You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறார் குற்றம் செய்தால் பெற்றோருக்கு தண்டனை - சட்டம் என்ன சொல்கிறது?
புனேவில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி, இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த 18 வயது பூர்த்தியாகாத சிறுவனின் வழக்கு சமீபத்தில் பேசுபொருளானது.
அந்தச் சிறுவனைக் கைது செய்த காவல்துறை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும், அடுத்த 12 மணிநேரத்திற்குள் அவர் ஜாமீனில் வெளியே விடப்பட்ட சம்பவம் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இதுகுறித்த சர்ச்சை தீவிரமாக விவாதத்திற்கு உள்ளானது. மேலும், அந்தச் சிறுவன் உண்மையிலேயே மைனர் தானா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பு நடத்தியிருந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மே 22 (புதன்கிழமை) ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீனை சிறார் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் 'குற்றச் செயலில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களை மட்டும் சட்டம் வேறு விதத்தில் நடத்துவது ஏன்? இதுபோன்ற தீவிரமான குற்றங்களைச் செய்த 18 வயது நிரம்பாத சிறார்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்?' என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
புனேவின் கல்யாணி நகரில், இரவு 9 மணியளவில், 18 வயது நிரம்பாத சிறுவன் விலையுயர்ந்த கார் ஒன்றை வேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனங்கள் இரண்டின் மீது மோதியதில் அனிஷ் குர்தியா மற்றும் அஷ்வினி கோஸ்டா என்ற இருவர் உயிரிழந்தனர்.
இருப்பினும் இந்த வழக்கில் அடுத்த நாளே அந்தச் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திர தங்கேகர், “இந்த வழக்கை போலீசார் தவறாக வழி நடத்தியதாகவும், அதற்காக லஞ்சம் வாங்கியதாகவும்" கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், அந்தச் சிறுவனை குற்றவாளி என்று குறிப்பிட்ட அவர், அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சரும், முதல்வரும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், இதுபோன்ற 18 வயது நிரம்பாத மைனர் சிறார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட விதிகள் என்ன இருக்கிறது?
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்க என்ன சட்ட விதிகள் உள்ளன?
இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் மைனர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டால், சிறார் நீதிச் சட்டம் - 2015இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் அபாரதமோ அல்லது தண்டனைகளோ அவர்களுக்கு வழங்கப்படும்.
நீதிமன்றம் அந்த சிறாருக்கு சிறைத் தண்டனையும் வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, இந்த தண்டனை மேலும் அதிகரிக்கலாம்.
அந்த வகையில் புனேவில் மது அருந்திவிட்டு விலையுயர்ந்த கார் மூலம் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, அந்தச் சிறுவன் மீது தண்டனை சட்டப்பிரிவுகள் 304, 337, 338, 427, 279 ஆகியவற்றின் கீழ் புனே காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
ஆனால், இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பிரிவுகளும்கூட ஜாமீன் கிடைக்கும் பிரிவுகள்தான். குற்றம் சாட்டப்பட்ட நபர் குடிபோதையில் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும்.
பெற்றோர் மீது வழக்கு பதிவது ஏன்?
இந்த வழக்கில் குற்றவாளி மைனர் என்பதால், அவரை கார் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை சத்ரபதி ஷம்பாஜி நகரில் (ஔரங்காபாத்) கைது செய்யப்பட்டார். சிறார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்- 2015இன் அடிப்படையில் அந்தச் சிறுவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ், தங்களது 18 வயது நிரம்பாத பிள்ளைகள் செய்த குற்றத்திற்காக பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். ஏனெனில் குழந்தைகளை பராமரிப்பது பெற்றோரின் முதன்மையான பொறுப்புகளில் ஒன்று. எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கலாம்.
இதுகுறித்து தெளிவாக புரிந்துகொள்வதற்காக வழக்கறிஞர் அசிம் சரோடிடம் பிபிசி பேசியது.
அவர் கூறுகையில், “அந்தச் சிறுவனுக்கு கார் ஓட்ட அனுமதி அளித்த அவரது பெற்றோர்கள் மீதும், மதுபான விடுதியில் அவருக்கு மதுபானம் விற்ற கடை உரிமையாளர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 199Aஇன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது,” என்றார்.
“சிறுவன் ஓட்டிச் சென்ற காரில் நம்பர் பிளேட் இல்லை. எனவே இந்தக் குற்றம் புதிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்படி, 18 வயது நிரம்பாத சிறார்களால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவர்களுடைய பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க முடியும்.”
இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கிசூடு நடத்தி நான்கு குழந்தைகளைக் கொன்ற வழக்கில், அவனது பெற்றோர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மி மிச்சிகனில் உள்ள பள்ளி ஒன்றில், சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். பின்னர், அவனது பெற்றோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மைனர் சிறார்கள் மீது வழக்கு தொடர முடியுமா?
மதுபோதையில் கார் ஓட்டி இருவரின் இறப்புக்குக் காரணமாக இருந்த மைனர் சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்களுக்கான சட்டம், இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் குற்றம் செய்துள்ளவரின் அறிவாற்றலைப் பொறுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் தீவிரமான குற்றங்கள் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, இதுபோன்ற தீவிரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதற்கு முதலில் காவல்துறை சிறார் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுபோன்ற அனுமதி அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படும்.
டிசம்பர் 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகளில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர்.
இந்தச் சட்டத்தின்படி, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)