ராணுவ நடவடிக்கை பற்றிய பிரதமர் மோதி உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்
பிரதமர் மோதி ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்... நாம் அனைவரும் கடந்த சில நாட்களாக நமது நாட்டின் சக்தியையும் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். இந்தியாவின் வீரமிக்க படைகள், ஆயுதப் படைகள், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கும், இந்திய மக்களின் சார்பில் சல்யூட்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளின் நோக்கத்தை வெற்றியடையச் செய்வதற்காக நமது துணிச்சலான வீரர்கள் அபார துணிச்சலுடன் செயல்பட்டார்கள். இன்று, நான் அவர்களின் துணிச்சலை, தைரியத்தை, வீரத்தை, நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், ஒவ்வொரு சகோதரிக்கும், மகள்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், நாட்டையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்த அப்பாவி குடிமக்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கொடூரமாகக் கொன்றார்கள். இது, தீவிரவாதத்தின் மிகவும் கொடூரமான முகம், அது கொடுமை.
இது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு அருவருப்பான முயற்சியாகும். இது, எனக்கு தனிப்பட்ட முறையில், மிகப் பெரிய வலியைக் கொடுத்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும், குடிமக்கள் அனைவரும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்க்கமும், அரசியல் கட்சிகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒன்றுதிரண்டு குரல் எழுப்பினார்கள்.
பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்கி ஒழிக்க, இந்தியப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். இன்று பயங்கரவாதிகள் அனைவரும், ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பும், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை அறிந்துக் கொண்டிருப்பார்கள்.
'ஆபரேஷன் சிந்தூர்' என்பது வெறும் பெயர் அல்ல, நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நியாயத்திற்கான மாற்றமுடியாத வாக்குறுதி. மே 6 ஆம் தேதி பின்னிரவு முதல் மே 7 ஆம் தேதி அதிகாலைக்குள், இந்த வாக்குறுதி, நிதர்சனமானதை உலகம் முழுவதும் கண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் அவர்களின் பயிற்சி மையங்கள் மீது இந்தியப் படைகள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தின.
இந்தியா இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் நாடு ஒன்றுபட்டு, "தேசமே முதலில்" என்ற உணர்வால் நிரம்பும்போது நாடே உயர்ந்தது என்று வலுவான முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அடையமுடியும் என்பதை நாம் நிதர்சனமாகக் கண்டோம்.
இந்தியாவின் ஏவுகணைகளும் டிரோன்களும் பாகிஸ்தானின் தீவிரவாதத் தளங்களைத் தாக்கியபோது, ஆடிப்போனது பயங்கரவாத அமைப்புகளின் கட்டடங்கள் மட்டுமல்ல, அவர்களின் மன உறுதியும் தான். பஹாவல்பூர், முரிட்கே போன்றவை ஏதோவொரு வகையில் சர்வதேச பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்துள்ளன.
உலகில் எந்த இடத்தில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், அது 9/11 ஆக இருந்தாலும் சரி, லண்டன் டியூப் குண்டுவெடிப்பாக இருந்தாலும் சரி, பல தசாப்தங்களாக இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களாக இருந்தாலும் சரி, அவை, ஏதேனும் ஒருவிதத்தில் இந்த பயங்கரவாத மறைவிடங்களுடன் தொடர்புடையவையாகவே இருக்கும்.
பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்துவிட்டார்கள், அதனால் இந்தியா இந்தத் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டது. இந்தியா நடத்திய இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கொடூர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை முதல் மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த, இந்தியாவுக்கு எதிராக சதி செய்து கொண்டிருந்த பல பயங்கரவாத தலைவர்களை இந்தியா ஒரே அடியில் அழித்து ஒழித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் மூழ்கி குழம்பிப் போய்விட்டது, இந்தக் குழப்பத்தில் அது மற்றொரு தவறான ஆனால் துணிச்சலான முடிவை எடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டிய பாகிஸ்தான், அதற்கு பதிலாக இந்தியாவையே தாக்கத் தொடங்கியது. நமது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாதாரண குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றையும், நமது ராணுவத் தளங்களையும் பாகிஸ்தான் குறிவைத்தது, ஆனால் இந்தத் தாக்குதலிலும் பாகிஸ்தான் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டது.
பாகிஸ்தானின் டிரோன்களும், ஏவுகணைகளும் இந்தியாவின் முன் வைக்கோல் போல விழுந்ததை உலகமே பார்த்தது. இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு, அவற்றை வானத்திலேயே அழித்தது. எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராக இருந்தது, ஆனால் இந்தியா பாகிஸ்தானை அதன் மார்புப் பகுதியிலேயே சென்று தாக்கியது.
இந்தியாவின் டிரோன்களும், இந்திய ஏவுகணைகளும் துல்லியமாக சென்று தாக்குதல் நடத்தின. இந்தியா, பாகிஸ்தானின் விமானப்படையின் விமான தளங்களை சேதப்படுத்தியது. தனது விமானப்படையின் மீது பாகிஸ்தான் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று நாட்களிலேயே, பாகிஸ்தான் நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு சேதத்தை இந்தியா ஏற்படுத்திவிட்டது.
எனவே, இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைக்குப் பிறகு, தப்பிப்பதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியது பாகிஸ்தான். பதற்றத்தைக் குறைக்குமாறு பாகிஸ்தான் முழு உலகத்திடமும் வேண்டுகோள் விடுத்து வந்தது. மோசமாக தாக்கப்பட்ட பிறகு, மே 10 ஆம் தேதி மதியம், பாகிஸ்தான் இராணுவம் நமது டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொண்டது. அதற்குள் பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை பெரிய அளவில் நாம் அழித்துவிட்டோம், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பாகிஸ்தானின் மையப்பகுதியில் நிறுவப்பட்ட பயங்கரவாத தளங்களை இடிபாடுகளாக மாற்றிவிட்டோம்.
எனவே, சண்டையை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இனி பயங்கரவாத நடவடிக்கையோ அல்லது ராணுவ நடவடிக்கையோ இருக்காது என்று கூறப்பட்டது. எனவே இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது. அதனால்தான், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ நிலைகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை நாம் நிறுத்தி வைத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, அதன் அணுகுமுறையின் அடிப்படையில் அளவிடுவோம்.
இந்தியாவின் விமானப்படை, ராணுவம், கடற்படை என முப்படைகளும், நமது எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தியாவின் துணை ராணுவப் படையான BSF என அனைத்தும் தொடர்ந்து விழிப்புடன் உள்ளன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இப்போது ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையாக மாறிவிட்டது. பயங்கரவதற்குக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய பாதையை உருவாக்கிவிட்டது, ஒரு புதிய தரத்தை, ஒரு புதிய இயல்பை அமைத்துள்ளது.
முதலில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும். நாம் நமது சொந்த வழியில், எங்கள் சொந்த விதிமுறைகளின்படி பதிலளிப்போம். தீவிரவாதத்தின் வேர்கள் துளிர்விடும் ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இரண்டாவதாக, இந்தியா எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் பொறுத்துக்கொள்ளாது. அணு ஆயுத மிரட்டலின் போர்வையில் செழித்து வளரும் பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா துல்லியமான மற்றும் தீர்க்கமான தாக்குதலை நடத்தும்.
மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும் பயங்கரவாதத்தின் எஜமானர்களையும் தனித்தனியாக பார்க்கமாட்டோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டது மூலமாக அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை உலகம் பார்த்தது. இது, பாகிஸ்தான் பற்றிய அசிங்கமான உண்மையை உலகம் மீண்டும் ஒருமுறை கண்டது. இது அரசாங்க ஆதரவு பயங்கரவாதத்துக்கு மிகப் பெரிய சான்றாகும். எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் நம் நாட்டையும் நமது குடிமக்களையும் பாதுகாக்க தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
நாங்கள் பாகிஸ்தானை போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் தோற்கடித்துள்ளோம். இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. பாலைவனங்களிலும் மலைகளிலும் நமது திறன்களை நிரூபித்துள்ளோம், அத்துடன், நவீன யுகப் போரிலும் நமது மேன்மையை நிரூபித்துள்ளோம். இந்த நடவடிக்கையின் போது, நம்முடைய 'மேட் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட போர் உபகரணங்கள் வெற்றிபெற்றது உறுதிபடுத்தப்பட்டது. 21ம் நூற்றாண்டின் போர்க்களத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'மேட் இன் இந்தியா' பாதுகாப்பு உபகரணங்களுக்கான காலம் வந்துவிட்டது.
அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கு எதிரான நமது ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலமாகும். நிச்சயமாக, இது போருக்கான சகாப்தம் அல்ல, ஆனால் இது பயங்கரவாதத்துக்கான சகாப்தமும் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான பூஜ்ய சகிப்புத்தன்மை உலகம் சிறப்பதற்கான உத்தரவாதமாகும்.
பாகிஸ்தான் ராணுவமும், அரசும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறது, ஒரு நாள் அது பாகிஸ்தானையே அழித்துவிடும்.
பாகிஸ்தான் தன்னை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். இதைத் தவிர அமைதிக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் பார்வை தெள்ளத்தெளிவாக உள்ளது, பயங்கரவதாகும் பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் ஒன்றாகச் செல்ல முடியாது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது. மேலும், தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது.
இன்று, சர்வதேச சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது பயங்கரவாதத்தைப் பற்றி மட்டுமே இருக்கும் என்பது நமது அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்; பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பி.ஓ.கே, தொடர்பானதாக மட்டுமே இருக்கும்.
அன்புள்ள நாட்டு மக்களே, இன்று புத்த பூர்ணிமா. புத்தர் நமக்கு அமைதிப் பாதையைக் காட்டியுள்ளார். அமைதிக்கான பாதையும் வலிமையின் வழியாகவே செல்கிறது. மனிதகுலம், அமைதி மற்றும் செழிப்பை நோக்கி நகரவும், ஒவ்வொரு இந்தியரும் நிம்மதியாக வாழ, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாக, இந்தியா சக்திவாய்ந்ததாக இருப்பது அவசியம். தேவைப்படும்போது இந்த சக்தியைப் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. கடந்த சில நாட்களாக, இதைத்தான் இந்தியா செய்துள்ளது.
மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவத்திற்கும், ஆயுதப் படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்தியர்களாகிய நம் துணிச்சலுக்கும், ஒவ்வொரு இந்தியரின் ஒற்றுமைக்கான உறுதிமொழிக்கும், உறுதிப்பாட்டிற்கும் நான் தலை வணங்குகிறேன்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



