You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் - ஏன்? என்ன நடந்தது?
- எழுதியவர், சமீர் கான்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை 'சந்தாரா' என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது.
இதனிடையே, மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதி பூண்டதற்காக, அச்சிறுமி 'கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்' இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமண மதத்தை பின்பற்றுவோர், முதுமை, தீராத நோய் அல்லது வாழ விருப்பம் அற்றுப் போகும்போது உண்ணா நோன்பிருப்பது சந்தாரா என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், இந்த மூன்றரை வயது குழந்தை அவருடைய சொந்த விருப்பத்தால் இந்த விரதத்தைக் கடைபிடித்திருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துவருகின்றன.
இந்த விஷயத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் மத்திய பிரதேச குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இதுதொடர்பாக இந்தோர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குழந்தையின் தாயார் கூறியது என்ன?
தங்கள் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோதும் அவர் உடல்நிலை சரியாகவில்லை என்றும், சமண மத ஆன்மீக தலைவரின் (Munishri) அறிவுரைப்படி சந்தாரா விரதத்தை எடுக்க வைத்ததாகவும், அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின் கூறியுள்ளார்.
குழந்தையின் தாயார் வர்ஷா ஜெயினும், தன் மகளை சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க வைத்ததை நியாயப்படுத்தினார்.
2021 நவம்பர் 20 அன்று பிறந்த குழந்தை வியானா, இந்த ஆண்டு ஜனவரி முதல் தலைவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக குழந்தையின் தாயார் வர்ஷா ஜெயின் கூறினார். மருத்துவ பரிசோதனைகளில் குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதன்பின், மும்பையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், அவர் குணமடைந்தார்.
எனினும், மார்ச் 15 முதல் மீண்டும் வியானாவுக்கு தலைவலி ஏற்பட்டது. இந்தோரில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அக்குழந்தைக்கு மீண்டும் மூளையில் கட்டி உருவானது தெரியவந்தது. உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது எனக்கூறிய மருத்துவர்கள், மருந்துகளை பரிந்துரைத்ததாக வர்ஷா ஜெயின் கூறியுள்ளார்.
பின்னர் குழந்தையின் உடல்நிலை மோசமாகி, நாளடைவில் சாப்பிடவோ, நீர் அருந்தவோ கூட முடியவில்லை என வர்ஷா ஜெயின் கூறியுள்ளார். மார்ச் 21 அன்று, மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைக்கு உணவுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் உடல்நிலைப் பற்றி மேலும் விவரங்களைத் தெரிவித்த தாய் வர்ஷா ஜெயின், "மார்ச் 21 அன்று குழந்தையை (ஜெயின் துறவி) ராஜேஷ் முனி மகாராஜிடம் அழைத்துச் சென்றோம். குழந்தையின் கடைசி நேரம் நெருங்கிவருவதாக கூறிய அவர், குழந்தையை சந்தாரா விரதத்தை கடைபிடிக்க வைக்க வேண்டுமென்று கூறினார். சந்தாரா விரதம் இரவு 9:55க்கு தொடங்கப்பட்டது, குழந்தை 10:05க்கு இறந்துவிட்டார்." என்று கூறினார்.
ஜெயின் துறவி கூறியது என்ன?
ராஜேஷ் முனி மகாராஜிடம் பிபிசி பேசியபோது, தான் 108 சந்தாரா விரத சடங்குகளை நடத்தியுள்ளதாகவும், சந்தாரா விரத முறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், "வியானாவை என்னிடம் அழைத்து வந்தபோது, அக்குழந்தையின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது புரிந்தது. அதனால் தான் அக்குழந்தையை சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க செய்யுமாறு குழந்தையின் பெற்றோரிடம் கூறினேன்." என்றார்.
"விரதம் மேற்கொண்டவர்களுக்கான உணவு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் என்னிடம் கேட்டார்கள். குழந்தை வியானா தானே விரும்பிக் கேட்டால் அவற்றை கொடுக்கலாம் என்றும், தேவைப்படும் மருந்துகளையும் கொடுக்கச் சொன்னேன், அதனை குழந்தையின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்" என்றார் அவர்.
மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்று அங்கு குழந்தை இறப்பதைவிட, சமண மத முறைப்படி குழந்தை சந்தாரா விரதத்தை மேற்கொண்டு இறப்பது உகந்ததாக இருக்கும் என தாங்கள் நினைத்ததாக குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின் கூறினார்.
இந்த விஷயம் குறித்து பேசிய அனைத்து இந்திய ஜெயின் சமாஜத்தின் தலைவர் ரமேஷ் பந்தாரி, "சந்தாரா விரதச் சடங்கை கடைபிடிக்க வேண்டும் யாரும் வற்புறுத்தப்படுவதில்லை. உயிர்வாழ்வதற்கான அனைத்துக் வழிகளும் முடிந்துபோன நிலையிலேயே இந்த விரதத்தைக் கடைபிடிக்க முடியும், மருத்துவ சிகிச்சையே இல்லாதவர்கள்தான் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்' என அவர் தெரிவித்தார்.
சந்தாரா விரதச் சடங்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தாங்கள் போராடியதாக அவர் கூறுகிறார்.
இதற்கு முன்பும் எழுந்த சர்ச்சை
சந்தாரா என்பது சமண மத நம்பிக்கை, ஆனால் இந்த நடைமுறையை சிலர் எதிர்க்கின்றனர். மனிதநேய கண்ணோட்டத்தில் இந்த நடைமுறையை தற்கொலையின் ஒரு வடிவம் என சிலர் கருதுகின்றனர்.
சந்தாரா நடைமுறைக்கு எதிராக 2006-ல் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்தாரா நடைமுறை தற்கொலைக்கு ஒப்பானதாக இருப்பதாகவும் நவீன யுகத்தில் அதை அங்கீகரிக்கக் கூடாது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சந்தாரா நடைமுறையை கடைபிடிப்பவர்களின் குடும்பத்துக்கு சமூகத்தில் அந்தஸ்து அதிகரிப்பதால், குடும்பங்களில் இந்த நடைமுறை ஆதரிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது.
2015-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக தன் உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, இந்த நடைமுறை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலையை ஊக்குவித்தல்) மற்றும் பிரிவு 309 (தற்கொலை முயற்சி)
ஆகியவற்றின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கூறியது.
எனினும், சமண மதத்தின் பல்வேறு பிரிவுகளின் மனுக்கள் தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தனஜ் தீக்ஷித், "சந்தாரா குறித்துப் பேசினால், சமண மதத்தைக் கடைபிடிப்பவர்கள் அதை புனிதமான நடைமுறையாக பார்க்கின்றனர். இதை கடைபிடிப்பவர்கள் உணவை கைவிட்டு விடுவார்கள். இந்த விவகாரம் ஏற்கெனவே நீதிமன்றத்தின், விசாரணையில் இருந்தது, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சந்தாரா நடைமுறையை தொடர்வதற்கு 2015ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது," என்றார்.
அவர் கூறுகையில், "இது ஒருவருடைய மத விருப்பம் தொடர்பானது என்றும், சட்ட ரீதியாக அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தன்னுடைய உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது" என தெரிவித்தார்.
தனுஜ் தீக்ஷித் கூறுகையில், "இந்த விவகாரத்தில் குழந்தை ஏற்கெனவே மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தது. பிழைப்பதற்கான வழியோ, மருத்துவமோ இல்லை. சந்தாரா விரதச் சடங்கு தொடங்கிய 10 நிமிடங்களில் அக்குழந்தை இறந்துவிட்டது. அந்தக் குழந்தை துன்புறுத்தப்படவில்லை, பசியுடனோ தாகத்துடனோ வைத்திருக்கப்படவில்லை" என்றார்.
காவல்துறை கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் காவல் துறைக்கு வரவில்லை.
இந்தோரின் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தண்டோடியா கூறுகையில், காந்திநகர் காவல் நிலைய பகுதி, அடோரம் காவல் நிலைய பகுதி, தோனி காவல் நிலை பகுதிகளிலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளதி, இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
மத்திய பிரதேச குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் பிபிசியிடம் கூறுகையில், மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்களான பெண் குழந்தையை சந்தாரா கடைபிடிக்க செய்தது குறித்து கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
சந்தாரா நடைமுறையில் ஒருவர் தாமாக விரும்பி விரதம் இருக்க வேண்டும், ஆனால் இந்த மூன்றரை வயது குழந்தை எப்படி அதைச் செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாகவும் இந்தோர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தரும் அறிக்கையின் படி, என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தாரா என்பது என்ன?
யாரேனும் ஒருவரோ அல்லது சமணத் துறவியோ முழு வாழ்வை வாழ்ந்து முடிந்த பின்னர் அல்லது அவருடைய உடல் அவரை ஆதரிப்பதை நிறுத்திவிட்டாலோ, சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது சமண மத நம்பிக்கை.
சந்தாரா நடைமுறை சன்லேகனா (Sanlekhana) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் ஒருவர் உணவை கைவிட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்.
சமண மதத்தில் நம்பிக்கையுள்ள நீதிபதி டிகே டுகோல் எழுதிய 'சன்லேகனா இஸ் நாட் சூசைட்' எனும் புத்தகத்தில், "சந்தாரா என்பது தன்னைத் தானே தூய்மைப்படுத்துதல் என தெரிவித்துள்ளார். இதில் ஒருவர் உறுதிமொழி எடுக்கிறார். மனிதப் பிறவியின் நோக்கம் கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுவதாகும். இதை அடைய சந்தாரா உதவுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யா சமந்தபத்ரா எழுதிய 'ரத்னகரண்ட் ஷ்ரவகச்சார்' (Ratnakarand Shravakachaar) புத்தகத்தில் சந்தாரா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சீடர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமண மதத்தின் முக்கியமான புத்தகமாக இது கருதப்படுகிறது.
வறட்சி, முதுமை அல்லது தீராத நோய் ஏற்பட்டிருக்கும்போது என பல்வேறு சூழல்களில் ஒருவர் சந்தாராவை கடைபிடிக்கலாம் என அப்புத்தகம் கூறுகிறது.
இதை கடைபிடிப்பவர், எல்லோருடைய தவறுகளையும் பரிசுத்தமான மனதுடன் மன்னிக்க வேண்டும் என்றும் எவ்வித மனக்கசப்பும் கொண்டிருக்கக் கூடாது என்றும் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தாரா விரதத்தை கடைபிடிக்க விரும்பினால், அதற்கு அவர்களுடைய மத குரு மட்டுமே அனுமதி வழங்கமுடியும். அதற்கு பின், அந்த நபர் உணவை துறந்துவிடுவார். அதன்பின், மத நூல்கள் வாசிக்கப்பட்டு, பிரசங்கங்கள் நிகழ்த்தப்படும்.
சந்தாரா விரதம் மேற்கொள்பவரை சமண மதத்தை கடைபிடிப்பவர்கள் வந்து சந்தித்து ஆசி பெறுவார்கள். சந்தாராவை கடைபிடித்து இறப்பவர்கள் 'சமாதி' அடைந்ததாக கருதப்படுவார்கள்.
அவரது உடல் பத்மாசன நிலையில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.