இந்தியா மீதான வரிக்கு 'டிரம்பின் ஈகோ' காரணமா? - ரகுராம் ராஜனின் கருத்துக்கு ஆய்வாளர்கள் விளக்கம்

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், இந்தியா-அமெரிக்கா உறவுகள் மற்றும் அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரிகள் குறித்துப் பேசுகையில், டிரம்ப் விதித்த வரிகளின் மையப்புள்ளி என்பது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது இல்லை, மாறாக இது ஆளுமைகளுக்கு இடையேயான மோதல் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்த ஒரு உரையாடலின்போது ரகுராம் ராஜன் கூறிய இந்தக் கருத்து விவாதங்கள் மற்றும் சர்ச்சையின் மையமாக உள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது அல்ல, மாறாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின்போது ஏற்பட்ட போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்பட்டதை இந்தியா ஏற்க மறுத்ததே அடிப்படைக் காரணம் என்று ரகுராம் ராஜன் கடந்த வாரம் கூறினார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் ஜூலை 30, 2025 அன்று அறிவித்தார்.

அதன் பிறகு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகக் குற்றம் சாட்டி, கூடுதலாக 25 சதவீத அபராத வரி விதிப்பதாக அவர் அறிவித்தார், இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வந்தது.

மருந்துகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சில தயாரிப்புகளைத் தவிர்த்து, இந்த வரி பெரும்பாலான தயாரிப்புகளுக்குப் பொருந்தும், மேலும் இந்த வரியால் இந்தியாவின் ஜவுளி மற்றும் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரகுராம் ராஜன் என்ன கூறினார்?

அமெரிக்கா இந்தியா மீது விதித்த இந்த வரிக்கு அடிப்படைக் காரணம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது அல்ல, மாறாக ஆளுமைகளுக்கு இடையேயான மோதலே என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன், "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது மையப் பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை, இங்குள்ள பிரச்னை ஆளுமைகளுக்கு இடையேயான மோதல் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணித்ததற்கானப் பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற விரும்பினார், ஆனால் இந்திய அரசு டிரம்ப்பின் கூற்றை ஏற்கவில்லை, இதன் காரணமாக வெள்ளை மாளிகை இந்தியா மீது கோபமடைந்தது என்று ரகுராம் ராஜன் கூறினார்.

ரகுராம் ராஜன், "டிரம்ப் அமைதியை ஏற்படுத்தியதாகக் கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் காரணமாகவே இந்தியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன" என்றார்.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் தனக்கு சாதகமாக செயல்பட்டு டிரம்ப்பின் கூற்றை ஏற்றுக்கொண்டது என்றும், இதன் விளைவாகப் பாகிஸ்தான் மீது இந்தியாவை விடக் குறைவான வரிகள் விதிக்கப்பட்டன என்றும் ராஜன் கூறினார்.

அமெரிக்கா பாகிஸ்தானின் தயாரிப்புகளுக்கு 19 சதவீத வரி விதித்துள்ளது, இது இந்தியாவை விட மிகவும் குறைவு.

டிரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு மாறுபட்ட விகிதங்களில் பல வரிகளை அறிவித்துள்ளார். ஜூலை 30 அன்று, அவர் 69 நாடுகளுக்குப் பரஸ்பர வரிகளை விதித்தார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கான ஜவுளி ஏற்றுமதி 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

'வரி என்பது பொருளாதாரப் பிரச்னை அல்ல, அரசியல் பிரச்னை'

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரி என்பது பொருளாதாரப் பிரச்னை அல்ல, மாறாக ஒரு அரசியல் பிரச்னை என்றும், இதற்குப் பின்னால் 'கதைக்கூற்று' மற்றும் 'தன்னிலைப்பாடு' (Ego) இருப்பதாகவும் ராஜனின் கருத்து சுட்டிக் காட்டியது.

ரகுராம் ராஜன் பேசுகையில், "டிரம்ப்பின் பங்களிப்பு இல்லாமல் இரு நாடுகளுக்கும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) இடையே ஒரு புரிதல் ஏற்பட்டது என்று வாதிட இந்தியா முயன்றது... உண்மை இரண்டு முனைகளுக்கு இடையில் எங்கோ இருக்கலாம்... ஆனால் இறுதி முடிவு என்னவென்றால், இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது, மேலும் பாகிஸ்தான் மீது 19 சதவீதம் வரி விதிக்கப்பட்டது" என்றார்.

ராஜன், "சுவிட்சர்லாந்தில் உங்கள் தலைவர் டிரம்ப்பிற்கு வரியை விளக்குவதற்கு முயன்றார் என்று எனக்குத் தெரியும், இதைப் பற்றி ஏதோ கருத்து தெரிவிக்கப்பட்டது, அது சரியாக அமையவில்லை. எனவே, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நீண்டகால நோக்கில் அனைத்து தரப்பினரிடமும் புரிதல் ஏற்படும் என்று நம்புகிறோம், மேலும் நாம் அனைவரும் சரியான ஒப்பந்தத்தை எட்டுவோம்" என்று கூறினார்.

ராஜன் தனது கருத்தில் சுவிட்சர்லாந்தின் எந்தத் தலைவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது, மேலும் டிரம்ப் வரியை நீக்க வேண்டும் என்று அது வாதிட்டு வருகிறது.

செய்திகளின்படி, டிரம்ப் வரி விதித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப்புக்கும் சுவிஸ் அதிபர் கரேன் கெல்லர் சூட்டருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் அதன் முடிவுகள் சாதகமாக இருக்கவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பல இந்தியக் குடிமக்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' இன் கீழ் பாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளைத் தாக்கியது.

இந்த மோதலில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே ஒருவருக்கொருவர் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வெவ்வேறு தகவல்களை முன்வைத்தன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தபோது, மே 10 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், மோதலை நிறுத்தாவிட்டால் அதிக வரிகளை விதிப்பதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறிக்கொண்டார்.

அதிபர் டிரம்ப் பலமுறை இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் இதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்தியா இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த மோதலை நிறுத்தியதற்கான பெருமையை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அளித்து, பாகிஸ்தான் அவரது பெயரை நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரையும் செய்தது.

அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி இடையிலான உறவுகள்

டிரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோதியும் பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் உரைகளில் ஒருவரையொருவர் நல்ல நண்பர்கள் என்றும் வலுவான தலைவர்கள் என்றும் கூறி வந்துள்ளனர்.

2019-இல் பிரதமர் நரேந்திர மோதியைக் கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோதி' நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார், மேலும் பிரதமர் நரேந்திர மோதியும் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்ப்பிற்காக 'அப்கி பார் டிரம்ப் சர்க்கார்' என்ற முழக்கத்தைக் கொடுத்தார்.

பிப்ரவரி 2020-இல் ஆமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' பேரணியில் டிரம்ப், 'அமெரிக்கா லவ்ஸ் இந்தியா' (America loves India) என்று கூறினார். மோதியும் டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் 'என் நண்பர்' என பரஸ்பரம் குறிப்பிட்டனர்.

மோதி மற்றும் டிரம்ப்பின் தனிப்பட்ட இணக்கம் இரு நாடுகளின் மூலோபாயக் கூட்டாண்மையின் முகமாகவே கருதப்பட்டது.

அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோதி இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின்போது மோதியும் டிரம்ப்பும் இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்துப் பேசினர், மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்தனர்.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகளில் பதற்றம் காணப்பட்டாலும், டிரம்ப் மோதியை குறிப்பிட தொடர்ந்து 'என் நண்பர்' மற்றும் 'சிறந்த தலைவர்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

ரகுராம் ராஜனின் சமீபத்திய கருத்தின் பொருள் என்ன?

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகள் புதிய வழியில் வரையறுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் சமீபத்திய கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சர்வதேச விவகார நிபுணரும் ஆய்வாளருமான அபிஜித் அயர் மித்ரா, ரகுராம் ராஜன் ஒரு பொருளாதார நிபுணரைப் போலல்லாமல் ஒரு அரசியல்வாதியைப் போலப் பேசுவதால் அவரது கூற்றை அதிகமாகக் கருத்தில் கொள்ளக்கூடாது என்கிறார்.

"ஒருபுறம் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் இருக்கிறார், மற்றொருபுறம் ஒரு அரசியல்வாதியாக முயற்சித்துக்கொண்டிருக்கும் ரகுராம் ராஜன் இருக்கிறார், இவை இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். ராஜன் இந்தியாவின் தற்போதைய நிர்வாகத்தில் யாருடனும் நெருக்கமாக இல்லை, எனவே அவரிடம் ஏதேனும் சிறப்பு உள்-தகவல் இருக்கும் என்று கருதுவது தர்க்கத்திற்கு எதிரானது" என்கிறார் மித்ரா.

இரு நாடுகளின் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், டிரம்ப் மற்றும் மோதி இருவரும் ஒருவருக்கொருவர் இன்னும் சிறந்த நண்பர் என்றே அழைக்கிறார்கள் என்று மித்ரா கூறுகிறார்.

"டிரம்ப் இன்றும் மோதியை 'சிறந்த நண்பர், சிறந்த தலைவர்' என்றுதான் நினைவில் கொள்கிறார், எனவே இங்கே எந்த ஆளுமை மோதலும் இல்லை" என்கிறார் மித்ரா.

அதே சமயம், சர்வதேச விவகார நிபுணரான ரோபிந்தர் சச்தேவ்வும், டிரம்ப் இந்தியா மீது வரி விதித்ததற்கு எந்தவொரு தனிப்பட்ட மனக்கசப்பும் முக்கியக் காரணம் அல்ல என்று நம்புகிறார்.

சச்தேவ், "ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது, இந்தச் சூழலில் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு 'எளிதான இலக்காக' இருந்தது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வழங்குவதில் தான் கண்டிப்புடன் இருப்பதாக தனது நாட்டுமக்களுக்கு காட்ட டிரம்ப் விரும்பினார், எனவே வரி விதிப்பதற்காக அவர் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்." என்கிறார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிச்சயம் ஒரு பங்கு வகித்ததை ரோபிந்தர் சச்தேவ் ஒப்புக்கொள்கிறார்.

ரோபிந்தர் சச்தேவ், "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் தற்போதைய சூழ்நிலைக்குப் பங்களித்தது, ஆனால் போரை எப்போது நிறுத்துவது என்ற முடிவை இந்தியா சுயமாகவே எடுத்தது." என்கிறார்.

இந்த நிகழ்வுகள் இருந்தாலும், பல துறைகளில் அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு நிலைத்திருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

மித்ரா, "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அரசியல் உறவுகள், அரசியல் நம்பிக்கை, பாதுகாப்பு நம்பிக்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை நம்பிக்கை, இவை அனைத்தும் நிலைத்திருக்கின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் குறித்து இருக்கும் மோதல் புதியது அல்ல, மேலும் வர்த்தகம் மட்டுமே இரு நாடுகளின் உறவுகளை வரையறுக்கவில்லை." என்கிறார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தனது தேசிய நலன் என கூறியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

"டிரம்ப் மற்றும் மோதி ஆகிய இரு தலைவர்களும் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளின் சாராம்சம் இதுதான்," என்கிறார் மித்ரா.

அமெரிக்கா பலமுறை இந்தியாவை நெருக்கும் முயற்சிகளைச் செய்துள்ளது, தற்போதைய நிலைமை அத்தகைய சூழல்களை நினைவூட்டுகிறது என்று ரோபிந்தர் சச்தேவ் கூறுகிறார்.

ரோபிந்தர், "கடந்த சில மாதங்கள் இந்தியாவிற்கு ஒரு 'எச்சரிக்கையாகவே' உள்ளது, மேலும் அமெரிக்காவுடனான உறவுகளில் கட்டாயப்படுத்துதல் மற்றும் அழுத்த அரசியல் பற்றிய நினைவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் ஒரு 'புதிய இயல்பான' நிலையில் இருக்கும் - உறவுகள் ஆழமாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில் இந்தியா மற்ற கூட்டாண்மைகள் மற்றும் விநியோகச் சங்கிலி வாய்ப்புகளையும் வலுப்படுத்தும்." என்கிறார்.

"உலகளாவிய அரசியல் மற்றும் உறவுகள் புதிய வழியில் வரையறுக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்தியா தனது தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் இப்போது ஒரு புதிய இயல்புநிலை இருக்கும். உலகில் ஒரு புதிய ஒழுங்கு உருவாகி வருகிறது," என்று சச்தேவ் கூறுகிறார்.

வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை

இதற்கிடையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதற்கிடையில், இந்தியா அமெரிக்காவில் அரிசியைக் குவித்து வருவதாகவும், இது தொடர்ந்தால் இந்திய அரிசிக்குக் கூடுதல் வரி விதிக்கலாம் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆய்வாளர்கள் இதையும் இந்தியா மீது அழுத்தம் கொடுக்கும் டிரம்பின் உத்தியாகவே பார்க்கிறார்கள்.

அபிஜித் அயர் மித்ரா, "பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அரிசி குறித்து கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலும் ஒரு உத்திரீதியான நகர்வு, பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி, இதை இந்தியா ஒரு மூலோபாய நெருக்கடியாகக் கருதக்கூடாது. டிரம்ப் செயல்படும் விதம் இப்படித்தான்" என்கிறார்.

ரோபிந்தர் சச்தேவ், "வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியாவிற்கு விவசாயத் துறையைத் திறக்காமல் இருப்பது, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பது மற்றும் தரவு உள்ளூர்மயமாக்கல் போன்ற எல்லைகள் உள்ளன. இவற்றில் இந்தியா உறுதியாக இருக்கும். ஒரு விதத்தில், டிரம்ப் 'மோதி என் சிறந்த நண்பர்' என்று கூறுகிறார், மோதியும் டிரம்ப்பை நண்பர் என்று அழைக்கிறார், ஆனால் இரு நாடுகளின் கொள்கைகளும் ஒருங்கிணைய முடியவில்லை என்று கூறலாம்" என்கிறார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடரும் பேச்சுவார்த்தை, உலகளாவிய மாற்றத்தின் இந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளின் உறவுகள் எந்தத் திசையை எடுக்கிறது என்பதைப் பெரும்பாலும் தெளிவுபடுத்தும்.

இருப்பினும், இரண்டு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உறவுகள் வெளியுறவுக் கொள்கை அல்லது தேசியக் கொள்கையை அதிக அளவில் பாதிக்காது என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு