You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருநாட்டு உறவில் விரிசல்: மாலத்தீவு ஊடகங்கள் இந்தியா குறித்து சொன்னது என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்த விவகாரம் இந்தியா – மாலத்தீவு உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கடுமையான எதிர்ப்பால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாலத்தீவு அரசு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் மாலத்தீவு ஊடகங்கள் இந்தியா குறித்து சொன்னது என்ன?
மாலத்தீவு ஊடகமான சன், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் MP மீகாயில் நசீமை மேற்கோள்காட்டி, இந்திய பிரதமர் பற்றிய ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த துணை அமைச்சர்கள் மற்றும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூஸா Zameer ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு தான் எழுதிய கடித்தத்தையும் மீகாயில் நசீம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுக்கான மாலத்தீவு தூதுவர் முனு மஹவர், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் உயர் தூதர் அலி நசீர் முகம்மதை சந்தித்துப் பேசியது குறித்து PSM செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய – மாலத்தீவு உறவு குறித்து பேசுவதற்கான, இந்த ஆலோசனைக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் அறியப்படவில்லை என PSM செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்திற்கு வருகை தந்தது குறித்து Edition பத்திரிகை, முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இருநாட்டு அதிகாரிகளின் சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த செய்தியில்
மாலத்தீவுக்கான இந்திய தூதர் இப்ராஹிம் சாஹிப்புக்கு சம்மன் வழங்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் சுமார் 1 மணி நேரம் வரை இப்ராஹிம் சாஹிப் இருந்தார். ஆனால் அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்படவில்லை என எடிஷன் பத்திரிகை கூறியுள்ளது.
ஒரு நாடு மற்றொரு நாட்டுத் தூதுவருக்கு சம்மன் அனுப்பினால், பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தலாம் அல்லது ஒரு பிரச்னையின் தீவிரத்தை எடுத்துரைக்கலாம் என குறிப்பிட்டுள்ள எடிஷன் பத்திரிகை இதற்கு முன்னர் இந்திய தூதருக்கு மாலத்தீவு எப்போதெல்லாம் சம்மன் அனுப்பியது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
2016ல் அப்போது ஆட்சியில் இருந்த மாலத்தீவு முற்போக்கு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Ahmed Nihan Hussain Manik இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அப்போதைய மாலத்தீவுக்கான தூதுவர் அகிலேஷ் மிஷ்ராவுக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது.
இதேபோல 2018லும் அகிலேஷ் மிஷ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மாலத்தீவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்தால் மாலத்தீவு மீது இந்தியா படையெடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் என எடிஷன் பத்திரிகை கூறியுள்ளது.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் சமீபத்திய மாதங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 2023 நவம்பரில் முகமது முய்ஸு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)