வான்வெளியை மூடுவதால் சிக்கலில் பாகிஸ்தான் - திணறலில் தேசிய விமான நிறுவனம்

    • எழுதியவர், தேவினா குப்தா
    • பதவி, பிபிசிக்காக

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நிதி நிலைமை நன்றாக இல்லை.

அத்துடன், தெற்காசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள், தனியார்மயமாக்கலை முன்னெடுத்தாலும் அது தோல்வியடைந்தது மற்றும் நிதி சிக்கல்கள் என பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் பிரச்னைகள் மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது.

இந்திய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் சில முடிவுகளை எடுத்தது. அதில் ஒன்றுதான், இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தானின் வான்வெளியை மூடுவது என்ற முடிவாகும். இந்தத் தடையும் அந்நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

வான்வெளியை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதால், இனி இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி பிற நாடுகளுக்கு பறக்க முடியாது. பாகிஸ்தானின் வான்வெளி பயன்பாட்டுத் தடையை அடுத்து, இந்தியாவும் அதேபோன்ற தடையை விதித்து, பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிவிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராஜீயப் போர், இரு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் கடுமையான பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

"இந்தியா விதித்திருக்கும் வான்வெளி பயன்பாட்டுத் தடைக்குப் பிறகு, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், சர்வதேச பயணங்களை சீனா வழியாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இது இந்த விமானங்களின் பயண நேரத்தை அதிகரிக்கும். அத்துடன், இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கான விமான பறப்புகளை பாங்காக்கிற்குத் திருப்புவது நட்டத்தை ஏற்படுத்தும் விமான பறப்பாக மாறும்" என்று பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துப் பொருளாதார நிபுணரும் டெயில்விண்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் தலைவருமான முகமது அப்சர் மாலிக் கூறுகிறார்.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) தரவுகளின்படி, இந்தியாவின் வான்வெளி பயன்பாட்டுத் தடையானது, பாகிஸ்தான் விமான நிறுவனத்திற்கு மலேசியா மற்றும் தென் கொரியாவுக்கான விமான பறப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம், ஆனால் வருவாய் இழப்பு உட்பட பல்வேறு விசயங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாகிஸ்தானுக்கு வந்து செல்லும் விமானங்களின் வழக்கமான பாதையை மாற்றுவதால், பயண நேரம் அதிகரிப்பதுடன், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும்.

வான்வெளிக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதால் பொருளாதார ரீதியில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனங்கள் பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

2019 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் பாலகோட் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது, இந்திய விமானங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தான் மூடியது.

"கடந்த முறை பாகிஸ்தான் இந்திய விமான நிறுவனங்களுக்கு தனது வான்வெளியை மூடியபோது, 45 முதல் 50 மில்லியன் டாலர்கள் வரை வருவாய் இழப்பை சந்தித்தது" என்று குரூப் கேப்டன் (ஓய்வு பெற்ற) மற்றும் 'Centre for Air Power Studies' அமைப்பின் மூத்த பேராசிரியர் டாக்டர் தினேஷ் குமார் பாண்டே கூறுகிறார்.

"ஒரு சர்வதேச விமானம் மற்றொரு நாட்டின் வழியாக பறக்கும்போது, வான்வெளியை பயன்படுத்துவதற்காக அந்த நாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது ஓவர்ஃப்ளைட் கட்டணம் (Overflight Fee) என்று அழைக்கப்படுகிறது."

"பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால், இந்தியாவிற்கான பறப்புகளுக்காக சர்வதேச விமானங்கள் கொடுத்து வந்த கட்டணங்கள் கிடைக்கவில்லை என்பதால் பாகிஸ்தானுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல் தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியிலான இழப்பை ஏற்படுத்தும்" என்று அவர் சொல்கிறார்.

இருந்தபோதிலும், இந்த வான்வெளி தகராறு என்பது, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் நெருக்கடியின் ஒரேயொரு பிரச்னையல்ல.

வணிக மாதிரி பற்றிய கேள்விகள்

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் நீண்ட காலமாக அரசாங்கத்தின் ஆதரவை நம்பியே இயங்கி வருகிறது. அதன் கடன் அதிகரித்து வரும் அதே சமயத்தில், அதன் விமானங்களும் பழையதாகி வருவது விமானச் சந்தையில் போட்டியிடும் அதன் திறனை குறைத்துவிட்டது.

முகமது அப்சர் மாலிக் கூறுகையில், "அரசு விமான நிறுவனங்கள் போட்டிகள் நிறைந்த சந்தையில் சிறப்பாக செயல்படுவதில்லை. பொதுவாக, அவர்களின் சேவை திறமையின்மையை பிரதிபலிக்கிறது. தேவைக்கு அதிகமான அளவிலான ஊழியர்கள் இருப்பதுடன், தனியார் விமான நிறுவன பணியாளர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை.

2023 ஆம் ஆண்டு மலேசியாவில் பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் போயிங் 777 பறிமுதல் செய்யப்பட்டபோது பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் போயிங் 777 விமானம் பறிமுதல் செய்யப்பட்ட அதே சமயத்தில், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (PSO), விமான நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2024 டிசம்பர் மாதத்தில், விமானங்கள் பறக்கத் தேவையான உபகரணங்கள் இல்லாததால், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் 34 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் சிறிய ஏடிஆர் (ATR) விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அதன் ஐந்து விமானங்களில் இரண்டு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார்மயமாக்கலில் உள்ள சிக்கல்கள்

பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்ட காலமாக நெருக்கடியில் உள்ளது. நெருக்கடிகளை சமாளிக்க சர்வதேச உதவியை அணுகிய பாகிஸ்தான், ஏழு பில்லியன் டாலர் மதிப்பிலான பிணை எடுப்புப் பொதியை கடனாகப் பெற்றது. கடன் நிபந்தனைகளில் ஒன்றாக, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உட்பட நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு விமான நிறுவனத்தை ஏலம் விடும் முயற்சிகளை முன்னெடுத்த பாகிஸ்தான் அரசு, அதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் 60 சதவீத பங்குகளுக்கு 300 மில்லியன் டாலர்கள் (85 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் விமான நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான ப்ளூ வேர்ல்ட் சிட்டி மட்டுமே முன்வந்தது. அதுவும் 36 மில்லியன் டாலர்கள் என்ற விலை மட்டுமே ஏலத்தொகையாக கோரப்பட்டது.

கோரப்பட்டத் தொகை குறைவாக இருந்ததால், ஏலம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை என்று தெரிகிறது. கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்பவில்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.

"அரசு விமான நிறுவனத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு 40 சதவீத பங்குகளும், நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடும் இருந்திருந்தால், அதை வாங்கும் தனியார் நிறுவனங்கள் தற்போது இருக்கும் பிரச்னைகளையும், தாமதங்களையும் தொடர்ந்து சந்தித்திக்க வேண்டியிருக்கும். துரிதமாக இயங்க வேண்டிய விமானப் போக்குவரத்துத் துறை இதில் சமரசம் செய்வது கடினம்" என்று மாலிக் தெரிவிக்கிறார்.

பாகிஸ்தான் விமான நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பதால், தனியார்மயமாக்குவதற்கு பணியாளர்கள் தெரிவித்த எதிர்ப்புகளும் போராட்டங்கள் மற்றும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பும், முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்தன.

நம்பிக்கையின் கதிர்

இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் கடனை மறுசீரமைத்து, அதனை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்தது.

எனவே, நிறுவனம் இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக லாபத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டது. 2024 நிதியாண்டில் இந்த விமான நிறுவனத்திற்கு 9.3 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் என்ற அளவில் செயல்பாட்டு லாபம் கிடைத்தது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் வெளியிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவில், "21 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 இல் விமான நிறுவனம் லாபகரமாக மாறியுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

விமான நிறுவனத்தின் நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தொடர்ந்து இந்த நிலைமையை பராமரிப்பது பிஏஐ-விற்கு (PIA) கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தனியார்மயமாக்கல் செயல்முறை இன்னும் மூடப்படவில்லை. அடுத்தகட்ட ஏலம் 2025 ஜூன் 3ம் தேதி வரை திறந்திருக்கும். இந்த ஏலம் விமான நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.

"பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் வாராக் கடன்களை தள்ளுபடி செய்யவும், அதன் கடன் பொறுப்புகளை நீக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இன்றைய போட்டிச் சூழலில், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால், அதற்கு அதிக விலை கிடைக்காது" என்று மாலிக் கூறுகிறார்.

அடுத்து என்ன?

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

தற்போது, பாகிஸ்தானின் அரசாங்க விமான நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு பல காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. அதிலும், அரசியல் மற்றும் முடிவெடுப்பதில் உள்ள குழப்பம் காரணமாக விமான நிறுவனம் செயல்படும் வேகம் குறைந்துள்ளது.

தற்போது நிலவும் பதற்றமான அரசியல் சூழலில், யாராவது தன்னை வாங்கி வான்வெளியில் முழுமையான வேகத்தில் பறக்க வைப்பார்களா என்று எதிர்பார்த்து பாகிஸ்தான் விமான நிறுவனம் காத்திருக்கிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.