You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீன சார்பு வேட்பாளர் வெற்றி - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
- எழுதியவர், ஏஜே கோக்ஸ்டெஃப்
- பதவி, பிபிசி நியூஸ்
மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். பதவி விலகும் அதிபர் இப்ராகிம் முகமது சோலி தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார். அதுவரை இப்ராகிம் சோலி தற்காலிக அதிபராக இருப்பார்.
முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் என்று கருதப்படுகிறார். அதேசமயம் இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் வலுப்பெற்றன.
செயல் உத்தி காரணங்களுக்காக சீனாவும் இந்தியாவும் மாலத்தீவில் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்று நம்பப்படுகிறது.
முகமது முய்சுவுக்கு 54 சதவிகித வாக்குகள் கிடைத்தன. தலைநகர் மாலேயின் மேயரான முகமது முய்சு தனது தேர்தல் பிரச்சாரத்தில் 'இந்தியா அவுட்' அதாவது இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் முழக்கத்தை முன்வைத்திருந்தார்.
பதவி விலகும் அதிபர் முகமது சோலி, இந்தியாவுடனான வலுவான உறவை ஆதரிப்பவராகக் கருதப்படுகிறார்.
61 வயதான இப்ராஹிம் 2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய இப்ராஹிம் சோலி தனது பதவிக்காலத்தில் 'இந்தியா முதலில்' அதாவது இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்தினார்.
மாலத்தீவுக்கு ஏற்கனவே இந்தியாவுடன் கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. மாலத்தீவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பராமரித்து வருவதாக நம்பப்படுகிறது.
சீனாவுக்கு மாலத்தீவு ஏன் முக்கியமானது?
அதேசமயம் 45 வயதான முகமது முய்சு முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர். சீனாவுடனான நல்லுறவுக்கு அவர் ஆதரவாக உள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அமைந்துள்ள இடம் செயல் உத்தி ரீதியாக மிகவும் முக்கியமானது. சீனா தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. மாலத்தீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மாலத்தீவு வழியாகவே செல்கிறது. இதையும் பாதுகாக்க சீனா விரும்புகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மாலத்தீவுக்கு இந்தியா இரண்டு ஹெலிகாப்டர்களையும் ஒரு சிறிய விமானத்தையும் வழங்கியுள்ளது. 75 இந்திய ராணுவ அதிகாரிகள் மாலத்தீவில் வசித்து வருவதாகவும், இந்திய விமானங்களை இயக்கி பராமரிப்பதாகவும் 2021 ஆம் ஆண்டில் மாலத்தீவு பாதுகாப்புப் படை கூறியது.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா அவுட்’ பிரசாரம்
இதற்குப் பிறகுதான் எதிர்க்கட்சிகள் நாட்டில் 'இந்தியா அவுட்' பிரசாரத்தைத் தொடங்கின. மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை திருப்பி அனுப்பும்படி கோரின.
இப்ராகிம் சோலிக்கு முன், முற்போக்குக் கட்சியின் (பிபிஎம்) அப்துல்லா யாமீன், 2013 முதல் 2018 வரை மாலத்தீவு அதிபராக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் மாலத்தீவு சீனாவுடன் நெருக்கமாகி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் 'பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி'யின் ஒரு பகுதியாகவும் ஆனது.
யாமீன் தற்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் உள்ளார். 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் அனுபவித்து வருகிறார். அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பிபிஎம் ஆதரவாளர்கள் முகமது முய்சுவின் வீட்டிற்கு வெளியே கூடி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
முகமது முய்சு யார்?
1978 இல் பிறந்த முகமது முய்சு, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2012 இல் அரசியலுக்கு வந்த அவர் அமைச்சரானார்.
யாமீன் ஆட்சிக்கு வந்த போதும் முய்சு தனது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தார். மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் 200 மில்லியன் டாலர் செலவிலான பாலம் உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார். விமான நிலையம் மற்றொரு தீவில் அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், அவர் மாலே மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் பிபிஎம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
சீனாவின் கடன் மற்றும் முதலீடு
சீனாவிடம் இருந்து மாலத்தீவு பெருமளவு கடன் வாங்கியுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலமும் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் மாலத்தீவு தனது தீவுகளில் ஒன்றை சீனாவிற்கு 50 ஆண்டுகளுக்கு வெறும் 4 மில்லியன் டாலர்களுக்கு குத்தகைக்கு அளித்தது. சீனாவின் 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' திட்டத்திற்கு மாலத்தீவு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.
மாலத்தீவுகள் சீனாவிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர் கடனை பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மாலத்தீவுகளில் உள் கட்டமைப்பு திட்டங்களில் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது.
அதிபர் தேர்தலில் முய்சுவின் வெற்றி மாலத்தீவை சீனாவுடன் மேலும் நெருங்க வைக்கும். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் மாலத்தீவுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் முஸ்தஃபா கமால் பாஷா பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசுகையில், “இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாலத்தீவு உடனடியாக சீனாவுடன் நெருங்காது, இந்தியாவும் அங்கு முதலீடு செய்துள்ளது. மாலத்தீவால் அதை புறக்கணிக்க முடியாது,” என்றார்.
'இந்தியா அவுட்' என்ற கோஷத்தை முய்சு எழுப்பியிருந்தார். இது பற்றிப் பேசிய பேராசிரியர் பாஷா, "மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை திருப்பி அனுப்ப அவர் விரும்புகிறார். ஆனால் இந்திய முதலீடுகள் அங்கேயே இருக்கும். இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது அவருடைய தேர்தல் வாக்குறுதியும் கூட. ஆனால் மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கு உடனடியாக குறையும் என்று சொல்ல முடியாது,” என்று குறிப்பிட்டார்.
மாலத்தீவில் இந்தியாவின் முதலீடு
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்கள் மற்றும் உதவிகளை வழங்கியதன் மூலம் சீன முதலீட்டிற்கு இணையான தொகையை வழங்க இந்தியாவும் முயற்சித்தது. ஆனால் மாலத்தீவில் உள்ள பலர் இந்தியாவின் நோக்கத்தை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தியா அங்கு மறைமுகமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இமயமலை எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக மாலத்தீவு பாதிக்கப்படலாம் என்பதும் அவர்களது இரண்டாவது கவலை.
"இந்தியா உட்பட எந்த நாட்டுடனும் வலுவான செயல் உத்தி உறவுகளை வைத்திருக்கக் கூடாது என்ற வலுவான உணர்வு மாலத்தீவில் உள்ளது" என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் மாலத்தீவு விவகாரங்களின் நிபுணரான அஸீம் ஜஹீர் கூறுகிறார்.
மாலத்தீவின் செயல் உத்தி நிலை
இந்தியப் பெருங்கடலில் தங்கள் கடற்படை இருப்பை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் விரும்புகின்றன. மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகள் செயல் உத்தி ரீதியில் முக்கியமானவை. இந்தியா மற்றும் சீனாவுடன் 'பேரம்' பேச இது அவர்களுக்கு உதவுகிறது.
"சீனா வெளிப்படையாக இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரிக்க விரும்புகிறது. மாலத்தீவுகள் மீது அதன் கண்கள் உள்ளன. மாலத்தீவில் தனது கடற்படை இருப்பை நிறுவ முடிந்தால் அது குவாதருக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் அதன் இரண்டாவது தளமாக இருக்கும்,” என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.
"இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற சிறிய நாடுகள் தங்களின் செயல் உத்தி நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றன. அவ்வப்போது தனது ஆதரவை மாற்றிக் கொள்கின்றன. மாலத்தீவில் சீனாவுக்கு ஆதரவான முய்சுவின் வெற்றியால் சீனா பயனடையலாம். ஆனால் அங்கு இந்தியாவின் செல்வாக்கு உடனே குறையாது." என்று அவர் குறிப்பிட்டார்.
"மாலத்தீவில் இந்தியா பெரும் முதலீடு செய்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை மாலத்தீவு அரசு திருப்பி அனுப்பினாலும், இந்தியாவின் முதலீடுகள் அங்கேயே இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் இந்தியா - சீனா இடையே சமநிலையை பராமரிக்க மாலத்தீவு முயற்சிக்கும்,” என்று பேராசிரியர் பாஷா தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)