You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஐந்தாம் ஓவரில் ஒரு சிக்ஸும் அடுத்த பந்தில் ஒரு ஃபோரும் அடித்த ஜெய்ஸ்வால், பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் மெதுவாக ஆடிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் இறங்கிய ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு பவுண்டரி என தாக்கமின்றி ஆடினார். அதே ஓவரிலேயே ரியான் பராக் தனது விக்கெட்டையும் இழந்தார்.
அடுத்த ஓவர்களில் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்து, ஹேசில்வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 75 ரன்களில் வெளியேறினார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போதும் துருவ் ஜுரெல் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஸ்டிரைக் மாற்றி முக்கிய பங்கு வகித்தார்.
ரன் வேகம் தேவைப்படும் நேரத்தில் ஹெட்மெயர் களத்தில் வந்து, துருவ் ஜுரெலுடன் சேர்ந்து ரன்களை விரைவாக குவிக்க முயன்றார். 17வது ஓவரில் சிக்ஸ் அடித்த துருவ், 19வது ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் அடித்து கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸும், இரண்டு ஃபோரும் அடித்து, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்பேக்ட் பிளேயராக களத்தில் இறங்கிய ஹெட்மெயர் , தனது முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார்.
பெங்களூரு பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதிரடியுடன் தொடங்கிய பெங்களூரு
174 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்த பில் சால்ட், நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஆர்ச்சரின் மூன்றாவது ஓவரிலும் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். மறுபக்கம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதமாக ரன்கள் சேர்க்கும் பணியை கோலி நிதானமாக செய்தார்.
ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலும் பில் சால்ட் தனது அதிரடியை காட்டினார். ஃபோர் மற்றும் சிக்ஸரை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்தனர்.
ஒன்பதாவது ஓவரில் கார்த்திகேய சிங் பந்துவீச்சில், பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரது கேட்ச் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் பட்டது.
அடுத்து களம் இறங்கிய தேவ் தத் படிக்கல், பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 11வது ஓவரில் எந்தவொரு பவுண்டரியும் எடுக்கவில்லை.
இந்நிலையில் விராட் கோலி தனது அதிரடியை தொடங்கி ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். சிக்ஸர், ஃபோர் என அதிரடியாக விளாசிய அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் முடியாமல் தவித்தனர்.
ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா என பல மாற்றங்களைச் செய்தும், கேப்டன் சாம்சனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. கோலியுடன் தேவ் தத் படிக்கலும் அதிரடியை தொடர்ந்து 17.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்கள் மற்றும் தேவ் தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கோலியின் இந்த அரைச்சதம், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100 வது அரைச்சதமாகும்.
இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு