதிரி பாகங்களின் கூட்டு உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னர் அவற்றை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

வர்த்தக உறவுகள்

அரசு புள்ளிவிவரங்களின்படி, 2024-25ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியது.

இதில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இதில் மருந்துகள், இரும்பு, எஃகு ஆகியவை அடங்கும். மீதமுள்ளவை அனைத்தும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள் போன்றவை அடங்கிய இறக்குமதிகள்.

"இந்திய பொருட்களின் இறக்குமதியைப் பொருத்தவரை, வரிகள் போன்ற தடைகள் இருப்பதால், தற்போது எங்களால் அதிக பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் ரஷ்யா உள்பட யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தச் சிக்கல்கள் குறையும்," என ஒரு இந்திய அதிகாரி தெரிவித்தார்.

"இந்தியாவின் மருந்துகள், விவசாயப் பொருட்கள், அன்றாடப் பொருட்கள், கடல் உணவுகள், உருளைக் கிழங்கு, மாதுளை ஆகியவை ரஷ்யாவை அடைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இது தவிர, இந்திய தொழிலாளர்கள் அங்கு செல்வது குறித்து ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது," என்று கூறினார்.

அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில் பணிபுரியும் ராஜோலி சித்தார்த்த ஜெயபிரகாஷ், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறார்.

அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்தங்கள் தவிர, "ரஷ்யாவில் தனக்கான சந்தையைக் கண்டறிய இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். ரஷ்யாவுக்கு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

மேற்குலகத் தடைகள் காரணமாக அவை எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் சீனா ஏற்கெனவே அங்கு உள்ளது மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்பதால், அதன் நிலைமை வலுவாக உள்ளது," என்று கூறினார்.

எண்ணெய் கொள்முதல் மற்றும் இந்தியா மீதான அழுத்தம்

யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்தது ஒரு பெரிய மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதலின் கதை.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின்படி (GTRI), 2021 வரை ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. ஆண்டு இறக்குமதி சுமார் இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் என்றும் இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 52.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மேலும் ரஷ்யாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 37.3%ஐ எட்டியது.

யுக்ரேன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைக் குறிவைத்தார். இதனால் அமெரிக்கா, இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தது. அதன் பிறகு மொத்த வரி 50 சதவிகிதம் ஆனது. இது இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித் திறனைப் பாதித்தது. இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா கூறியது.

ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோதி தனக்கு உறுதி அளித்ததாக சமீபத்திய மாதங்களில் டிரம்ப் கூறியுள்ளார். மறுபுறம், இந்த முடிவு வணிகரீதியான ஒன்றாக இருக்கும் என்று இந்தியா கூறியது.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 31.8% ஆகக் குறைந்துள்ளது. பெஸ்கோவ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், ரஷ்யா 'எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியும்' என்று மாஸ்கோவில் பேசியபோது கூறினார்.

உரங்களுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலை

இந்தியா உரம் வாங்குவதற்கான ஒரு பெரிய ஆதாரமாக ரஷ்யா விளங்குகிறது.

ரஷ்யாவின் அரசு வங்கியான ஸ்பெர்பேங்க் வங்கியின் தரவுகள்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவில் இருந்து 4.7 மில்லியன் டன் உரத்தை வாங்கியது. இது 2021ஆம் ஆண்டைவிட 4.3 மடங்கு அதிகம். இந்தச் சார்புநிலை விரைவில் முடிவுக்கு வரப் போவதில்லை.

கடந்த உச்சி மாநாட்டின் கூட்டறிக்கைப்படி, ரஷ்யாவில் இருந்து உரங்களை "நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது மற்றும் இதற்காக 'நிறுவனங்களுக்கு இடையிலான நீண்ட கால ஒப்பந்தங்கள்" திட்டமிடப்பட்டுள்ளன.

இவைபோக, நிபுணர்கள் கவனிக்கும் முக்கியமான பிரச்னைகள் என்ன?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க், "பயணிகள் அல்லது ராணுவ விமானங்களை இணைந்து தயாரிப்பது போன்ற துறைகளில் ரஷ்யா இந்தியாவுக்கு தொழில்நுட்பம் வழங்கத் தயாராக இருந்தால், அது ஒரு வழியாக இருக்கலாம்.

இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் சுயச்சார்பு இலக்கிற்கு உதவும் மற்றும் ரஷ்யாவுக்கு ஒரு பெரிய சந்தையை வழங்கும். தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பார்த்தால், ரஷ்யா இந்தியாவுக்கு கொடுக்கக் கூடியதை மிகக் குறைவான நாடுகளால் மட்டுமே கொடுக்க முடியும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு