You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.கே.சிவகுமார்: கர்நாடகாவில் தவிர்க்க முடியாத தலைவர் ஆன இவரது பின்னணி என்ன?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தகுதி பெற்றுள்ளபோதும், அந்த கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
காரணம், ஏற்கெனவே மூத்த தலைவராகவும் முன்னாள் முதல்வராகவும் உள்ள சித்தராமையா ஒருபுறமும் துணை முதல்வர் பதவியை வகித்துள்ள டி.கே. சிவகுமார் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று மறுபுறமும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பை நடத்தி அதன் விவரத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்திடம் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் குழு திங்கட்கிழமை அளித்துள்ளது. ஆனாலும், அதன் மீது காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவையும் இந்த செய்தி எழுதப்படும் நேரம் வரை எடுக்கவில்லை.
இந்த நிலையில், கட்சி மேலிடம் எந்த முடிவை எடுத்தாலும் அதில் தவிர்க்க முடியாதவராக டி.கே. சிவகுமார் இருப்பார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வதற்கான பார்முலாவை மேலிடம் பரிசீலித்தால் அதற்கும் தாம் தயாராக இல்லை என்று பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். ஆனால், செவ்வாய்கிழமை டெல்லிக்கு செல்வதற்கு முன்,“ நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம். எங்களிடம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் பிரிவினையை விரும்பவில்லை. நான் ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளவன். நான் ஏமாற்றவும் மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைமையின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை டெல்லிக்கு வந்தார் சித்தராமையா. ஆனால், டி.கே. சிவகுமார் டெல்லி புறப்படவில்லை. உடல் நலக்குறைவால் தமது பயணத்தை தள்ளிப்போட்டதாகக் கூறிய சிவகுமார், செவ்வாய்க்கிழமை மாலையில் டெல்லி வந்து காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
டெல்லியில் நடக்கும் இன்றைய சந்திப்புகளின் மூலம் கட்சி மேலிடத்திடம் சிவகுமாருக்கு உள்ள செல்வாக்கும் அவரை தவிர்த்து விட்டு ஒரு முடிவை கட்சி மேலிடம் எடுக்க இயலாது என்பதையும் காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். கர்நாடகாவில் இவரது அரசியல் வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
சரியான நேரத்தில் நல்ல உத்தியை பயன்படுத்தி தனது கனவுகளை எப்படி நனவாக்குவது என்பது டி.கே.சிவகுமாருக்கு தெரியும்.
அவரது இந்த கொள்கை அவருக்கு வெற்றியை அளித்துள்ளது. தற்போது முதல்வர் பதவிக்கான போட்டியாளர் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட எச்.நாகேஷை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
2019 ஜூலையில் அவர் மும்பைக்கு விமானம் ஏறுவதை தடுக்க சிவகுமார் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களில் நாகேஷும் ஒருவர்.
நாகேஷ் மும்பைக்கு செல்வதை சிவகுமாரால் தடுக்க முடியவில்லை.
எனவே அவர் நாகேஷை பின்தொடர்ந்து மும்பை சென்று ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டார்.
அங்கு தமது நண்பருடன் 'ஒரு கோப்பை தேநீர்' அருந்தவும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.
டி.கே.சிவகுமார் சுயகுறிப்பு
முழுப்பெயர் - தொட்டலஹள்ளி கெம்பேகெளடா சிவகுமார்
வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்.
கனகபுரா சட்டபேரவை தொகுதி எம்.எல்.ஏ
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர்
ஹெச்.டி.குமாரசாமி அமைச்சரவையில் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
சித்தராமையா ஆட்சியில் எரிசக்தி துறை அமைச்சர்
ஒரே இரவில் தேசிய பிரபலமான தலைவர்
சிவகுமார் யார், அவருடைய ஆளுமை என்ன என்று ஒரே இரவில் நாடு முழுவதற்கும் தெரிய வந்தது.
அரசியல் வட்டாரங்களில் பதிவு செய்யப்படாத விஷயங்களின் மீதுள்ள திரையை சிவகுமார் அன்றைய தினம் அகற்றினார்.
“என்னிடம் ஆயுதம் ஏதும் இல்லை... நான் வெறும் இதயத்தை மட்டுமே கொண்டு வந்துள்ளேன்” என்று மும்பை போலீஸ் அதிகாரியிடம் அவர் கூறினார்.
ஆளும் கட்சியை நேரடியாக எதிர்கொண்டதற்காக நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
"அவரது இந்த அணுகுமுறைதான், அவர் இன்று இருக்கும் நிலைக்கு அவரை கொண்டு வந்துள்ளது,” என்று அவர் அரசியலுக்கு வர முயற்சித்த நேரத்தில் அவருடன் இருந்த ஒருவர், பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிபிசியிடம் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது நாகேஷை கட்சி வேட்பாளராக்குவதற்கான படிவத்தில் சிவகுமார் கையெழுத்திட்டார். நாகேஷ் மகாதேவ்புரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பல இடங்களில் திடீர் சோதனை, அச்சப்படாத சிவகுமார்
சிவகுமாரின் மும்பை அத்தியாயத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்புகள், அவரது கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள அவரது வீடு மற்றும் கிராமத்தில் உள்ள அவரது தாயார் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தின. ஆனால் அவர் பயப்படவில்லை.
இந்த சோதனைகள் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நடத்தப்பட்டன.
குஜராத்தைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அருகே உள்ள ஆடம்பர விடுதியில் தங்க வைத்தபோது இந்த திடீர் சோதனைகள் தொடங்கின.
மாநிலங்களவை தேர்தலுக்கு முன், ’குதிரை பேரம்’ நடக்காமல் தடுக்க, அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகரான அகமது படேலும் வேட்பாளர்களாக இருந்தனர்.
2002ல் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் ஆட்சியின் போது, மகாராஷ்டிராவின் எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்திருந்த அனுபவம் இங்கு அவருக்கு கைகொடுத்தது.
காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது மிக முக்கியமான தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உயர் தலைமை சிவகுமார் மீது நம்பிக்கை வைத்தது.
பாஜகவில் இருந்து துணை முதல்வர் பதவியை ஏற்பதை விட, சிறை செல்வதே சிறந்தது என அவர் பலமுறை கூறினார்.
சனிக்கிழமை சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள் வந்த பிறகும் அவர் அதையே மீண்டும் சொன்னார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறையில் தன்னை சந்திக்க வந்தது, தனது இதயத்தைத் தொட்டதாகக்கூறி அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
“சிவகுமார் சில விஷயங்களில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவற்றில் ஒன்று, தன்னிடம் எப்போதும் போதுமான நிதியை வைத்துக்கொள்வது. சரியான நேரத்தில் சரியான முதலீடு செய்யுமாறு தனது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரிடம் அவர் ஆலோசனை கூறுவார்,” என்று அவரது உதவியாளர் ஒருவர் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தெரிவித்தார்.
“சிவகுமார் முதலீடு செய்ய முடிவு செய்யும் வரை, கனகபுராவில் (அவரது சட்டப்பேரவை தொகுதி) கிரானைட் சுரங்கத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. 1990களின் முற்பகுதியில் நிலத்தில் முதலீடு செய்வது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை அவர் உணர்ந்தார். தொழில்மயமாக்கலின் சாத்தியம் இருந்த இடங்களில் அவர் முதலீடு செய்தார். பெங்களூருவில் ஐடி மையங்கள் கட்டப்பட்ட பகுதிகள் அல்லது சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருந்த பகுதிகள் இதில் அடங்கும். இதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை," என்று மற்றொரு உதவியாளர் கூறினார்.
1980களின் பிற்பகுதியில் பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் டிக்கெட்டை அவர் பெற்றார்.
அப்போது அவருக்கு வயது 27 மட்டுமே. 1990-ல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பங்காரப்பாவுக்கு மிக நெருக்கமாக அவர் ஆனார்.
எளிதாக அமையாத அரசியல் பயணம்
தன்னைப் போன்ற மற்ற இளைஞர்கள் மாநில அமைச்சர்களாக பதவியேற்ற போது சிவகுமார் மனமுடைந்து போனார். நீண்ட காலத்திற்குப் பிறகு மறைந்த தரம் சிங் (பங்காரப்பா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர்) சிவகுமார், அமைச்சரவையில் சேர உதவினார்.
ஆனால் பங்காரப்பாவிடம் இருந்து அவருக்கு சிறைத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
1991 ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்த தேஜஸ்வினி கெளடாவுக்கு அவர் ஆதரவு அளித்தார். 2004 மக்களவைத் தேர்தலில் எச்.டி.தேவ கெளடாவை தேஜஸ்வினி தோற்கடித்தார்.
பின்னர் சிவகுமார், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு நெருக்கமானவராக ஆனார். அவர் கேபிசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் 2019 இல் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி உருவானபோது கிருஷ்ணா மற்றும் தேவேகெளடாவுடன் தனது உறவை சமநிலையில் பராமரிப்பதில் அவர் வெற்றி கண்டார்.
" சாதிக் குழுக்களில் எந்தப் பிரிவினரிடமும் அவருக்கு வலுவான ஆதரவு தளம் இல்லை. ஆனால் பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். அவர் எதிரிகளிடையே நம்பிக்கையையும் பயத்தையும் தூண்டும் ஆளுமை கொண்டவர். அவரது அரசியல் போட்டியாளர்கள் கூட அவர் மாநிலத்தின் மிகவும் வளமான அரசியல்வாதி என்பதை தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்,” என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
"ஒரு அமைச்சராக அவர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்பார். நிர்வாகத்தில் வரும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும்," என்று பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி பிபிசி இந்தியிடம் கூறினார்,
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்