You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தண்டவாளத்தில் பேசிக்கொண்டே சென்ற காதலர்கள் ரயில் மோதி உயிரிழப்பு - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (13/02/2025) நாளிதழ்களில் வெளிவந்த முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் ரயில்தடத்தில் பேசிக்கொண்டே சென்ற காதலர்கள் இருவர், ரயில் மோதி உயிரிழந்துள்ளனர் என்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் தடத்தில் வந்துகொண்டிருந்த ரயிலை கவனிக்காமல், அது தொடர்ந்து எழுப்பிய ஒலியையும் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு சென்றதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "கடலூரை சேர்ந்த விக்ரம் 21, ஆதி லக்ஷ்மி 22 காட்டுமன்னார்கோயிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். கடந்த ஆண்டு படிப்பை முடித்த பிறகு, வேலை தேடி சென்னைக்கு வந்தனர். தாம்பரத்தில் தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றினார், ஆதி லக்ஷ்மி கிண்டியில் திருமண இணையதளம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
பெருங்களத்தூரில் இரு வேறு விடுதிகளில் தங்கி வந்த அவர்கள் , வழக்கமாக தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கு பேருந்தில் செல்வர். அதன் பின் ரயில் தடத்தைக் கடந்து விடுதிகளுக்கு செல்வர்.
செவ்வாய்கிழமை இரவு தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, சென்னை செங்கல்பட்டு-கடற்கரை இடையேயான புறநகர் ரயில் அதி வேகமாக வந்துகொண்டிருந்ததை கவனிக்கத் தவறிவிட்டனர். இவர்களை எச்சரிப்பதற்காக ஓட்டுநர் தொடர்ந்து எழுப்பிய ஒலியை அவர்கள் உரிய நேரத்தில் கவனிக்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையின் போது அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு தங்களுக்குத் தெரியும் என்று கூறிய பெற்றோர்கள் அவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். அவர்கள் கவனிக்காமல் பேசிக்கொண்டு சென்றதாலேயே இந்த விபத்து நடந்திருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்"
இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?
- பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்
- திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?
- ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?
சென்னையில் ஏசி புறநகர் மின்சார ரயில் அறிமுகம்
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் ஏ சி மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவு பாதையில் ஏசி மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் கடந்த 2019-ம் ஆண்டு தெற்கு ரயில்வே அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த ரயில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. முதல் பெட்டி முதல் கடைசி பெட்டி வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 1,116 பேர் அமர்ந்தபடி, நின்று கொண்டு 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்கலாம்.
பயணிகள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் தகவல் அறிவிப்புப் பலகைகள், ஒலிபெருக்கி, தானியங்கி கதவுகள் கொண்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளது, இதற்கான கட்டணத்தைத் தெற்கு ரயில்வே அறிவிக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல்
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் மேலாகிவிட்ட நிலையில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களால் அந்தச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு அதிக சுமைகொண்டதாகிவிட்டதுடன், அதை புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது.
எனவே, 622 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் புதிதாக எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பழைய சட்டத்தில் உள்ள 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற வார்த்தையும் கைவிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக மக்களவைச் செயலகத்தின் சுற்றறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகம்: அமைச்சர்
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியான 28% விட அதிகமாக இருப்பதாக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளதாக, 'டிடி நெக்ஸ்ட்' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், " 2030-ம் ஆண்டுக்குள் தேசிய சாராசரியை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போதே உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 48%க்கும் அதிகமாக உள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டில் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக உள்ளது.
புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி மூலம் கல்வியின் தரத்தை அதிகரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் 38% ஆக உள்ளன. இதுவும் தேசிய சராசரியை விட அதிகம். அதேபோன்று, தமிழ்நாட்டில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா? கேள்வி எழுப்பிய இலங்கை முன்னாள் அமைச்சர்
இலங்கையில் அனைத்து பிரச்னைகளுக்கும் குரங்குகளை குற்றம் சொல்வதால், அவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிருக்கிறதா என்று இலங்கையின் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார் என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த அரசாங்கத்தில் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் காணப்பட்டன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின்போது இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம். இதன் பின்னணியில் தான் சகல பிரச்னைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் விநியோகத்தில் காணப்படும் சிக்கலே இதற்கான காரணமாகும். நுரைச்சோலையில் மின் பிறப்பாக்கிகள் 3 செயலிழந்துள்ளமையால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 மெகாவோல்ட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. அவ்வாறெனில் அரசாங்கம் முதலில் இந்த பிரச்னைக்கு தீர்வினை வழங்க வேண்டும். மின் சக்தி அமைச்சர் பொறியியலாளர் எனக் கூறுவது நகைச்சுவையாகவுள்ளது" என கூறியுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)