You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பை: சூப்பர்-8 சுற்றில் போட்டிகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன? புதிய விதிமுறைகள் பற்றிய எளிய விளக்கம்
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்று வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை சூப்பர்-8 சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் தரநிலை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையின் அடிப்படையிலேயே அணிகளுக்கு இடையேயான போட்டி தீர்மானிக்கப்படும்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்த முறை 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தங்கள் குழுவுக்குள் மோதிக்கொள்ளும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஐசிசியின் புதிய விதிமுறை என்ன?
சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் மோதுக் கொள்வதற்கு ஐசிசி இந்த முறை புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, சூப்பர்-8 சுற்றை அடைவதற்கு முன்பே தகுதிபெற்றுள்ள 8 அணிகளுக்கும் அந்தந்த அணிகளின் தரவரிசையைப் பொருத்து தரநிலையை வழங்கியுள்ளது.
ஐசிசி அமைப்பு டி20 தரவரசையின்படி, அணிகளுக்கு தரநிலையை டி20 உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது. அந்த வகையில்
இந்தியா(ஏ1), பாகிஸ்தான்(ஏ2)
இங்கிலாந்து(பி1), ஆஸ்திரேலியா(பி2),
நியூசிலாந்து(சி1), மேற்கிந்தியத்தீவுகள்(சி2)
தென் ஆப்ரிக்கா(டி1), இலங்கை(டி2)
என டி20 தரவரிசைக்கு ஏற்ப தரநிலை வழங்கப்பட்டது.
இந்த தரநிலையை அடிப்படையாக வைத்துதான் இந்த சூப்பர்-8 சுற்று நடக்கப் போகிறது. மற்ற சிறிய அணிகளுக்கு தரநிலை வழங்கப்படவில்லை. ஒருவேளை அந்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றால், தரநிலையில் இருந்தும், சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறாத அணியின் இடம் வழங்கப்படும்.
உதாரணமாக, தரவரிசையில் இடம் பெற்ற பாகிஸ்தானுக்கு ஏ2 நிலை வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை ஆதலால், ஏ2 தரநிலை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. சி1 நிலை நியூசிலாந்துக்கு தரப்பட்டிருந்தது, ஆனால், அந்த அணி தகுதி பெறாத நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
அதேசமயம், குரூப் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி ஐசிசி வழங்கிய தரநிலையில் 2-ஆவது இடத்தில் இருந்தாலும் சூப்பர்-8 சுற்றில் முதலிடத்தைக் கோர முடியாது, அதற்கு 2வது இடம்தான்.
அதாவது, சூப்பர்-8 சுற்றுக்கு பி பிரிவில் இருந்து பி1 இங்கிலாந்து, பி2 ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றிருந்து. குரூப் சுற்றில் தரநிலையில் பி2 அணியான ஆஸ்திரேலியா முதலிடம் பெற்றிருந்தது. தரநிலையில் பி1 அணி இங்கிலாந்து 2வது இடம் பெற்றது. குரூப் சுற்றில் முதலிடம் பெற்றதற்காக சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு பி1 இடம் வழங்கப்படாது. அதற்கு ஐசிசி வழங்கிய பி2 இடம்தான். இந்த இடங்களின் அடிப்படையில்தான் சூப்பர்-8 சுற்றில் மற்ற அணிகளுடன் மோதும்.
சூப்பர்-8 சுற்றில் போட்டிகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன?
சூப்பர்-8 சுற்றுக்கு 8 அணிகளும் தகுதி பெற்றநிலையில் ஐசிசி வழங்கிய தரநிலையின் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் மோதிக்கொள்ளும். அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
அந்த வகையில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஏ1(இந்தியா), பி2(ஆஸ்திரேலியா), சி1(ஆப்கானிஸ்தான்), டி2(வங்கதேசம்) ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப்-2 பிரிவில் ஏ2(அமெரிக்கா)பாகிஸ்தான் இல்லாத நிலையில் அமெரிக்காவுக்கு ஏ2 இடம். பி1(இங்கிலாந்து), சி2(மேற்கிந்தியத்தீவுகள்), டி1(தென் ஆப்ரிக்கா) அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அடிப்படையில் அணிகள் பிரி்க்கப்பட்டு, ஒவ்வொரு குரூப்பிலும் இடம் பெற்ற அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் மோதிக்கொண்டு முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி மோதும் ஆட்டங்கள்
அந்த வகையில் இந்திய அணி(ஏ1), பி2(ஆஸ்திரேலியா(ஜூன் 24)), சி1(ஆப்கானிஸ்தான், (ஜூன் 20)), டி2(வங்கதேசம் (ஜூன் 24)) அணிகளுடன் மோத உள்ளது. சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
முக்கிய அணிகள் இல்லாத டி20 உலகக் கோப்பை
இந்த முறை டி20 உலகக் கோப்பையில் ஒரு சில போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகின. கத்துக்குட்டி அணிகளிடம் முன்னாள் சாம்பியன்கள் அணிகள் தோற்று, லீக் சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றோடு வெளியேறிவிட்டன. இந்த அணிகள் தரவரிசையில் இடம் பெற்றிருந்த போதிலும் லீக் சுற்றில் சந்தித்த அதிர்ச்சிகரமான முடிவுகளால் லீக் சுற்றோடு வெளியேறி, இந்த அணிகள் இல்லாத உலகக் கோப்பை நடக்க உள்ளது.
சூப்பர்-8, அரையிறுதி, பைனலில் மழை பெய்தால் முடிவு எப்படி?
சூப்பர்-8, அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் மழை பெய்தால் அல்லது மோசமான வானிலை இருந்தால் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, முடிவு காணப்படும்.
அதேபோல முதல் அரையிறுதிக்கும், இறுதி ஆட்டத்துக்கும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால், 2-ஆவது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் இல்லை. அதாவது இறுதிப் போட்டிக்கும், 2-ஆவது அரையிறுதிக்கும் இடையே ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால், ரிசர்வ் நாள் இல்லை.
ஒவ்வொரு அரையிறுதி ஆட்டத்துக்கும் 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதி வரும் 26-ஆம் தேதியும், கூடுதல் நேரமாக ஒரு மணிநேரமும், மழையால் ஆட்டம் நடக்காவிட்டால் மறுநாள் போட்டியை நடத்திக்கொள்ள 190 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுநாள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
2-ஆவது அரையிறுதி 27-ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் போட்டி நடக்கும் நேரத்தைவிட கூடுதலாக 250 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மறுநாள் போட்டி நடத்த ரிசர்வ் நாள் வழங்கப்படவில்லை.
இறுதிப் போட்டிக்கு ஜூன்30-ஆம் தேதி ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்குத் தொடங்கி, 190 நிமிடங்களில் ஆட்டம் நடத்தி முடிக்கப்படும்.
முதல் அரையிறுதி, இறுதிப்போட்டியில் தலா 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டால், ரிசர்வ் நாளில் புதிதாக ஆட்டம் நடத்தப்படாது. எந்த ஒவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அந்த ஓவரிலிருந்து ஆட்டம் மீண்டும் தொடங்கும்.
அரையிறுதி ஆட்டங்கள் நடத்தவிடாமல் காலநிலை இருந்தால், குரூப் சுற்றில் முதலிடம் பிடித்து சூப்பர்-8 சுற்றுக்குமுன்னேறிய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். சூப்பர் ஓவர் நடத்தப்படும் சூழலிலும் மழை குறுக்கிட்டாலும் இதே முறைதான் செயல்படுத்தப்படும்.
இறுதி ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டால், அல்லது காலநிலை போட்டி நடத்த ஏதுவாக இல்லாவிட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)