இந்தியாவின் டாப்3 வீரர்கள் இடது கை பேட்டர்கள் என்பதால் தென் ஆப்ரிக்கா இந்த உத்தியை கடைபிடிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் சூப்பர் 8 ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 22) நடக்றது. கடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மீண்டும் இந்தப் பெரிய அரங்கில் மோதுவதால் இந்தப் போட்டியின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளையுமே வென்றிருக்கின்றன. இந்த அணிகள் இடம்பெற்றிருக்கும் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதில் வெஸ்ட் இண்டீசும் 4 போட்டிகளையுமே வென்றிருக்கிறது. ஜிம்பாப்வே 3 போட்டிகளை வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இப்படி அந்தப் பிரிவில் இருக்கும் அனைத்து அணிகளுமே தோல்வியே சந்திக்காதவை. இந்த சுற்றில் ஒவ்வொரு வெற்றியுமே அணிகளுக்கு முக்கியமானதாக அமையும்.
இன்றைய இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம், இரு அணிகளும் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன என்பது போன்ற விஷயங்களை அலசுவோம்.
இந்தியாவின் பிரச்னைகள்
இந்திய அணியைப் பொறுத்தவரை 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்தாலும், ஒருசில கவலை தரும் விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோரின் ஃபார்ம், ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் தடுமாற்றம், ஃபீல்டிங்கில் கேட்ச்களை கோட்டை விடுவது ஆகியவை குறித்து ரசிகர்கள், நிபுணர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
அபிஷேக் ஷர்மா தான் விளையாடிய 3 போட்டிகளிலுமே டக் அவுட் ஆகியிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் அவர் இன்னும் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
அபிஷேக் ஷர்மாவுக்குப் பதில் சாம்சன் ஆடவேண்டுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், சனிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேப்டன் சூர்யகுமார், அபிஷேக் ஷர்மாவுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டிய நேரம் இது என்றார்.
"கடந்த ஆண்டு அபிஷேக் ஷர்மா அனைத்தையும் செய்து காட்டினார், இப்போது அவருக்கு ஆதரவாக நிற்பது நமது முறை" என்று சூர்யகுமார் கூறினார். அதனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், திலக் வர்மா ஓரளவு ரன் சேர்த்தாலும் அவர் மிகவும் மெதுவாக தன் இன்னிங்ஸை கட்டமைக்கிறார். 4 போட்டிகளில் 106 ரன்கள் சேர்த்திருக்கும் அவர் 120.45 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடியிருக்கிறார். பவர்பிளேவுக்குப் பிறகு அவரால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை.
ஆனால், இந்திய கேப்டன் சூர்யகுமார், திலக் வர்மாவையும் ஆதரித்தே பேசியிருக்கிறார். அவரைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாகவும் சூர்யகுமார் கூறினார்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், ஃபீல்டிங்கில் இந்திய அணி நிச்சயம் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறினார். கடந்த 6 மாதங்களாகவே இதைப் பற்றி நிறைய பேசப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
டாப்3 வீரர்கள் இடது கை பேட்டர் என்பதால் தென் ஆப்ரிக்கா இந்த உத்தியை கடைபிடிக்குமா?
தனிப்பட்ட முறையில் அபிஷேக், திலக் தடுமாறுவது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்திய அணி ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது.
கடைசி 2 போட்டிகளிலும் அபிஷேக் ஷர்மா ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆட்டமிழந்திருக்கிறார். இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தாலும், கடைசி 3 போட்டிகளிலும் ஆஃப் ஸ்பின்னர்களிடமே தன் விக்கெட்டை இழந்திருக்கிறார்.
டாப் 3 வீரர்கள் எல்லோருமே இடது கை பேட்டர்களாக இருப்பதால் எதிரணிகள் ஆட்டத்தை ஆஃப் ஸ்பின்னர்களை வைத்துத் தொடங்கிவிடுகிறார்கள். பாகிஸ்தானும், நெதர்லாந்தும் அதைத்தான் செய்தன. அதனால் தென்னாப்பிரிக்காவும் அந்த உத்தியைக் கையில் எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
கேப்டன் எய்டன் மார்க்ரம் இந்திய ஓப்பனர்களுக்கு எதிராக தானே முதல் ஓவரை வீச வரலாம். இந்திய ஆடுகளங்களில் பந்துவீசிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அது நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதேசமயம், மார்க்ரம் தவிர்த்து வேறு முன்னணி ஆஃப் ஸ்பின்னர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இல்லை. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆஃப் ஸ்பின் வீசுவார் என்றாலும், அவர் சர்வதேச அரங்கில் அதிகம் பந்துவீசியதில்லை.
அதனால், ஒரு முனையில் ஆஃப் ஸ்பின், மறுமுனையில் வேகப்பந்துவீச்சு என மாற்றிமாற்றி மார்க்ரம் பயன்படுத்தக்கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய பேட்டர்கள் மார்க்ரம்மை டிஃபன்ஸிவாக ஆடிவிட்டு, வேகப்பந்து வீச்சாளரை குறி வைத்து விளையாடக்கூடும். அதனால், பவர்பிளேவில் ஒரு நல்ல யுத்தத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவின் வேகம் இந்தியாவுக்கு சாதகமா?
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் பங்கர் ஒரு முக்கியமான விஷயத்தை முன்வைத்தார். "தென்னாப்பிரிக்காவின் வேகம் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமையலாம்" என்று அவர் கூறினார்.
இந்திய பேட்டர்கள் வேகப்பந்துவீச்சை அதிகம் விரும்புபவர்கள். பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்தியே அவர்கள் பெரிய ஷாட்கள் அடிப்பார்கள். இந்த உலகக் கோப்பையில் அந்த வேகம் அவர்களுக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றும் அதனால்தான் அவர்களால் முன்பைப் போல் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை என்றும் பங்கர் கூறினார்.
இந்தியாவின் பிரிவில் இருந்த நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா போன்ற அணிகளிடம் நல்ல வேகத்தோடு வீசக்கூடிய பௌலர்கள் இல்லை. பாகிஸ்தானும் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது. இந்நிலையில், ஆமதாபாத் போன்ற ஆடுகளத்தில் இந்திய பேட்டர்கள் விரும்பும் அந்த வேகத்தை தென்னாப்பிரிக்க பௌலர்கள் கொடுக்கக்கூடும் என்று பங்கர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க அணியில் ககிஸோ ரபாடா, எய்ன்ரிக் நார்கியா, மார்கோ யான்சன், லுங்கி எங்கிடி போன்ற் பௌலர்கள் நன்கு வேகமாக பந்து வீசக்கூடியவர்கள். அந்த அணியின் பிரதான ஸ்பின்னர்களான கேஷவ் மஹராஜ், ஜார்ஜ் லிண்டா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்கள். இடது கை பேட்டர்கள் நிறைந்த இந்திய அணிக்கு எதிராக அவர்களில் ஒருவரைப் பயன்படுத்தவே தென்னாப்பிரிக்க யோசிக்கும். அதுபோக, மார்க்ரம் மட்டுமே ஸ்பின்னர் என்பதால், எப்படியும் அவர்கள் அந்த அதீத வேகப்பந்துவீச்சாளர்களில் மூவரையாவது பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இது இந்தியாவுக்கு சாதகமாகவும் அமையலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத் மைதானம் எந்த வகையில் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகம்?
தென்னாப்பிரிக்க அணி அவர்களின் 4 குரூப் சுற்றுப் போட்டிகளில் மூன்றை ஆமதாபாத்தில் தான் விளையாடியிருக்கிறது. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அங்குதான் பயிற்சி எடுத்துவருகிறார்கள். அதனால், அந்த மைதானத்தின், ஆடுகளங்களின் தன்மை அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம் என்றும் அது இந்த சூப்பர் 8 போட்டியில் அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன், "தென்னாப்பிரிக்க அணி ஆமதாபாத்திலேயே அதிகம் ஆடியிருப்பதால் அதிகம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் அந்த இடத்துக்கு நன்கு பழகியிருப்பார்கள். இதுபோன்ற பெரிய தொடர்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த அணியின் வீரர்கள் சிலர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடுகிறார்கள் அல்லது சிலர் ஆடியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக அமையலாம்" என்று கூறினார்.

பொதுவாகவே உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு அணி அதிகம் பயணிக்காமல் இருப்பதுவே அவர்களுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படும். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய அணி அவர்களின் அனைத்து போட்டிகளையும் துபையிலேயே விளையாடியது பற்றி நிறைய விவாதங்கள் எழுந்தது இதன் அடிப்படையில் தான்.
இங்கு கனடாவுக்கு எதிராக ஆடிய போட்டியில் 213 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 187 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கானிஸ்தான் போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் அந்த அணி எளிதாகவே வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் தொடரில் அதிக ரன்ரேட் கொண்ட மைதானங்களுள் ஒன்றாக ஆமதாபாத் இருக்கிறது. அதிரடிக்குப் பெயர்போன தென்னாப்பிரிக்க பேட்டர்களும் இங்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக கேப்டன் மார்க்ரம் நல்ல தொடக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால், பரிச்சயமான மைதானமும், வீரர்களின் சிறந்த ஃபார்மும் தென்னாப்பிரிக்காவுக்குக் கைகொடுக்கலாம்.
மறுபக்கம், இந்த ஆமதாபாத் மைதானத்தில் தான் இந்திய அணியும் தங்கள் கடைசி லீக் போட்டியை விளையாடியது. அதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வருண் சக்கரவர்த்தியை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் 9 விக்கெட் எடுத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு அவர் மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. ஏனெனில், அந்த அணிக்கு எதிராக அவர் எப்போதுமே சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 22 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதுவும் 11.36 என்ற சராசரியில். அந்த 8 போட்டிகளிலுமே அவர் குறைந்தபட்சம் இரண்டு விக்கெட்டுகளாவது வீழ்த்தியிருக்கிறார்.
நல்ல ஃபார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம்மை அவர் 6 டி20 போட்டிகளில் 4 முறை (கிரிக்மெட்ரிக் தரவுகளின்படி) வெளியேற்றியிருக்கிறார்.
ஆமதாபாத்திலும் வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தன் ஆதிக்கத்தைத் தொடரலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












