You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோமநாதர் ஆலய கொள்ளை: சிலைகளை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று கஜினி முகமது என்ன செய்தார்?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
கஜினிப் பேரரசை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த அதன் மன்னர் செபுக்டிகின் 997ஆம் ஆண்டில் இறந்தார். தந்தைக்கு பின் அவரது மகன் முகமது அரியணை ஏறினார். மன்னர் செபுக்டிகின் தனது வாரிசாக முகமதுவைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் தனது இளைய மகன் இஸ்மாயிலை தனது வாரிசாக்க விரும்பினார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, அரியணைப் போர் தொடங்கிய நிலையில் யார் வாரிசு என்பதை வாள் தீர்மானித்தது, உயிரிழந்த மன்னரின் விருப்பம் நிறைவேறவில்லை.
தனது தந்தையும் மன்னருமான செபுக்டிகின் இறந்தபோது, முகமது கொராசானில் இருந்தார். தனது சகோதரருக்கு கடிதம் எழுதிய அவர், அரியணையை தனக்கு விட்டுக் கொடுத்தால், பால்க் மற்றும் கொராசான் பிராந்தியங்களின் ஆளுநர் பதவியை வழங்குவதாக தெரிவித்தார்.
மன்னராக வாய்ப்பு இருக்கும் போது ஏன் ஆளுநராக வேண்டும் என்று நினைத்த இஸ்மாயில், முகமதுவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். தனது படையுடன் கஜினியைத் தாக்கி, இஸ்மாயிலைத் தோற்கடித்து கைது செய்த முகமது, 27 வயதில் கஜினியின் அரியணையில் ஏறினார்.
"இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் பொக்கிஷங்கள் நிறைந்திருந்தன. ஆலயங்களை அழிப்பது முகமதுவின் மத ஆர்வத்தைத் திருப்திப்படுத்தியதுடன், அவருக்கு மகத்தான செல்வத்தையும் கொண்டு வந்து சேர்த்தது. இருப்பினும் முகமதுவின் தாக்குதல்களின் நோக்கம் ஒருபோதும் இஸ்லாம் மதத்தைப் பரப்புவதல்ல" என்று ஆபிரகாம் எராலி தனது 'The Age of Wrath' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
32 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த முகமது கஜினி, இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்.
"முகமதுவின் படையெடுப்புகளின் போது தங்கள் உயிரையும் சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாத்திற்கு மாறியவர்கள், அவர் சென்ற பிறகு மீண்டும் தங்கள் மதத்திற்கு திரும்பிவிட்டனர். இந்தியாவின் மீதான முகமதுவின் படையெடுப்புகள் பெரிய அளவில் மத தாக்கத்தை ஏற்படுத்தவில்லை," என்று பிரபல பயணி அல்-பரூனி எழுதுகிறார்.
முகமது படையில் இந்து வீரர்கள்
அவர் தனது நோக்கங்களை அடைய மத ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டார், தனது படையில் அதிக எண்ணிக்கையிலான இந்து வீரர்களைச் சேர்ப்பதில் அவருக்கு எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை.
வடமேற்கு இந்தியாவில் உள்ள கஸ்னவிட் சுல்தானகத்தின் நாணயங்களில் அரபி மொழிமட்டுமல்ல, கூடுதலாக சாரதா எழுத்துகளிலும் எழுதப்பட்டன என்பது ஆச்சரியமாகத் தோன்றலாம்.
பி.எல்.குப்தா தனது 'Coins' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "சுல்தானின் இஸ்லாமிய பட்டத்துடன், நந்தி மற்றும் ஸ்ரீசாமந்த் தேவ் ஆகியோரின் பெயர்களும் நாணயங்களில் பொறிக்கப்பட்டன."
"மத்திய ஆசியாவிற்கு அனுப்பப்பட்ட முகமதுவின் ராணுவத்தில் துருக்கியர்கள், கில்ஜிகள், ஆப்கானியர்கள் மற்றும் இந்தியர்களும் இருந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான முல்தான் முஸ்லிம் ராஜ்ஜியத்தை அழிக்கவோ, அங்கு வாழ்ந்த ஏராளமான இஸ்மாயிலிகளைப் படுகொலை செய்வதிலோ அவர் தயக்கம் காட்டவில்லை. அவர்களின் மசூதிகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 20 மில்லியன் திர்ஹாம் அபராதமும் விதித்தார்." என்று அல்-உத்பி தனது 'தாரிக்-இ-யாமினி' புத்தகத்தில் எழுதுகிறார்.
அடிமைப்படுத்தப்பட்ட மக்கள்
வெற்றியைக் கொண்டாடுவதைவிட செல்வத்தைக் கொள்ளையடிப்பதில் முகமதுவின் வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்தியா மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது, கனவிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு செல்வத்தை அவர்கள் கண்டனர்.
புதையலைக் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல், ஏராளமான இந்திய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகவும் அழைத்துச் சென்றனர்.
அடிமைகளாகப் பிடித்துச் சென்றவர்களை அடிமை வியாபாரிகளுக்கும் விற்றனர். அந்தக் காலத்தில் கோவில் நகரங்களே பிரதானமாக குறிவைக்கப்பட்டன, ஏனெனில் அங்குதான் அபரிமிதமான செல்வம் இருந்தது. இந்தக் கொள்ளை, கஸ்னவிட் நிர்வாகத்தை நடத்தவும், வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் பயன்படுத்தப்பட்டது.
படுகொலை பற்றிய எண்ணிக்கை சரியானதா?
முகமதுவை புகழ்வதற்காக இந்தியாவில் அவர் ஏற்படுத்திய அழிவுகளைப் பெரிதுபடுத்தி சொல்லும் போக்கு வரலாற்றாசிரியர்களிடையே இருந்தது.
"ஒரு தாக்குதலில் 15,000 பேரும், மற்றொரு தாக்குதலில் 20,000 பேரும், சோம்நாத் தாக்குதலில் 50,000 பேரும் கொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. சில மணிநேர சண்டையில், வெறும் வாள்கள், வில் மற்றும் அம்புகளைக் மட்டுமே பயன்படுத்தி இவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை நம்பமுடியவில்லை. இந்த மிகைப்படுத்தலைப் புறக்கணித்தாலும், முகமதுவின் தாக்குதல்கள் பயங்கரமானவை என்பதை மறுக்க முடியாது" என்று ஆபிரகாம் எராலி எழுதுகிறார்.
முகமது தனது எதிரியின் வீரர்களை மட்டுமல்ல, ஏராளமான பொதுமக்களையும் கொன்றார். பெண்களும் குழந்தைகளும் மட்டுமே காப்பாற்றப்பட்டனர், இருப்பினும் சில முறை அவர்களும் அடிமைகளாக்கப்பட்டு கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தியாவில் கஜினி முகமது ஒரு பேரரசை உருவாக்க விரும்பாதது ஏன்?
பிற படையெடுப்பாளர்களைப் போல முகமதுவுக்கு இந்திய நிலத்தின் மீது ஆசையில்லை. அவர் விரும்பியிருந்தால், வட இந்தியாவின் பெரிய பகுதிகளைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் ஒரு பேரரசை உருவாக்கும் பொறுமை அவருக்கு கிடையாது.
இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் சிந்து பிரதேசங்களைத் தவிர, முகமது கஜினி இந்தியாவின் வேறு எந்தப் பகுதியையும் கைப்பற்றவில்லை.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் வோல்ஸ்லி ஹேக் தனது 'கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "இந்தியாவில் முகமதுவின் அனைத்துப் படையெடுப்புகள் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களைப் போல இருந்தன. புயல் போல முன்னேறி, கடுமையான போர்களில் ஈடுபட்டார், கோவில்களை அழித்தார், சிலைகளை உடைத்தார், மகத்தான செல்வத்தைக் கொள்ளையடித்தார், ஆயிரக்கணக்கானவர்களை அடிமைப்படுத்தினார், கஜினிக்குத் திரும்பினார். இந்தியாவில் குடியேற அவருக்கு விருப்பமில்லை, ஒருவேளை இந்தியாவின் வெப்பமான காலநிலை அதற்குக் காரணமாக இருக்கலாம்."
முப்பதாயிரம் குதிரைப் படைகளுடன் நடத்தப்பட்ட தாக்குதல்
இந்தியாவின் சோமநாதர் கோவில் தான் முகமது கஜினி மேற்கொண்ட மிகப்பெரிய மற்றும் கடைசி தாக்குதல் என்று சொல்லலாம்.
சோமநாதர் கோவிலைப் பற்றி அல்-பரூனி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கல்லால் ஆன சோமநாதர் கோவில் முகமதுவின் தாக்குதலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட கோட்டை போன்ற கட்டடத்திற்குள் இருந்தது."
முகமது நாஜிம், ராயல் ஏஷியாடிக் சொசைட்டியில் வெளியிடப்பட்ட 'The Somnath Expedition of Sultan Mahmud of Ghazni' என்ற கட்டுரையில், "சோமநாதர் ஆலயத்தின் மேற்பகுதி பிரமிடு வடிவத்தில் இருந்தது. 13 மாடிகள் உயரமாக இருந்த கோவிலின் குவிமாடங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டவை, வெகுதூரத்திலிருந்தே அவை பிரகாசித்தன. ஆலயத்தின் தரைப்பகுதி தேக்கு மரத்தால் ஆனது" என்று எழுதியுள்ளார்.
1024 அக்டோபர் மாதத்தில், முகமது 30,000 குதிரைப்படைகளுடன் சோம்நாத்தைத் தாக்கப் புறப்பட்டார். கொள்ளையடிக்கும் ஆசையில், வழியில் மேலும் பலர் அவருடன் இணைந்தனர். நவம்பரில் முல்தானை அடைந்த முகமது, ராஜஸ்தான் பாலைவனத்தைக் கடந்து குஜராத்தை அடைந்தார்.
பயணத்திற்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளை கொண்டுச் செல்ல நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சிப்பாயும் ஆயுதங்களைத் தவிர, சில நாட்களுக்கு தேவையான உணவையும் வைத்திருந்தார்கள்.
லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்லும் பிரபலமான ஆலயம்
1025 ஜனவரியில் சோம்நாத்திற்கு முகமது வந்து சேர்ந்தார்.
அக்கால பிரபல வரலாற்றாசிரியரான ஜகாரியா அல்-கஸ்வினியின் கூற்றுப்படி, "இந்து மதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்த கோவிலின் மையத்தில் சோமநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்தது. சந்திர கிரகணத்தின் போது, லட்சக்கணக்கான இந்துக்கள் இங்கு புனித யாத்திரைக்கு வருவார்கள். மிகவும் வளமான இந்தக் கோவிலில் இருந்த பொக்கிஷங்கள் பல நூற்றாண்டுகளாக சேமிக்கப்பட்டவை."
"1200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புனித நதியான கங்கையிலிருந்து இங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சோமநாதர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது, ஆலயத்தில் பூஜைகள் செய்வதற்கும் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்கும் ஆயிரம் பிராமணர்கள் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் பிரதான நுழைவாயிலில் 500 இளம் பெண்கள் பாடிக்கொண்டும் நடனமாடிக் கொண்டும் இருப்பார்கள்."
சோமநாதர் ஆலய தாக்குதல்
முகமதுவின் படைகள் முதலில் நகரத்தை அம்புகளால் தாக்கின. பின்னர் கயிறு ஏணிகளைப் பயன்படுத்தி அவர்கள் நகரக் கோபுரங்களில் ஏறி தெருக்களில் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். வன்முறை தாக்குதல் மாலை வரை தொடர்ந்தது. பின்னர் வேண்டுமென்றே நகரத்திலிருந்து பின்வாங்கிய முகமதுவின் படைகள், மறுநாள் காலை மீண்டும் தாக்குதலைத் தொடங்கின.
"இந்தப் போரில் 50,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், முகமது கோவிலுக்குள் நுழைந்தார். கோவிலில் 56 மரத் தூண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கட்டிடக்கலையின் மிகப்பெரிய அதிசயம் கோவிலின் பிரதான சிலை. அது, எவ்வித ஆதரவும் இல்லாமல் காற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. சிலையை பார்த்து முகமது வியந்தார்" என்று கஸ்வினி எழுதுகிறார்.
ஆலயத்தைப் பற்றி மேலும் விவரிக்கும் அல்-பரூனி, "கோவிலின் முக்கிய தெய்வம் சிவன். தரையில் இருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் கல்லால் ஆன சிவலிங்கம் இருந்தது. அதற்கு அடுத்ததாக தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட வேறு சில சிலைகள் இருந்தன" என்று எழுதினார்.
சிலைகளை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று கஜினி முகமது என்ன செய்தார்?
சிலையை முகமது உடைத்தபோது, அதன் உள்ளே விலைமதிப்பற்ற ரத்தினங்கள் நிரம்பியிருந்தது. அங்கிருந்த அளப்பரிய செல்வத்தைக் கண்டு முகமது வியந்தார்.
மாபெரும் ஆலய மணி தொங்க விடப்பட்டிருந்த பிரம்மாண்டமான தங்கச் சங்கிலியை உடைத்த முகமது, கதவுச் சட்டங்கள் மற்றும் மேற்கூரையிலிருந்து வெள்ளித் தகடுகளை அகற்றினார். அதிக புதையல்கள் இருக்கலாம் என்று கருதி கருவறை முழுவதையும் தோண்டி எடுக்கச் செய்தார்.
"சோமநாதரின் சிலைகளை கஜினிக்கு எடுத்துச் சென்றார் முகமது, அங்கு அவை உடைக்கப்பட்டு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்படும் இடத்திலும், இரண்டாவது பகுதி அரசரின் அரண்மனை நுழைவாயிலிலும் வைக்கப்பட்டது. மூன்றாவது பகுதி மெக்காவிற்கும் நான்காவது பகுதி மதீனாவிற்கும் அனுப்பப்பட்டது" என்று வரலாற்றாசிரியர் சிராஜ் 'Tabaqat-i Nasiri' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சோமநாதர் ஆலயத்திலிருந்து முகமது கைப்பற்றிய தங்கம் ஆறு டன். பதினைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அவர், பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்துடன் கஜினிக்குப் புறப்பட்டார். கட்ச் மற்றும் சிந்து வழியாக அவர் திரும்பும் பயணம் சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது.
1026-ஆம் ஆண்டில் கஜினிக்குத் திரும்பினார் முகமது.
"முகமதுவின் படையெடுப்புகள் இந்தியாவில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தின. அவருடைய ஆரம்பகால தாக்குதல்கள் கால்நடைகளைக் கொள்ளையடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தன. பின்னர், இந்தத் தாக்குதல்களின் நோக்கம் நகரப் பொக்கிஷங்களைக் கொள்ளையடிப்பது மற்றும் போர்க் கைதிகளைப் பிடித்து அடிமைகளாக விற்பது அல்லது ராணுவத்தில் சேர்ப்பது என மாறியது" என அல்-பரூனி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை தாக்குதலுக்கு உள்ளான சோமநாதர் ஆலயம்
முகமதுவின் தனது வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். 33 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர் ஏப்ரல் 1030-இல் தனது 59 வயதில் காலமானார்.
15-ஆம் நூற்றாண்டின் இரானிய வரலாற்றாசிரியர் கோண்டாமிரின் கூற்றுப்படி, கல்லீரல் நோயே அவரது இறப்புக்கு காரணமானது. முகமதுவின் மரணத்திற்குப் பிறகு, சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டுவதற்கான முதல் முயற்சி சாளுக்கிய வம்சத்தின் மன்னர் முதலாம் பீமனின் தலைமையில் தொடங்கியது.
"புதிய கோவில் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து உருவானது. ஜோதிர்லிங்கம் அதற்குள் மீண்டும் நிறுவப்பட்டது. ஆனால் 12ஆம் நூற்றாண்டில், கோரி வம்சத்தின் முகமது கோரி மீண்டும் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதனை இடிபாடுகளாக மாற்றினார்" என்று ஸ்வாதி பிஷ்ட் தனது 'Somnath Temple: Witness to Time and Triumph' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"பல நூற்றாண்டுகளாக, சோம்நாத் கோவில் பல முறை அழிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. சோலங்கி வம்சத்தின் மன்னர் குமார்பால் 12-ஆம் நூற்றாண்டில் சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டும் பணியை மேற்கொண்டார். 18ஆம் நூற்றாண்டில், இந்தூரின் மகாராணி அஹில்யாபாயின் மேற்பார்வையின் கீழ் சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது."
சுதந்திரத்திற்குப் பிறகு சோமநாதர் கோவிலின் புனரமைப்பு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சோமநாத் கோவிலைக் கட்டுவதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கின.
இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோர் மேற்பார்வையின் கீழ், கோவிலின் பழைய வடிவை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திரம் அடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சர்தார் படேல் சோமநாதர் கோவிலுக்குச் சென்றார். அங்கு உரையாற்றிய அவர், "தாக்குதல் நடத்தியவர்களால் இந்த இடத்திற்கு ஏற்பட்ட அவமானம் கடந்த காலத்தின் எச்சம். இப்போது சோம்நாத்தின் பழம்பெருமையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சோமநாதர் ஆலயம் இனி வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இருக்காது, மாறாக கலாசாரம் மற்றும் நமது ஒற்றுமையின் அடையாளமாக வெளிப்படும்" என்று கூறினார்.
இந்தக் கோவில் கட்டி முடிக்கப்படும் வரை சர்தார் வல்லபாய் படேல் உயிர் வாழவில்லை, அவர் 1950 டிசம்பர் 15 அன்று காலமானார்.
படேலுக்குப் பிறகு, கோவில் கட்டும் பொறுப்பை கன்ஹையாலால் மணிக்லால் முன்ஷி ஏற்றுக்கொண்டார்.
1951 மே 11 அன்று, சோமநாதர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டார். பிரதமர் நேருவின் ஆலோசனையை மீறி அவர் அவ்வாறு செய்தார்.
நேரு எதிர்ப்பு
குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதை பிரதமர் ஜவஹர்லால் நேரு எதிர்த்தார், மத சார்பற்ற நாட்டின் தலைவர் மத மறுமலர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.
நேரு மட்டுமல்ல, துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
1951 மே 2-ஆம் நாளன்று பிரதமர் நேரு, மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், "சோமநாதர் ஆலய புனரமைப்பு தொடர்பான செய்திகளை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம். இது ஒரு அரசு விழா அல்ல, இந்திய அரசுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்," என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.