தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை - நூற்றாண்டு கால பாரம்பரிய உணவை ஒழிப்பது ஏன்?

    • எழுதியவர், ஜீன் மெக்கென்ஸி
    • பதவி, சியோல் செய்தியாளர்

தென் கொரியாவில் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதையும் அதனை விற்பதையும் 2027-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகள் பழமையான நாய் இறைச்சி உண்ணும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் நாய் இறைச்சியை விரும்பி உண்ணும் வழக்கம், கடந்த சில தசாப்தங்களாக குறைந்துவருகிறது. குறிப்பாக, இளம் வயதினர் நாய் இறைச்சியை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

இந்த புதிய சட்டத்தின்படி, நாய்களை இறைச்சிக்காக வளர்ப்பது, அதனை கொல்வது, விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் தடை செய்யப்படும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

என்ன தண்டனை?

நாய்களை கொல்பவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் இறைச்சிக்காக நாய் வளப்பவர்கள், நாய் இறைச்சியை விற்பவர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். எனினும், நாய் இறைச்சியை உட்கொள்வது சட்ட விரோதமானது அல்ல.

விவசாயிகளும் உணவக உரிமையாளர்களும் மாற்று வேலை மற்றும் வருமானத்திற்கான வேறு ஆதாரங்களை தேடுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இந்த புதிய சட்டத்தை செயல்படுத்த மூன்றாண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வணிகத்தை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை உள்ளூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தடையால் பாதிக்கப்படும் நாய் வளர்ப்போர், இறைச்சி விற்பனையாளர்கள், உணவக உரிமையாளர்கள் ஆகியோருக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ள நிலையில், அவர்களுக்கு என்ன மாதிரியான இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

அரசாங்க புள்ளி விவரங்களின்படி தென் கொரியாவில் 2023-ஆம் ஆண்டு நாய் இறைச்சியை விற்பனை செய்யும் 1,600 உணவகங்கள், நாய்களை வளர்க்கும் 1,150 பண்ணைகள் உள்ளன.

தலைமுறை இடைவெளி

“போஷிண்டாங்” எனப்படும் நாய் இறைச்சியை கொண்டு செய்யப்படும் ஸ்டூ வகை உணவு வயதான தென் கொரியர்களிடையே சுவை மிகுந்த உணவாக கருதப்படுகிறது. ஆனால், நாய் இறைச்சி இளைஞர்களிடையே தற்போது அதிகம் அறியப்படுவதில்லை.

கேல்லப் (Gallup) எனும் பகுப்பாய்வு நிறுவனம் கடந்தாண்டு நடத்திய கருத்துக்கணிப்பில், வெறும் 8% பேர்தான் தாங்கள் கடந்த 12 மாதங்களில் நாய் இறைச்சியை சாப்பிட்டு பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது, 2015-ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்தது. கருத்துக்கணிப்பில் இடம்பெற்றிருந்த ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே நாய் இறைச்சி உண்பதை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர்.

சியோலில் மதிய உணவு நேரத்தில், நாய் இறைச்சி உணவகங்கள் அதிகமாக உள்ள ஒரு குறுகிய தெருவில் வயதானவர்கள் அந்த ‘ஸ்டூ’ உணவை ருசித்துக் கொண்டிருந்ததையும், இந்த உணவு தொடர்பாக ஏற்பட்டுள்ள ‘தலைமுறை இடைவெளியும்’ அப்பட்டமாக தெரிந்தது.

86 வயதான கிம் சியோன்-ஹோ இந்த தடையால் ஏமாற்றத்தில் உள்ளார். “நாங்கள் இளம் வயதில் இருந்தே இந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். நாங்கள் எங்களின் பாரம்பரிய உணவை சாப்பிடுவதை ஏன் தடுத்து நிறுத்துகிறார்கள்?” என தெரிவித்தார். ”நாய் இறைச்சியை நீங்கள் தடை செய்தால் மாட்டிறைச்சியையும் தடை செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.

ஆனால், 22 வயது மாணவரான லீ சே-யோன், விலங்கு நல உரிமைகளை ஊக்குவிக்க இந்த தடை அவசியமானது என்கிறார். “பெரும்பாலான மக்கள் இப்போது நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர்,” என்கிறார் அவர். ”நாய்கள் இப்போது குடும்பங்களில் ஓர் அங்கமாக இருக்கின்றன. நம் குடும்பத்தினரை உண்பது நல்லதல்ல,” என்றார்.

"நூற்றாண்டு கால பாரம்பரிய உணவை ஒழிப்பது ஏன்?"

1980-களில் இருந்த முந்தைய அரசுகள் நாய் இறைச்சியை தடை செய்வதாக வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றுவதில் தோல்வியை சந்தித்தன. தற்போதைய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் அந்நாட்டின் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ இருவரும் விலங்கு ஆர்வலர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள், ஆறு நாய்களை வளர்த்து வருகின்றனர். நாய்களை உண்ணும் வழக்கம் முடிவுக்கு வர வேண்டும் என கிம் கியோன் வலியுறுத்தி வந்தார்.

நீண்ட காலமாக இந்த தடையை வலியுறுத்தி வந்த விலங்கு உரிமை குழுக்கள் இந்த சட்டத்தைப் பாராட்டியுள்ளன.

தன்னுடைய வாழ்நாளில் இந்த தடையை கண்டது ஆச்சர்யமாக இருப்பதாக, கொரியாவை சேர்ந்த ‘ஹியூமென் சொசைட்டி’-யின் செயல் இயக்குநர் ஜங் யூன் சாய் கூறுகிறார். “இந்த தடை தாமதமாக வந்ததால் உயிரிழந்த லட்சக்கணக்கான நாய்களை நினைக்கையில் என் இதயம் வெடிக்கிறது. எனினும், தென் கொரியா தன் வரலாற்றில் இந்த துயரமான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாய்களுக்கு இசைவான எதிர்காலத்தைத் தழுவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் அவர்.

இந்த தடைக்கு நாய் வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இளைஞர்களிடையே இதற்கு செல்வாக்கு குறைந்துவந்தாலும், நாய் இறைச்சி உண்ணும் வழக்கம் தானாகவே முடிவுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர். முதியவர்களுக்கு தங்கள் வாழ்வியல் முறைகளை வயதான காலத்தில் மாற்றுவது கடினமாக இருக்கும் என அவர்களும் உணவக உரிமையாளர்களும் கூறுகின்றனர்.

"உணவு சுதந்திரத்தில் அரசு தலையிடுவதா?"

வாழ்வாதாரத்திற்காக நாய்களை வளர்க்கும் ஜூ யோங்-பாங் என்பவர் பிபிசியிடம் கூறுகையில், இந்த தொழில் நலிவடைந்து வருவதாக தெரிவித்தார்.

”இன்னும் 10 ஆண்டுகளில் இந்த தொழில் நலிவடைந்துவிடும். நாங்கள் இப்போது 60, 70 வயதுகளில் இருக்கிறோம். இந்த சமயத்தில் வாழ்வாதாரத்தை இழப்பதை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை,” என்கிறார் அவர். ”மக்களுடைய உணவு சுதந்திரத்தில் தலையிடுவது போன்று இந்த தடை உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

60 வயதில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர், இந்த தடையால் தான் விரக்தியில் இருப்பதாகவும் தென் கொரியாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்ததுதான் இதற்கு காரணம் என்றும் புகார் கூறுகிறார்.

“இளைஞர்கள் இந்த காலத்தில் திருமணம் செய்வதில்லை. அதனால், அவர்கள் செல்லப்பிராணிகளை குடும்பமாக நினைக்கின்றனர். ஆனால், உணவு அப்படியல்ல. சுகாதாரமான சூழலில் வளர்க்கப்படும் நாய்களின் இறைச்சியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

“சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மக்கள் நாய் இறைச்சியை உண்கின்றனர். ஆனால், இங்கு தடை செய்யப்படுவது ஏன்?”, என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)