தமிழ்நாட்டில் மலையாள படங்கள் வரவேற்பு பெறும் போக்கு எப்போது தொடங்கியது?

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Anwar Rasheed Entertainments

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைக் குறித்து பேசும்போது, பலரும் குறிப்பிடுவது 'பிரேமம்' திரைப்படத்தை தான். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 'பிரேமம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் மலையாள மொழியிலேயே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அதில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். 2015இல் பிரேமம் வெளியான பிறகு, மேலே குறிப்பிட்ட அனைத்துப் பெயர்களும் தமிழ்நாட்டிலும் பிரபலமாகின.

சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் தமிழ் திரைப்படங்களிலும் கதாநாயகிகளாக அறிமுகமாகினர். ரிச்சி திரைப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்தார்.

ஆனால், மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெறுவது என்பது பிரேமத்தில் தொடங்கிய ஒன்றல்ல. 1987இல், மம்மூட்டி நடிப்பில் வெளியான 'நியூ டெல்லி' எனும் மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது, அதுவும் மொழிமாற்றம் செய்யப்படாமல். குறிப்பாக சென்னையில் மட்டுமல்ல, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும் கூட.

தமிழ்நாட்டில் மலையாள திரைப்படங்கள்

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Jubilee Productions

படக்குறிப்பு, 1987இல், மம்மூட்டி நடிப்பில் வெளியான 'நியூ டெல்லி'

"சென்னையில், 1994 வரை இயங்கிய சஃபையர் சினிமா (Safire), மலையாளத் திரைப்படங்களைத் திரையிடுவதில் தனி கவனம் செலுத்தியது. மம்மூட்டி நடித்த 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' (1988) திரைப்படம் அங்கு கிட்டத்தட்ட இருநூறு நாட்கள் ஓடியது." என்று நினைவுகூர்கிறார் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர், எழுத்தாளர் ஜி.பி.ராமச்சந்திரன்.

இவர், 'சினிமாவும் மலையாளியுடே ஜீவிதவும்', 'மலையாள சினிமா – தேசம், பாஷா, சம்ஸ்காரம்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"மதுரை, திருச்சி, நாகர்கோவில் போன்ற பல தமிழ்நாடு நகரங்களில் மலையாள திரைப்படங்கள் வெளியாகும், ஆனால் இன்று ஒதுக்கப்படும் அளவுக்கு அப்போது திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை" என்றும் ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

ஆரம்ப காலங்களில் மலையாளத் திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டுடியோக்களில் தான் தயாரிக்கப்பட்டன, அதுதான் மலையாளத் திரைத்துறைக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவின் தொடக்கம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"முதலில், கேரளாவில் ஸ்டுடியோக்கள் இருக்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கூட பின்னரே தோன்றின. இதன் விளைவாக, ஆரம்பகால மலையாள சினிமாக்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அமைந்திருந்த ஸ்டுடியோக்களிலேயே தயாரிக்கப்பட்டது. குறிப்பாக, கோடம்பாக்கம் மலையாளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகச் செயல்பட்டது." என்கிறார் ராமச்சந்திரன்.

பல ஆரம்பகால மலையாளத் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் (மெட்ராஸ்) தான் நீண்ட காலம் வசித்தனர் என்று குறிப்பிடும் அவர், "பி. பாஸ்கரன் மற்றும் பிரேம் நசீர் முதல் மம்மூட்டி மற்றும் மோகன்லால் வரை, மலையாள சினிமாவின் முன்னணி ஆளுமைகள் பலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம்" என்கிறார்.

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Sunitha Productions

படக்குறிப்பு, மம்மூட்டி நடிப்பில் 1988இல் வெளியான 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு'

"என் சிறுவயதில் திருநெல்வேலி போன்ற நகரங்களில் கிலுக்கம் (1991), அங்கிள் பன் (1991), சர்கம் (1992), என பல திரைப்படங்களை தந்தையுடன் திரையரங்கிற்கு சென்று பார்த்த அனுபவம் உண்டு. அவை மொழிமாற்றம் செய்யப்படாமல் தான் வெளியாகும்" என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா. தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

அதேபோல, "திரைப்பட விழாக்களுக்கு தொடர்ந்து செல்பவர்கள் இடையேயும் மலையாள திரைப்படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்தன. எம்டி. வாசுதேவன் நாயர், சிபி மலையில், ஸ்ரீனிவாசன் போன்ற பல எழுத்தாளர்களின் கைகளில் மலையாள சினிமா இருந்ததே இதற்கு காரணம்" என்கிறார்.

இதே கருத்தை முன்வைக்கும் திரைப்பட விமர்சகர் அவினாஷ் ராமச்சந்திரன், "மம்மூட்டியின் 'நியூ டெல்லி' திரைப்படத்திற்கு பல ஆண்டுகள் முன்பே வெளியான செம்மீன் (1965) திரைப்படம் கூட தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது" என்கிறார்.

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Kanmani Films

படக்குறிப்பு, 1965-இல் வெளியான செம்மீன் திரைப்படம்

"இடையில் சில ஆண்டுகள் மலையாள சினிமாவும் 'கமர்ஷியல்' பக்கம் திரும்பியது. 2000-க்குப் பிறகு, மம்மூட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் தங்களை 'மாஸ் ஹீரோக்களாக' திரையில் காட்டுவதை விரும்பினார்கள். ஆனால், அந்த சினிமாக்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை." என்கிறார் ஜா. தீபா.

"ஏனென்றால், தமிழில் கமர்ஷியல் திரைப்படங்கள் அதிகம் வெளியாகும். எனவே அதேபோன்ற கதையம்சம் கொண்ட மலையாள திரைப்படங்களை மக்கள் பெரிதாக விரும்பவில்லை. ஆனால், இந்த நிலைமை 2010-க்குப் பிறகு மாறியது. அதன் பிறகே மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் கவனம் பெறுவது அதிகரித்தது. ஓடிடி தளங்களின் வரவும் இதற்கு முக்கிய காரணம்".

இங்கு ஜா.தீபா குறிப்பிடுவது போலவே 2010-க்குப் பிறகு வந்த திரைப்படங்கள் மலையாள சினிமாவுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தன என்பதை மலையாள திரைத்துறையினரும் குறிப்பிடுகிறார்கள்.

"டிராஃபிக், சால்ட் அண்ட் பெப்பர், உஸ்தாத் ஹோட்டல், சாப்பா குரிஷு, நார்த் 24 காதம், ஆமென், சார்லி, மகேஷிண்டே பிரதிகாரம் என மலையாள சினிமாவில் புதுமையான கதைக்களங்களில் திரைப்படங்கள் வெளியாகின." என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த தாரிக் அகமது. இவர் மலையாள சினிமாவில் துணை இயக்குநராகவும், துணை நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Finding Cinema

படக்குறிப்பு, துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் 2015இல் வெளியான 'சார்லி', தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் தான்.

"2010-க்குப் பிறகு மலையாள சினிமாவில் தோன்றிய புதிய அலையில் தான் அமல் நீரத், ஆஷிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், சியாம் புஷ்கரன், போன்ற படைப்பாளிகளும், ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், நித்யா மேனன், பார்வதி போன்ற நடிகர்களும் வந்தார்கள்."

"2016 காலகட்டத்தில் நான் வேலைக்காக சென்னை வந்தபோது, இங்கு பலரும் மலையாள திரைப்படங்களை ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். குறிப்பாக அப்போது நிவின் பாலிக்கு இருந்த வரவேற்பு, ஒரு தமிழ் நடிகருக்கான வரவேற்புக்கு சற்றும் குறைவில்லாதது" என்று கூறுகிறார் தாரிக்.

அதேபோல, தமிழின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு மலையாளத்தில் பெரும் வரவேற்பு இருப்பதைக் குறிப்பிடும் தாரிக், "தமிழ்நாட்டில் எப்படி நல்ல கதையம்சம் கொண்ட மலையாள திரைப்படங்களை ரசிக்கிறார்களோ, அதேபோல கேரளாவில் நல்ல கமர்ஷியல் தமிழ் திரைப்படங்களை ரசிக்கிறார்கள். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவுக்கு கேரளாவில் இருக்கும் ரசிகர்கள் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை" என்கிறார்.

மலையாளத் திரைப்படங்கள், கோலிவுட், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Parava Films

படக்குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் (2024) திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றி பலரது கவனத்தை ஈர்த்தது.

கேரளாவில் தமிழ் திரைப்படங்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

"இதே திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி இங்கு (தமிழ்நாட்டில்) வந்திருந்தால், 'ஃபீல்-குட்' என கொண்டாடியிருப்பார்கள்"- இத்தகைய கருத்தை பல முறை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக 'ஃபீல்-குட்' என்ற வகையில் வரக்கூடிய ஒரு தமிழ் திரைப்படம் தமிழ்நாட்டில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை எனும்போது, இந்த கருத்து எழும்.

'கேரள திரைப்படங்களைக் கொண்டாடுகிறோம், ஆனால் ஏன் நம் திரைப்படங்களைக் கண்டுகொள்வதில்லை?' என்ற கேள்வி பலமுறை முன்வைக்கப்படுகிறது. 2024இல் 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என அடுத்தடுத்து மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெற்றபோது இந்த கருத்தை தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் சிலரே முன்வைத்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேசமயம், தமிழ் திரைப்படங்களுக்கு கேரளாவில் மலையாளத் திரைப்படங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார் மலையாள சினிமா விமர்சகர் ஜி.பி.ராமச்சந்திரன்.

தமிழ்நாட்டு சந்தையின் ஒரு நீட்சியாகத் தான் கேரள மாநிலம் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தமிழ் திரைப்படங்களும் கேரளாவின் முக்கிய மையங்களில் வெளியிடப்படுகின்றன என்கிறார் அவர்.

மெய்யழகன் திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார், "மெய்யழகன் படத்தை கேரளாவில் மக்கள் கொண்டாடினார்கள். அந்த படத்திற்கு தமிழ்நாட்டில் கூட அத்தகைய வரவேற்பு கிடைக்கவில்லை." என்று ஒரு நேர்காணலில் கூறியது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்கள் கேரளாவில் வெளியாகும் போது, ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படங்கள் கூட நிறுத்தப்பட்டு, அந்தத் திரையரங்குகள் இந்த தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு" என கூறுகிறார் ஜி.பி.ராமச்சந்திரன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு