வேளாண் கடன், ஓய்வூதியம், அமெரிக்க விசா - புத்தாண்டில் அமலான 5 முக்கிய மாற்றங்கள்

புத்தாண்டு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

இந்த மாற்றங்கள் அன்றாட நிதி பரிவர்த்தனைகள், வாகனங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், ஓய்வூதிய விதிகள், விவசாயிகளுக்கான கடன்கள் மற்றும் வெளிநாட்டு பயணம் தொடர்பான விதிகள் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும்.

இந்த புதிய மாற்றங்கள் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்ன? அவை மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

யுபிஐ பரிவர்த்தனையில் என்ன மாற்றம்?

ஸ்மார்ட்போன் அல்லாமல் சாதாரண கைப்பேசிகளில் இருந்து (உதாரணத்திற்கு பட்டன் கைப்பேசிகள்) யுபிஐ வழியாக நிதி பரிவர்த்தனை செய்யும் பயனர்களுக்கு ஜனவரி 1, 2025 முதல் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, 'யுபிஐ 123 பே' மூலம் அவர்கள் ஒரே நேரத்தில் 10,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த 'யுபிஐ 123 பே' பரிவர்த்தனை முறை சாதாரண கைப்பேசிகளைக் கொண்ட பயனர்கள் மற்றும் யுபிஐ வசதியைப் பயன்படுத்த தேவையான இணைய வசதி இல்லாத பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்பு இந்த வரம்பு ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது. இதற்கான சுற்றறிக்கையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (The National Payments Corporation of India) 2024 அக்டோபரில் வெளியிட்டிருந்தது.

ஓய்வூதியதாரர்களுக்கான விதிகளில் மாற்றங்கள்

ஜனவரி 2025 முதல், இபிஎப்ஓ (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் மூலம் அவர்கள் இப்போது எந்த வங்கி ஏடிஎம்-இல் இருந்தும் ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்ளலாம், இதற்கு கூடுதல் சரிபார்ப்பு செயல்முறைகள் தேவையில்லை.

மத்திய அரசு செப்டம்பர் 4, 2024 அன்று, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கான (1995) மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறைக்கு (சிபிபிஎஸ்- Centralised Pension Payment System) அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

இந்த புதிய முறையின் நோக்கம் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை எளிமைப்படுத்துவதாகும்.

இபிஎப் (EPF) ஓய்வூதியதாரர்கள் இட மாற்றம், வங்கி அல்லது கிளை மாற்றம் போன்ற செயல்முறைகளுக்காக விண்ணப்பிக்க எந்த அலுவலகத்திற்கும் நேரடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்பதையும் சிபிபிஎஸ் உறுதி செய்யும்.

ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊரில் குடியேறும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாற்றம் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும். இந்த முடிவின் மூலம் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

வாகன விலையில் மாற்றங்கள்

பல கார்கள் மற்றும் பிற வாகனங்களின் விலை உயர்வு ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சிறிய ஹேட்ச்பேக் வகை கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல வாகனங்கள் அடங்கும்.

உற்பத்தி மற்றும் பிற செலவுகள் அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுசூகி, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் எம்ஜி போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை இரண்டு முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தன.

வேளாண் கடன் தொடர்பான புதிய விதிகள்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல், ரிசர்வ் வங்கி விவசாயிகளுக்கான கடன்களில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இப்போது விவசாயிகள், வங்கிகளில் இருந்து அடமானம் ஏதும் இல்லாமல் (Collateral-Free) ரூ.2 லட்சம் வரை கடன் பெற முடியும்.

முன்பு இத்தகைய கடன்களுக்கான வரம்பு ரூ.1.60 லட்சமாக இருந்தது.

இப்போது, ரூபாய் 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களுக்கு அடமானம் தேவையில்லை.

இந்த மாற்றம் விவசாயிகள் கடன் வாங்குவதை எளிதாக்கும் மற்றும் அதிகரித்து வரும் விவசாய செலவுகளை சமாளிக்க உதவும்.

அமெரிக்கா, தாய்லாந்து விசா விதிகளில் மாற்றங்கள்

ஜனவரி 1, 2025 முதல் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், குடியேற்றக் காரணங்களுக்காக அல்லாத தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, கூடுதல் கட்டணம் இல்லாமல் விசாவுக்கான தூதரகச் சந்திப்பு தேதியை விண்ணப்பதாரர்கள் இனி ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்க முடியும் (Appointment reschedule).

இதற்கு முன்னர், விண்ணப்பதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தங்கள் 'விசாவுக்கான தூதரகச் சந்திப்பை' மூன்று முறை மாற்றியமைக்க முடியும் என்ற விதி இருந்தது.

இப்போது ஒரு விண்ணப்பதாரர், தூதரகச் சந்திப்பிற்கு ஒதுக்கப்பட்ட தேதியை இரண்டாவது முறையாக மாற்றியமைக்க விரும்பினால், அதற்கு புதிதாக விண்ணப்பித்து, விசா கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும்.

விசா தொடர்பான மற்றொரு முக்கியமான மாற்றமாக, ஜனவரி 1, 2025 முதல், தாய்லாந்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-விசா வசதியை அந்நாடு வழங்கத் தொடங்கியுள்ளது.

இப்போது இந்தியர்கள் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் தாய்லாந்து செல்ல விரும்புபவர்கள், தங்கள் விசா செயல்முறையை முழுமையாக ஆன்லைனில் மேற்கொள்ள முடியும்.

தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விசாவுக்காக விண்ணப்பிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)